ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

பவர் கட்டால் நடந்த பாலியல் பலாத்காரம் !!


அதிகாரபூர்வ மின்வெட்டால், இருளில் மூழ்கிக் கிடக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதன் மூலம் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை கேள்விக்குறியாகிவிட்டது. பவர்கட்டைப் பயன்படுத்தி சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திண்டிவனம் மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. அதேபோல் மின்வெட்டால் ஆவேசமடைந்த பா.ம.க. எம்.எல்.ஏ. கலிவரதன் ஆட்கள், மின் ஊழியரைத் தாக்கிய சம்பவமும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் அதிகாரபூர்வ மின்வெட்டு அமல் படுத்தப்பட்டிருப்பதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். நகரப் பகுதியில் இருப்பவர்களாவது பரவாயில்லை. கிராமப்புறத்தில் வசிப்பவர்களின் நிலைமைதான் படுமோசம். மின்வெட்டால் தொழிற்சாலை, வியாபார நிறுவனங்கள், விவசாயம் போன்ற அத்தியாவசியப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு சட்டம் - ஒழுங்குப் பிரச்னையும் தற்போது தலைதூக்கியுள்ளது.
திண்டிவனம் காவேரிப்பாக்கம் பழனி, சத்யா தம்பதி யரின் மூன்று வயது மகள் லாவண்யாதான் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உள்ளாள். கொடூர மனம் படைத்த அந்த கல்நெஞ்சக்காரனைக் கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் அலட்சியம் காட்டியதால், ஆத்திர மடைந்த பொதுமக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் சாலை மறியல் செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டி உள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து பழனியைச் சந்தித்துப் பேசினோம். "எனது மகள் லாவண்யா இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. உடனே குழந்தையைத் தேடினோம். அவளைக் காணவில்லை. பவர்கட்டைப் பயன்படுத்தி யாரோ குழந்தையைக் கடத்திச் சென்று விட்டதை அறிந்து அலறியடித்துக் கொண்டு பல இடங்களிலும் தேடினோம். அப்போது ரயில்வே லைன் முட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது.. உடனே ஓடிச்சென்று பார்த்தபோது லாவண்யாதான் என்பது புரிந்தது. அவளை திண்டிவனம் மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்று பார்த்தபோது, அவளது உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. பிறப்புறுப்பிலும் காயம் இருந்தது. பவர்கட்டைப் பயன்படுத்தி யாரோ ஒரு சண்டாளன் இந்தக் கொடூரத்தைச் செய்திருப்பதைத் தெரிந்துகொண்டோம்.
பாதிக்கப்பட்ட குழந்தையைத் தூக்கிக்கொண்டு திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் கொடுத்தோம். இரவு எட்டு மணிக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்ற எங்களை பதினொரு மணி வரை `என்ன ஏது?' என்றே போலீஸார் விசாரிக்கவில்லை. போலீஸாரின் அலட்சியத்தை அறிந்த எங்கள் பகுதி மக்கள் கொதித்துப் போய் காவல் நிலையம் முன்பு திரண்டனர். டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் கூட்டத்தினரைப் பார்த்து, `இது ஒரு சாதாரண விஷயம். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்' என்று அலட்சியமாகக் கூறி விட்டனர். இந்த வார்த்தையைக் கேட்டு எங்கள் பகுதி மக்கள் டென்ஷன் ஆகிவிட்டனர்.
`இந்தக் காரியத்தைச் செய்த காமுகனைக் கைது செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் மறியல் போராட்டம் நடந்தது. இதன் பின் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், `மறுநாள் காலைக்குள் நடவடிக்கை எடுக்கிறோம்' என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால்தான் போராட்டத்தை வாபஸ் பெற்றோம்'' என்றார் அவர்.இந்தச் சாலை மறியல் நடந்தபோது, அந்த வழியாக சென்னை செல்ல மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி காரில் வந்தார். மறியலில் சிக்கிக்கொண்ட அவரை போலீஸார் புதுவை கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக அனுப்பி வைத்தனர். சாலை மறியலுக்குப் பிறகு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க போலீஸார் துரிதமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில்தான் பவர்கட் காரணமாக மின் ஊழியர் மீது தாக்குதல் நடந்ததாக பிரச்னை எழுந்திருக்கிறது. முகையூர் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ. கலிவரதனின் சொந்த ஊர் வீரசோழபுரம். அந்த ஊர் மக்கள், `மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் எந்த வேலையும் நடக்கவில்லை' என்று எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர். `தொடர் மின்வெட்டுக்குக் காரணம் என்ன?' என்று கேட்க பெரிச்சானூரில் உள்ள துணை மின் நிலையத்துக்கு போன் செய்து பேசியிருக்கிறார் எம்.எல்.ஏ. கலிவரதன். அப்போது பணியில் இருந்த லைன் இன்ஸ்பெக்டர் தனகோட்டிக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் அந்த ஊழியரை எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.
மின் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ. கலிவரதனிடம் கேட்டோம். "வீரசோழபுரம் பகுதி விவசாயிகள் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக என்னிடம் புகார் தெரிவித்தனர். இதனால் நான் மின்வாரிய அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். சம்பந்தப்பட்ட ஊழியர் முறையான பதிலைக் கூறவில்லை. நான் பேசிக்கொண்டே இருக்கும் போது லைனைத் துண்டித்து விட்டார். இது சம்பந்தமாக அவரை நேரில் சந்தித்துக் கேட்டபோது, `நான்தான் அன்று தொலைபேசியில் பேசினேன். அதற்கு என்ன இப்போது? என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசினார்.
`இதைப் பெரிதுபடுத்தாதீர்கள். இவரை மன்னித்து விடுங்கள்' என்று அங்கிருந்த அதிகாரி கூறியதால்தான் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். ஆனால், இந்தச் சம்பவத்தை தி.மு.க.வினர் அரசியல் ஆக்கி விட்டனர். `பா.ம.க. எம்.எல்.ஏ. மற்றும் அவரது கட்சிக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என்று காவல் நிலையத்துக்கே சென்று வற்புறுத்தி உள்ளனர். மக்கள் பிரச்னையைக் கேட்கச் சென்ற எங்கள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். இது அமைச்சர் பொன்முடி தூண்டுதலின் பேரில்தான் நடந்திருக்கிறது.
`ஊழியர் குடிபோதையில் இருந்தார்' என்று நானும் புகார் கொடுத்தேன். ஆனால், அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், எங்கள் கட்சிப் பிரமுகர் சுபாஷை போலீஸார் கைது செய்தனர். இதனால்தான் எங்கள் கட்சிக்காரர்கள் அரகண்டநல்லூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். நடந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அமல்ராஜிடமும் புகார் சொல்லியிருக்கிறேன். ஆனால் சம்பந்தப்பட்ட ஊழியரை இன்னும் சஸ்பெண்ட் செய்யவில்லை. எனது புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்போம்'' என்று ஆவேசமாகக் கூறினார் அவர்

கருத்துகள் இல்லை: