வெள்ளி, 12 செப்டம்பர், 2008

போலி பெட்ரோல் வேண்டுமா..

போலி பெட்ரோல் தயாரித்து, அதை இந்தியன் ஆயில் நிறுவன ஸ்டைலில் ஆயிரக்கணக்கான டீலர்களை அமைத்து புழக்கத்தில் விட்ட மூன்று பேரை நெல்லை போலீஸார் அள்ளியிருக்கிறார்கள். இவர்களின் பின்னணியில் இருப்பவர் சென்னையைச் சேர்ந்த ஒரு பிரமுகர். அவர் பலமான அரசியல் மற்றும் சாதிப் பின்னணியுடன் இருப்பதால் அவர்மீது எப்படி கைவைப்பது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலீஸார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள குறுகால்பேரியைச் சேர்ந்தவர் குமரன். கொஞ்சகாலம் பிழைப்புத் தேடி சென்னையில் காலம் கழித்த இவர், அதன்பின் தென்காசிப் பக்கம் உள்ள ஆய்குடி கிராமத்தில் செட்டிலானார். ஆய்குடியில் பெட்ரோல் பங்க் இல்லை. ஐந்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள தென்காசிக்குப் போய்த்தான் பெட்ரோல் போட்டாக வேண்டும். இதனால் தென்காசி பெட்ரோல் பங்க்கில் இருந்து கேன்களில் பெட்ரோல் வாங்கி விற்கத் தொடங்கியிருக்கிறார் குமரன். வெளிமார்க்கெட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 55 ரூபாய். குமரனிடம் 58 ரூபாய்.
ஆய்குடியில், அண்மையில் புது மோட்டார் சைக்கிள் வாங்கிய சேகர் என்கிற பட்டதாரி இளைஞர், தெரியாத்தனமாக சிலமுறை குமரனிடம் வந்து பெட்ரோல் போட்டிருக்கிறார். மைலேஜ் செக் பண்ணும்போது வண்டி வழக்கத்தை விட ஐந்து கி.மீ. தூரம் குறைவாக ஓடுவது அவருக்குத் தெரிய வந்தது. பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டு ஓட்டும் போது கூடுதலாக 5 கி.மீ. தூரம் கிடைப்பதை அறிந்த அவர், குமரன் கலப்பட பெட்ரோல் விற்கிறார் என்ற முடிவுக்கு வந்து உள்ளூர் போலீஸாரிடம் புகார் செய்தார். போலீஸார் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் `போய்யா வேலையைப் பார்த்துக்கிட்டு' என்று சொல்லிவிட்டனர். இதையடுத்து, எஸ்.பி. தினகரனுக்குப் புகார் அனுப்பினார் சேகர்.`ஆய்குடி பகுதியில் போலி பெட்ரோலா?' என அதிர்ந்து போன எஸ்.பி., இதுபற்றி விசாரிக்க எஸ்.ஐ. சீனிவாசன் தலைமையில் ஸ்பெஷல் டீமை அமைத்திருக்கிறார். அந்தக் குழு கண்ணில் விளக்கெண்ணெய்யை விட்டுக் கொண்டு ஒரு வார காலம் குமரனைக் கண்காணித்து வந்தது. அந்த ஒரு வார காலமும் குமரன் பெட்ரோல் வாங்க பெட்ரோல் பங்க் பக்கமே போகவில்லை. அப்புறம் எப்படி இவர் பெட்ரோல் விற்கிறார்? என போலீஸார் கண்காணித்தபோது, தனியார் பார்சல் சர்வீஸைச் சேர்ந்த ஒரு வேன், பெட்ரோல் பேரல்களைக் கொண்டு வந்து குமரனுக்கு டோர் டெலிவரி செய்திருக்கிறது. அந்தத் தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்துக்குப் போய் போலீஸார் விசாரணை செய்ய, அவ்வளவுதான் குமரனின் சாயம் வெளுத்து விட்டது.
இதுபற்றி விசாரணை அதிகாரிகள் சிலரிடம் நாம் பேசினோம்.
``அந்தத் தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் விசாரித்ததில் குமரனுக்கு வந்தது `நாஃப்தலின்' என்ற ரசாயனப் பொருள் என்பது தெரியவந்தது. இது தோல் தொழிற்சாலைகள், நகச்சாயம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கான மூலப் பொருள். இது சென்னையிலிருந்து குமரனுக்கு அனுப்பப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டோம். அதன் பிறகு குமரனை கோழியை அமுக்குவது போல அமுக்கி விசாரித்தோம். அப்போதுதான் நாஃப்தலினைப் பயன்படுத்தி அவன் பெட்ரோல் தயாரிப்பது தெரிய வந்தது.
நாஃப்தலின் வெள்ளை நிறமாக இருக்கும். அதில் குங்கும கலரில் இருக்கும் ஓர் ஆயில் பொடியைச் சேர்க்க, அது ஒரிஜினல் பெட்ரோலின் நிறத்துக்கு உருமாறும். கூடவே `பெட்ரோல் வாசனைக்காக' ஒரு பேரலுக்கு 5 லிட்டர் ஒரிஜினல் பெட்ரோலையும் சேர்க்கிறார்கள். ஒரு லிட்டர் நாஃப்தலின் விலை 42 ரூபாய். அதன்மூலம் உருவான `பெட்ரோலை' குமரன் 58 ரூபாய்க்கு விற்றிருக்கிறான். ஒரு லிட்டருக்கு 16 ரூபாய் லாபம். ஒரு நாளைக்கு சராசரியாக 210 லிட்டர் விற்பனையாகியிருக்கிறது. நெல்லையின் மேற்குப் பகுதிக்கு குமரனே மெயின் டீலராக இருந்திருக்கிறான். அதோடு கோவில்பட்டிக்கு டீலராக இருந்த குருமூர்த்தி, சாத்தான்குளம் பகுதி `டீலர்' பெரியசாமி ஆகியோரையும் நாங்கள் மடக்கி அவர்களிடம் இருந்தும் மூவாயிரம் லிட்டர் போலி பெட்ரோலைக் கைப்பற்றினோம்.
குமரனுக்கு நாஃப்தலின் அனுப்பி வைக்கும் சென்னை கம்பெனி, போலியாய் ஒரு தோல் தொழிற்சாலை முகவரிக்குப் பில் போட்டு, பில்லின் நகலை மட்டும் கூரியரில் குமரனுக்கு அனுப்புமாம். அந்த பில்லைக் காட்டி குமரன் டெலிவரி எடுப்பது வழக்கம். `அந்த பில்லை மறுபடியும் சென்னைக்கே அனுப்பி விட வேண்டும் என்பது ஸ்டிரிக்டான உத்தரவு' என்று விசாரணையில் குமரன் கூறினான்.
இந்த போலி பெட்ரோல் தயாரிப்பின் பின்னணியில் இருப்பவர் யார் என்று குமரனைக் கேட்டபோது, சொல்ல மறுத்து விட்டான். ஒருநாள் முழுவதும் தோண்டித் துருவி விசாரித்த பிறகுதான் அந்த பிக் ஷாட்டின் பெயரைச் சொன்னான். அந்தப் பெரும்புள்ளியின் பூர்வீகம் கன்னியாகுமரிப் பக்கம் உள்ள ஒரு சின்ன கிராமம். தற்போது சென்னையிலேயே செட்டிலாகி விட்ட அந்த நபர், ஏற்கெனவே போலி பெட்ரோல் தயாரித்து, சென்ற ஆட்சியின்போது உள்ளே போனவர். இப்போது `பெரிய குடும்ப'ப் பெண்மணி ஒருவரது ஆசி இருப்பதால் அத்தாரிட்டியாக அவர் இதே பிஸினஸைச் செய்து வருகிறார். அந்த நபர் அடிக்கடி அவரது சாதிச்சங்க விழாக்களில் தலைகாட்டுபவர் என்பதால் அவரை நெருங்கவே போலீஸ் மேலிடம் யோசிக்கிறது. ஆகவே, மூன்று பேரோடு கதையை முடித்துக் கொண்டோம். இந்தக் கும்பல் நெல்லை மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க, பெட்ரோல் பங்க் இல்லாத இடங்களில் ஆயிரக்கணக்கான நிழல் டீலர்களை நியமித்து போலி பெட்ரோலை விற்பனை செய்திருக்கிறது. இதுபற்றி எண்ணெய் நிறுவனங்களுக்கும் தகவல் கொடுத்திருக்கிறோம்'' என்றனர் அவர்கள்.
`நாஃப்தலின் என்றால் என்ன? அதைப் போட்டால் வண்டிக்கு என்ன ஆகும்?' என, நிலத்தியல் பேராசிரியர் சிவசுப்பிரமணியனிடம் கேட்டோம். ``கச்சா எண்ணெய் எனப்படும் குரூட் ஆயிலிலிருந்து பெட்ரோலைப் பிரித்தெடுக்கும்போது கிடைக்கிற உபபொருள்தான் நாஃப்தலின். பழைய லாரிகளை மண்ணெண்ணெய் ஊற்றி ஓட்டுவதில்லையா? அதுபோல, பெட்ரோலியப் பொருள் என்பதால் நாஃப்தலின் ஊற்றினால்கூட வண்டி ஓடும். ஆனால் கரும்புகை அதிகமாக வரும். தவிர, என்ஜினில் கார்பன் அடைத்து என்ஜின் சீக்கிரமே அவுட்டாகி விடும். சொல்லப்போனால் என்ஜினின் ஆயுள் பாதியாகக் குறைந்து விடும்'' என்றார் அவர்.
எஸ்.பி. தினகரனிடம் பேசினோம். ``நாஃப்தலின் அனுப்பியவர் சென்னையில் இருக்கிறார். இவர்கள் தோல் தொழிற்சாலைக்காக என்று இதை வாங்கித் தான் போலி பெட்ரோல் தயாரித்து விற்கிறார்கள். குமரனிடம் போலி பெட்ரோல் போட்ட வண்டிக்காரர்கள், `மைலேஜ் குறையுது' என்று புகார் சொன்னபோது, `உன் என்ஜினில் கோளாறு இருக்கும்' என்று எகத்தாளமாக குமரன் பதில் சொல்லியிருக்கிறான். இப்போது ஏமாற்றுதல், தமிழக ஸ்பிரிட் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப் போட்டிருக்கிறோம்'' என்றார் அவர் சுருக்கமாக.இது தொடர்பாக, பாரத் பெட்ரோலிய டெரிட்டரி மேலாளர் பிரபுராயிடம் பேசினோம். ``நாஃப்தலின் கலந்த போலி பெட்ரோலின் நடமாட்டம் 99-க்குமுன் இருந்தது. அதன்பின் நின்றுபோனது. நாஃப்தலின் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காத பொருள். இந்தநிலையில், நாஃப்தலின் கலந்த போலி பெட்ரோல் மீண்டும் தலைகாட்டியிருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. தற்போதுள்ள பெட்ரோல் தட்டுப்பாட்டை வகையாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த போலி பெட்ரோல் மீண்டும் புழக்கத்துக்கு வந்திருக்கலாம்'' என்றார் அவர்.

வீரப்பன் பணம் எங்கே?

வீரப்பன் பணம் எங்கே? இதுதான் அந்தியூரிலிருந்து மைசூர் வரை இருக்கும் மலைவாழ் மக்களின் கேள்வி.

அந்தியூரிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றால் வரிசையாக மலைவாழ் மக்களின் கிராமங்கள். படர்ந்த மலைகளும் அடர்ந்த காடுகளும் சூழ அமைந்திருக்கும் இந்தக் கிராமங்களில் இன்னும் வீரப்பன் பற்றிய பேச்சு குறையவில்லை. சமீபத்திய மழையால் இன்னும் பசுமையாகத் தெரிகின்றன காடுகள். பல வருடங்களாய் இந்தப் பகுதியில் மரங்களுடன் மரங்கள்போல் அதிரடிப்படையினர் நின்று கொண்டிருப்பார்கள். இப்போது அவர்களைக் காணவில்லை. காட்டின் நுழைவாயில் செல்லம்பாளையத்தில் ஒரு சோதனைச் சாவடி இருக்கிறது. அதைக் கடந்து சென்றால் வேறு சோதனைகள் இல்லை.
தாமரைக்கரை கிராம மலைவாழ்மக்கள் `பயிர் திருவிழா' கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இருக்கும் மலையைச் சுற்றி முப்பத்து மூன்று கிராமங்கள் இருக்கின்றன. எல்லாமே வீரப்பனின் பிடியில் இருந்தவை. இந்த ஜனங்கள் இன்றும் வீரப்பனை காட்டுக்காவலன் என்றே சொல்கிறார்கள்.
``அவரு காட்டு ராஜாவா இருந்தாருங்க. அவரை மீறி யாரும் காட்டுக்குள்ள நுழைய முடியாது. சந்தனமரத்தை வெட்டுனாரு, யானையைக் கொன்னு தந்தம் எடுத்தாருனுல்லாம் சொல்வாங்க. உண்மைதாங்க. ஆனா அவரு காட்டை அழிக்கலிங்க. தானும் வாழ்ந்தாரு. காட்டையும் வாழ வச்சாரு. ஆனா இன்னைக்கு ஆளாளுக்கு உள்ள போறாங்க சந்தனமரத்தை வெட்டுறாங்க. எடுத்துட்டுப் போய்ட்டே இருக்கானுங்க. காட்டுல சந்தன மரம்லாம் குறைஞ்சுட்டு வருது'' என்கிறார் கிராமவாசி ஒருவர். ஒரு சந்தனமரம் முழுவதும் வளர்ந்து வாசனை தருவதற்கு இருபத்தைந்திலிருந்து முப்பது வருடங்கள் ஆகுமாம். அதுபோன்ற மரங்களைத்தான் வெட்டுவார்களாம். ஆனால் இப்போது இளம்மரங்களை வெட்டி வருவதால் யாருக்கும் பலனில்லை என்கிறார்கள். காட்டுக்குள் முறிந்து கிடக்கும் இளம் சந்தன மரங்களைப் பார்க்க இயலுகிறது. ஒரு கிலோ சந்தன மரத்தின் விலை மூவாயிரம் ரூபாயாம். நன்றாக விளைந்த மரம் இருநூறு கிலோ இருக்குமாம். ஒரு மரத்தை வெட்டி விற்றால் ஆறு லட்ச ரூபாய் வரை பணம் கிடைக்கும் என்கிறார்கள்.
மலைவாழ் மக்கள் சந்தனக் கணக்கு சொல்லச் சொல்ல நமக்கு மலைப்பாக இருந்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக சந்தன மரங்களையும் யானைத் தந்தங்களையும் விற்று வாழ்ந்த வீரப்பன் எத்தனை பணம் சம்பாதித்திருப்பான்?
அந்தப் பணம் மட்டுமில்லாமல் மேற்குத் தொடர்ச்சி மலை முழுக்க கிரானைட் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளின் பணக்கார முதலாளிகள், வீரப்பனால் தங்கள் குவாரிகளுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்று கோடிக்கணக்கில் பணம் கொடுத்திருக்கிறார்கள்.
இவை தவிர, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் வந்த பணம். இப்படி வீரப்பனுக்கு ஏராளமான கோடிப் பணம் சொந்தம். அந்தப் பணம் எங்கே என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
இந்தக் கேள்விக்கு கிராம மக்கள் பெருவாரியாகச் சொல்லும் பதில், ``பணம் காட்டுக்குள் புதைந்து இருக்கிறது'' என்பது.``தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் பிளாஸ்டிக் உரப்பை களில் இறுக்கமாய் கட்டி காட்டுக்குள் ஆங்காங்கே குறிப்பிட்ட சில இடங்களில் வீரப்பன் புதைத்து வைப்பான். பணத் தேவை வரும்போது அங்கு வந்து எடுத்துப்பான். அவனுக்கும் அவனோட சில கூட்டாளிகளுக்கும் மட்டுமே புதைச்சு வச்சிருக்கிற இடங்களோட அடையாளம் தெரியும்'' என்கிறார் ஒரு பெரியவர்.மாதேஸ்வர மலை, ஊகியம், ஜல்லிபாளையம், எல்லாமலை, ஒகேனக்கல், செங்கபாடி, பெரியதண்டா, சோளகணை, திம்மம், பர்கூர், உத்தி, பவானிசாகர் போன்ற பகுதிகளில்தான் இந்தப் பணம் புதைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
வீரப்பனின் இந்தப் பணத்தைப் பற்றி கிராம மக்களிடம் பல்வேறு கதைகள் பேசப்படுகின்றன. அதில் அதிகம் சொல்லப்படுவது, அப்ரூவரான வீரப்பனின் கூட்டாளிகள், பணம் புதைக்கப்பட்ட இடங்கள் பற்றிய தகவல்களை அதிரடிப்படை வீரர்களிடம் சொல்லிவிட்டதாகவும், அந்த இடங்களைக் கண்டுபிடித்த அதிரடிப் படையினரில் சிலர், பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் ஒரு கதையைச் சொல்கிறார்கள்.
வீரப்பனின் கூட்டாளிகளாய் இருந்து தப்பிய சிலர், பணம் தேவைப்படும்போது காட்டுக்குள் சென்று அந்தப் பணத்தை எடுத்து வருகிறார்கள் என்பது இன்னொரு கதை. இந்த இரண்டைவிட, இன்னொரு முக்கியமான கதையும் உலவுகிறது. வீரப்பனின் இறுதி நாட்களில் அவனுடன் தமிழ்த் தீவிரவாதிகள் எனச் சொல்லப்பட்ட ஒரு கூட்டம் தங்கியிருந்ததாகவும் அவர்கள் மேல் அனுதாபப்பட்ட வீரப்பன், தன்னுடைய பணத்தின் பெரும்பங்கை அவர்களுக்குக் கொடுத்ததாகவும் அவர்கள் அதை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இந்தக் கதைகளை யாரும் உரத்துச் சொல்வதில்லை. நாம் அழுத்திக் கேட்கும்போது அக்கம் பக்கம் பார்த்துச் சொல்கிறார்கள். இன்றும் சில மலைவாழ் மக்கள் காட்டுக்குள் சென்று வீரப்பன் புழங்கிய இடங்களில் பணத்தைத் தேடுவதாகவும், சிலருக்குக் கொஞ்சம் பணம் கிடைத்து அவர்கள் கிராமத்துக்குள்ளே வசதிகளோடு வாழ்வதாகவும் சொல்கிறார்கள்.
வீரப்பன் வாழ்ந்த காட்டில் பணத்தைத் தேடுவது அத்தனை சுலபமில்லை. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் என்று அவன் ஆக்கிரமித்திருந்த வனப்பகுதிகள் மூவாயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல். இதில் பணத்தைத் தேடுவது மவுண்ட்ரோடில் குண்டூசியைச் தொலைத்துவிட்டுத் தேடுவது போல. ஆனால் தொலைத்தது குண்டூசி இல்லை என்பதால், இன்றும் வீரப்பன் காட்டுக்குள் பணம் தேடும் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.
அன்று வீரப்பனைத் தேடினார் கள். இன்று வீரப்பனின் பணத்தைத் தேடுகிறார்கள்..
- திருவேங்கிமலை சரவணன்படங்கள் : ஆர்.சண்முகம்
துப்பாக்கி!
இந்தப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் வினோதமான ஒரு மூங்கில் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். சின்னச் சின்ன மூங்கில் குழாய்கள் எடுத்து, அதற்குள் பட்டாணி சைஸில் இருக்கும் உருண்டைகளை இந்த மூங்கில் குழாய்க்குள் போட்டு பின்புறம் குத்துகிறார்கள். உடனே துப்பாக்கி வெடித்தாற்போல் சத்தம் கிளம்புகிறது. அந்தப் பட்டாணி ஒரு காட்டுமரத்தின் காய். விலங்குகளை விரட்டுவதற்கு உதவுகிறது என்கிறார்கள்.
ஏது பணம்?வீரப்பனின் இறப்புக்குப் பிறகு சில கிராம மக்களின் நிலைமை முன்னேறியிருக்கிறது. பலர் இரண்டு சக்கர வாகனங்களில் ஜாலியாய் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏது திடீர் பணம் என்பது பணமில்லா கிராம மக்களின் கேள்வி. அது வீரப்பனின் பணமா அல்லது வீரப்பனைக் காட்டிக் கொடுக்க அதிரடிப்படையினர் கொடுத்த பணமா என்று கேட்கிறார்கள்.

எந்திரன் -அமெரிக்க ரகசியங்கள்

ரஜினி-ஷங்கர் வெற்றி கூட்டணியின் சீசன்-2 தொடங்கி விட்டது. இங்கல்ல, படுஅமர்க்களமாக அமெரிக்காவில்.
ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடியான இரண்டு பாடல்களுக்கு அமெரிக்காவில் ரஜினியும் ஐஸ்வர்யாவும் ஆட ஆரம்பித்துவிட்டார்கள்! `ஒரு கூடை சன்லைட்' பாடல்போல் இந்த இரண்டு பாடல்களுமே புது பாணியில் இருக்கிறது என்கிறது ரஹ்மான் வட்டாரங்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்காவில்தான் அத்தனை ரகசியங்களும் இருக்கிறது.உலகப் புகழ்பெற்ற காஸ்ட்யூம் டிஸைனரான மேரி-இ வோட், ஸ்டண்ட் மாஸ்டர் யென் வூ பிங்க் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் மாயாஜாலம் காட்டும் ஸ்டேன்வின்ஸ்டன் என ஹாலிவுட் ஜாம்பவான்களுடன் கை கோர்த்திருக்கிறார் ஷங்கர்.ரொம்ப சிம்பிளான கதைதான். விஞ்ஞானியான ரஜினி தனது தீவிரமான சோதனைகள் மூலம் ஒரு ரோபோவை உருவாக்குகிறார். ஒரு மனிதனைப் போலவே இந்த ரோபோ எல்லா விஷயங்களிலும் பட்டையைக் கிளப்புகிறது. ஒரு கட்டத்தில் ரோபோ தனது நல்ல கேரக்டரிலிருந்து மாறி வில்லன் போல அட்டகாசம் செய்ய ஆரம்பிக்கிறது. இதை உருவாக்கிய விஞ்ஞானி ரஜினி, எப்படிச் சமாளித்து வெற்றி பெற்று மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதே கதை. இதில் விஞ்ஞானியும் ரஜினிதான். ரோபோவும் ரஜினிதான். கதை சில வருடங்களுக்கு முன்பே முடிவாகிவிட்டாலும், தற்போது ரஜினியின் இமேஜ் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப திரைக்கதையிலும், வசனங்களிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர்.ரஜினியின் ரோபோ கேரக்டரைப் பொறுத்தவரை பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் நடித்த `பை சென்ட்டெனியல் மேன்' படத்தில் வரும் ரோபோ கேரக்டரைப் போலவே உருவக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய `ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' என்ற படமும் ஷங்கருக்கு இன்ஸ்பிரேஷன்.
`ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸில் தூள்கிளப்பியது அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேன் வின்ஸ்டன் ஸ்டூடியோ. தற்போது இதே நிறுவனம்தான் எந்திரன் ரஜினியின் பரபர ஆக்ஷன் காட்சிகளை ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் மிரட்ட இருக்கிறது.
உலகப் புகழ் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் யென் வூ பிங்க்கின் கால்ஷீட்டை மொத்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள். இன்று உலகளவில் நம்பர் ஒன் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் இவர்தான். ஜாக்கிசானுக்கே வழி காட்டியவர்.ரஜினிக்கு ஸ்பெஷல் பயிற்சியும் அளிக்கத் தயாராகிவிட்டார் யென். அமெரிக்காவில் நடைபெறப்போகும் இந்தப் பயிற்சிகள் ரஜினியின் உடல் வலிமையை மட்டுமல்ல மனவலிமையையும் கூட்டுமாம்.ரோபோ ரஜினியின் காஸ்ட்யூமை வடிவமைக்கப் போவது மற்றொரு ஹாலிவுட் காஸ்ட்யூம் டிஸைனர் மேரி.இ.வோட். இவர்தான் `மென் இன் பிளாக்', `பேட்மேன் ரிட்டர்ன்ஸ்' போன்ற படங்களில் உலகின் கவனத்தைக் கவர்ந்தவர்.
விஞ்ஞானி ரஜினியின் ஸ்டைலான லுக்கிற்கு கியாரண்டி கொடுப்பவர் பாலிவுட்டின் காஸ்ட்யூம் டிஸைனர் மணீஷ் மல்ஹோத்ரா. `சிவாஜி'யில் ரஜினிக்கு காஸ்ட்யூம் டிஸைன் செய்தது இவர்தான். ``இந்த வருடம் வெல்வெட் டைப் காஸ்ட்யூம்களுக்கு வரவேற்பு இருக்கும். அதே போல ஸ்லிம் ஃபிட் உடைகள்தான் இப்ப ட்ரெண்ட்'' என்கிறார் மணீஷ். ஐஸ்வர்யாராயின் உடைகளையும் வடிவமைத்துவிட்டார்களாம். அந்த உடை டிசைன்களை பார்த்த ஐஸ் `வாவ்' என்று சொன்னதாக பாலிவுட் வட்டாரங்கள் சொல்லுகின்றன.
மொத்தத்தில் ரஜினி -ஷங்கர் கூட்டணி மீடியாவின் கவனத்தை மீண்டும் தங்கள் மீது கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. அதனால் இனி கவர் ஸ்டோரிகளுக்கும், குட்டிச் செய்திகளுக்கும் பஞ்ச மிருக்காது..

மகாகவி பாரதி !

வாழ்க்கைக் குறிப்பு

மகாகவி பாரதி- சுப்ரமணிய பாரதி
1882-ம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதி தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.


தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

இலக்கியப் பணி
குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம்
ஆகியன அவர் படைப்புகளில் சில.

பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார்.

சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.அற்புதமான உணர்வுபூர்வமான பாடல்களை பாடி மக்களை உணர்வு பெற செய்தார் .

திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் யானை இவரை கீழே தள்ளி ,பின்னர் வயிற்று போக்கால் காலமானார்

உணர்வு தரும் பின்வரும் பாடல் மிக பிரசித்தி பெற்றது !!

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

தமிழ் மொழியின் முழு வரலாறு !! உங்களுக்காக



தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடி 70 இலட்சம் (77 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[1]
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.[2] திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [3] மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது.