ஞாயிறு, 7 செப்டம்பர், 2008


திரைப்படங்களிலும்,தொலைக்காட்சியிலும் கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துக் கொண்டிருக்கும் நமீதா என்ற செக்ஸ் புயல், கடந்த 3-ம் தேதி தூத்துக்குடியில் மையம் கொண்டு பொது மேடையில் தோன்றி ரசிகர்களைப் புரட்டி எடுத்தது. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி வஞ்சகம் இல்லாமல் பறக்கும் முத்தங்களை அவர் பறக்க விட்டதால் ஆடிப்போனார்கள் ரசிகர்கள்.
நகரச் செயலாளர், மாவட்டச் செயலாளர், தூத்துக்குடி நகர் மன்றத் தலைவர் என்று ஒரு காலத்தில் தூத்துக்குடி அ.தி.மு.க.வில் கொடிகட்டிப் பறந்தவர் இரா.ஹென்றி. இடையில் காங்கிரஸுக்குப் போய் வாழ்க்கையைத் தொலைத்தவர், மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வந்து புது வாழ்க்கையைப் பெற்றுள்ளார். அந்தத் தெம்பில், தூத்துக்குடியை அடுத்துள்ள முத்தையாபுரத்தில் `ஜெபா ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில் நகைக் கடை திறந்துள்ளார். அந்தக் கடையைத் திறக்க வந்தபோதுதான் இங்குள்ள ரசிகர்களை ஒரு வழி பண்ணிவிட்டுச் சென்றிருக்கிறார் நமீதா.
அரசியலில் பரபரப்பாகச் செயல்படுவதில் கில்லாடி என்று பெயரெடுத்தவர் ஹென்றி. அவர் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளில் கூட வித்தியாசமாக எதையாவது செய்து அசத்துவார். அப்படிப்பட்டவர் அவரது சொந்தக் கடையின் திறப்புவிழா என்றால் மனிதர் சும்மா இருப்பாரா? தூத்துக்குடியில் இருந்து முத்தையாபுரம்வரை நூற்றுக்கணக்கான நமீதாவின் பேனர்களை வைத்து அசத்தியிருந்தார். கலர், கலரான போஸ்டர்களுக்கும் பஞ்சம் இல்லை. `வாராரு வாராரு! நமீதா வாராரு. நகைக்கடையைத் திறந்து வைக்க வாராரு' என்ற பாடல்கள் உள்ளூர் சேனல்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தன. இதனால், தூத்துக்குடி மக்கள் மத்தியில் நமீதாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிட்டதை மறுக்க முடியாது.
காலையில் ஒன்பதே முக்காலுக்குத் திறப்பு விழா என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, ஒன்பது மணியில் இருந்தே முத்தையாபுரத்தில் குவியத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள். ஏதோ கோயில் விழாவுக்குப் போவதுபோல தூத்துக்குடியில் உள்ள இளவட்டங்கள் டூ வீலர்களில் முத்தையாபுரத்தை நோக்கிப் படையெடுத்தார்கள். மதுரை வரை விமானத்தில் வந்த நமீதா, காலை பத்து மணிக்கெல்லாம் தூத்துக்குடிக்கு காரில் வந்துவிட்டார். ஆனாலும் கூட்டத்தைக் கூட்டி மக்களிடம் தனது நகைக்கடையை விளம்பரப்படுத்த நினைத்தார்களோ என்னவோ.... `மானாட மயிலாட நமீதா இதோ வந்துவிட்டார்.' `அதோ வந்துவிட்டார்' என்று மைக்கில் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். மண்டையைப் பிளக்கும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தாலும் நமீதாவைப் பார்க்காமல் போவதில்லை என்று ரசிகர்கள் அடம்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
தூத்துக்குடி -திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. ஒரு டி.எஸ்.பி., மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிப் பிரமுகர்களையும், வி.ஐ.பி.களையும் கடை திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார் ஹென்றி. நமீதா வரும்போது இவர்கள் எங்கே வரப்போகிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால், அனைவரும் தவறாமல் அங்கே ஆஜர் ஆகியிருந்தது ஆச்சர்யம். யாருக்காகவும் காத்திருந்து பழக்கமில்லாத தூத்துக்குடி நாசரேத் திருமண்டல ஆயர் ஜெபச்சந்திரன் கூட நமீதாவுக்காகக் காத்திருந்தார்.
மணி பதினொன்றைத் தொட்டுவிட்டாலும் `வருகிறார்... வருகிறார்' என்று அறிவிக்கப்பட்ட நமீதாவை மட்டும் காணவில்லை. ரோட்டில் பளபளவென்று எந்த கார் வந்தாலும் அதில்தான் நமீதா வருகிறார் என்று நினைத்துக் கொண்டு ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தார்கள். ஒரு வழியாக பதினொன்றரை மணிக்கு நான்கைந்து கார்கள் புடைசூழ சும்மா அமைச்சர் ரேஞ்சுக்கு வந்து சேர்ந்தார் நமீதா. கருப்பு கலர் டிரெஸ்ஸும் பெரிய சைஸ் கூலிங் கிளாஸுமாக மேடையேறினார் நமி. பளிச்சென்று இருந்த அவரை நெருங்கிப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசாக லத்தியைச் சுழற்றவேண்டியதாகிவிட்டது. சுற்றிச் சுற்றி வந்து கை காட்டி ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் பறக்கும் முத்தங்களை நமீதாவை நோக்கிப் பறக்கவிட்டார்கள். அதைப் பார்த்து நமீதா கோபப்படுவார் என்று பார்த்தால், பதிலுக்கு ஏராளமான பறக்கும் முத்தங்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
இதனால் ஆரவாரமான ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு மேடையருகே வந்தார்கள். மீண்டும் லத்தியைச் சுழற்றினார்கள் போலீஸார். அதைப் பார்த்த நமீதா, "போலீஸ்... டோன்ட் பீட் தெம்'' என்று கத்தியவர், அதற்கு தமிழில் என்ன சொல்லணும் என்று உதவியாளர்களிடம் கேட்டுவிட்டு "போலீஸ் ப்ளீஸ்... என் ரசிகர்களை அடிக்காதீங்க. அவங்க எல்லாம் என் செல்லங்கள். என் செல்வங்கள்'' என்று மாறி, மாறிக் குரல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு இவ்ளோ ரசிகர்கள் இருக்கிறார்களா என்று தெரியாது. என்னைப் பார்க்க வந்த எல்லோருக்கும் தாங்க்ஸ்'' என்று ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசினார். கொடுத்த பணத்துக்கு வஞ்சகம் செய்யாமல் கூட்டத்தை திருப்திப்படுத்துகிறார் என்று நமீதாவின் நடிப்பைப் பார்த்து கூட்டத்தில் இருந்து வந்த கமெண்ட்ஸையும் அப்போது கேட்க முடிந்தது.மேடையில் இருந்த வி.ஐ.பி.க்கள் எல்லோரும் வைத்த கண் வாங்காமல் நமீதாவையே பார்த்துக் கொண்டிருக்க... காவலுக்கு வந்த பெண் போலீஸார் அவருடன் நின்று போட்டோ எடுக்க போட்டி போட்டார்கள். கிட்டத்தட்ட அரைமணி நேரம் இப்படி மேடையில் ஷோ காட்டிய நமி... நகைக்கடைக்குள் புகுந்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்ததோடு, ஒரு முக்கால் மணி நேரம் உள்ளே இருந்து வியாபாரம் நடப்பதைப் பார்த்துவிட்டுத் தான் சென்னைக்குப் புறப்பட்டார்.
முன்னதாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "நான் இதுவரை 25 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் ஐந்து படங்கள் இன்னும் வெளியே வரவில்லை. ஒரு ஆங்கிலப் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாது. எல்லோருக்கும் உள்ளது போலவே எனக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஆசை இருக்கு'' என்று வழக்கம் போல பேசியவரிடம், `இப்படி கடைதிறப்பு விழாவுக்காக பணம் பெற்றுக் கொண்டு வந்து ரசிகர்களைச் சந்தித்ததில் திருப்தியா?' என்றோம்.
"நான் இங்கே வந்தது பணத்துக்காகத்தான். ஆனால், இங்கே வந்தபிறகுதான் தெரிகிறது, என் மீது ரசிகர்கள் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்கள் என்று. இதையெல்லாம் பார்க்கும்போது, பணம் வாங்காமலேயே ரசிகர்களைப் பார்க்க வரலாம் போல தோணுது'' என்று போட்டார் ஒரு போடு. "அவர் சம்பாதித்தது, இப்போது நகைக்கடை வைப்பது என்று எல்லாவற்றிலும் அ.தி.மு.க.வின் பங்கு இருக்கும். ஆனால், அவர் செய்த விளம்பரங்களில் அம்மாவின் படத்தையே போடவில்லை. ம்... அம்மாவையே மறக்கச் செய்யும் அளவுக்கு நமீதா ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது!'' என்று இதையும் அரசியலாக்கி கிசுகிசுக்கிறார்கள் சில அ.தி.மு.க.வினர்.இது பற்றி நாம் ஹென்றியிடம் கேட்டபோது, ``அரசியல் வேறு. தொழில் வேறு. இதில் போய் அரசியலைக் கலப்பது நாகரிகமாகாது!'' என்றார் அவர்.
எப்படியோ, தூத்துக்குடி அ.தி.மு.க.வில் நமீதாவால் அரசியல் புயல் ஒன்று மையம் கொண்டுவிட்டது என்பது மட்டும் உண்மை.

கருத்துகள் இல்லை: