வெள்ளி, 17 ஏப்ரல், 2009

பாதை மாறிய பயணங்கள்..!!



பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட ஒரு நீண்ட பயணத்தை வாழ்க்கை என்று நாம் வெகு சுருக்கமாய் நாம் சொல்லிவிடுகிறோம் !. உண்மையில் வாழ்க்கை அத்துனை எளிமையான ஒன்றாக நம்மில் அநேகம் பேருக்கு அமைந்து விடுவதில்லை.


எல்லா நிலைகளிலும் மனிதன் போராடிபோராடி முன்னேறி செல்கிறான் , அன்றாட ஜீவிதத்திற்கு போராடும் மனித கூட்டம் ஒரு புறம் ! வயிற்று பசி தணிக்க வாழ்க்கை என்பது இன்றளவும் கூட நாம் காண கூடிய அவலமாக பிச்சை பாத்திரம் ஏந்திய சிறுவர்களும் முதியவர்களும் சாட்சி !


இளமையில் கனவுகள் சிதைந்து போகின்றன தன்னுடைய வயதை ஒத்த சிறுவன் நல்ல உடை அணிந்து பள்ளிக்கு செல்லும்போது மற்றொரு சிறுவன் தன்னை தாழ்வு நிலையோடு தன்னை தன்னுடைய வாழ்கையை பார்க்கிறான்.

பாதை மாறிய ஒரு பயணம் அங்கே ஆரம்பிக்கிறது .பயணத்தின் இலக்கு அடையவேண்டிய இடம் இருவருக்கும் ஒன்றாகவே இருந்தாலும் அங்கெ பாதை மாறிய ஒரு பயணம் தொடங்குகிறது.உண்மையில் வாழ்க்கை அத்துனை எளிமையான ஒன்றாக நம்மில் அநேகம் பேருக்கு அமைந்து விடுவதில்லை.



துளிர்விடும் சின்னஞ்சிறு ரோஜா செடியின் மீது நெருப்பின் கங்குகள் வீசப்படுகின்றன பாவம் துளிர்விடும் இலைகள் கருகி போகின்றன.இங்கே தளிர்விடும் இலைகள் கனவுகளாகவும், நெருப்பின் கங்குகள் சமுகத்தில் உள்ள பல அவலங்களையும் அடையாளம் காட்டுகிறது



பிள்ளையை பெற்றவனின் குற்றமா ?


கசடேறிய சமுக அமைப்பின் காரணமா..?


தனது குடிமகன்களை கையேந்த செய்கின்ற அரசின் குற்றமா..?



பிறந்த அந்த பிள்ளையின் குற்றமா..?



பொறுப்பற்ற பெற்றோரால் உலகில் அல்லல்படும் பிள்ளைகள் ஏராளம் , குடி ,உழைப்பின்மை,எதிர்கால நோக்கம் ஏதுமற்று வெறும் காமத்தில் உதித்த பிள்ளைகளை நடு தெருவில் விட்டு செல்வதும்,பிச்சை எடுக்க செய்வதும் மிக பெரும் சமுக சீர்கேடாக இன்றளவும் உள்ளது.
கனவுகள் நசுக்கப்பட்டு பல கொடுமைகளுக்கும் ,பாலியல் மிருக தனத்திற்கும் சிக்கி சீரழியும் சிறார்கள் எங்கிருந்து பெறபடுகிறார்கள்...?
இளமையில் வறுமை.....
இளமையில் மறுக்கப்படும் கல்வி......
இளமையில் தவறான வழி காட்டுதல்கள்
இளமையில் குடும்ப சுமை....
இப்படி பல காரணங்கள் பாதை மாறிய ஒரு பயணத்திற்கு ஒரு காரணமாய் போகின்றன.


திறமைகள் குழி தோண்டி புதைக்க பட்டு , மனித பிறப்பின் நோக்கம் இன்னதென்று உணராமலே வாழ்கை பாதையில் முன்னேறி செல்லும் எண்ணற்ற சின்னஞ்சிறு குழந்தைகள் பரிதாபத்திற்கு உரியவர்கள் !
உங்களுடைய ரயில் பயணத்திலும்...பேருந்து பயணத்திலும் நீங்கள் மிக சரியான இடத்தில் நின்று கொண்டிருக்க ...உங்களை சுற்றி கையேந்தி நிற்கும் அந்த சின்னஞ்சிறியவர்கள் உண்மையில் பாதை மாறிய பயணத்தில் உள்ளவர்கள்..!!
பாதை மாறிய பயணத்தில் நாம் சரியான இடத்திலும் அவர்கள் தவறான இடத்திலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்திப்பது விதியா? விந்தையா? விடை தெரிந்தால் சொல்லுங்கள் !