ஞாயிறு, 7 செப்டம்பர், 2008


ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் அமைச்சர் செல்வகணபதி கழகத்தில் சேர்ந்தது பற்றி?'' என்ற ஒரு கேள்விக்கு, ``நாளைக்கு ஜெயலலிதாவையே கூட சேர்த்துக் கொள்ள நேரிடலாம், என்ன செய்வது?'' என்று கருணாநிதி பதில் தர, தமிழகம் கொஞ்சம் அதிர்ந்து போனதென்னவோ உண்மை.
எதிர்பார்த்ததுபோலவே இந்த அதிரடிக்கு ஓர் எதிரடி பதில் அ.தி.மு.க. தரப்பிடம் இருந்து எகிறிக் குதித்தது. கலைஞரின் அந்தக் கருத்துக்கு பதில் அளித்த ஜெயலலிதா, ``கருணாநிதியும், கருணாநிதி குடும்பத்தினரும் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கேட்கின்ற காலம் விரைவில் வருமே தவிர, நான் அங்கு போய்ச் சேரக்கூடிய காலம் நிச்சயமாக வரவே வராது'' என்று ஒரு போடு போட்டார்.
இந்நிலையில்தான் நமது `குமுதம் ரிப்போர்ட்டர்' இதழுக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. ```நாளைக்கு ஜெயலலிதாவே தி.மு.க.வுக்கு வந்தாலும் கூட அவரைச் சேர்த்துக் கொள்வோம்' என்ற ரீதியில் கலைஞர் சொன்னது வெறும் பேச்சல்ல. அப்படி ஜெயலலிதாவே தி.மு.க.வில் சேரப்போன ஒரு சம்பவம் கூட முன்பு நடந்தது. நம்புவதற்கு ரொம்பக் கடினமாக இருந்தாலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது முக்காலும் உண்மை'' என்று சொல்லி நம் நாடிநரம்புகளை ஆடவைத்து விட்டார் ஒரு பிரபல பத்திரிகையாளர்.
அவர் `அசைட் பாஸ்கர்'!அவர் சொன்ன தகவல்கள் தமிழக அரசியலையே ஆடி அதிர வைக்கக் கூடியவை. அவர் நம்மிடம் சொன்ன தகவல்களை விழிகளை விரித்தபடி கேட்டுக்கொண்டு நாம் உள்ளே விழுங்கினோம். அசைட் பாஸ்கர், கலைஞருக்குத் தூரத்து உறவுக்காரர் என்பதுடன், அ.தி.மு.க.வில், `நாளிதழின் பெயர் கொண்ட நபருக்கு' அவர் வகுப்புத் தோழர். அத்துடன் அந்தக் கட்சியின் பெரும்புள்ளியான நர்த்தனக் கடவுளின் பெயர் கொண்ட ஒருவருக்கும் அவர் மிகமிக நெருக்கமானவர். அந்த சம்பவத்தை அசைட் பாஸ்கர் நம்மிடம் விவரிக்கத் தொடங்கினார்.
``எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜானகி அணி என்றும், ஜெயலலிதா அணி என்றும் அ.தி.மு.க. பிரிந்து கிடந்த நேரம் அது. ஜானகி அணியினர் கலைஞரிடம் அவர்களது அணிக்கு ஆதரவு கேட்டிருக்க, கலைஞர் அதுபற்றி யோசித்து முடிவு எடுப்பதாகச் சொல்லியிருந்தார்.அந்த நேரத்தில் அரசு அதிகாரியாக இருந்த எனக்கு நெருக்கமான அந்த `நர்த்தனக் கடவுள்' அல்சர் காரணமாக மயிலாப்பூரில், கண்ணனின் தாயார் பெயர் கொண்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்திருந்தார். அவரை நான் பார்க்கப் போயிருந்தேன். என்னிடம் `முக்கிய விஷயம் ஒன்றைப் பேச வேண்டும்!' என்று பரபரத்த நர்த்தனக் கடவுள், `உனக்கு விஷயம் தெரியுமா? நாளைக் காலை 9 மணிக்கு ஜெயலலிதா கோபாலபுரத்துக்குச் சென்று கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் சேர முடிவு செய்து விட்டார்!!! ஒட்டுமொத்த ஜெ. அணியும் தி.மு.க.வுடன் இணையும் முடிவில் இருக்கிறது' என்றார். என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லை.
`இது எப்படி நடக்கும்?' என்று நம்பமுடியாமல் கேட்டேன் நான். அதோடு, `இது தற்கொலை முயற்சி அல்லவா?' என்ற வார்த்தையும் என் வாயில் இருந்து தவறி விழுந்தது.
`இல்லை. ஜானகி அணியினருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தருவது பற்றி டெல்லியில் ராஜீவ் காந்தியுடன் மூப்பனார் தீவிர பேச்சுவார்த்தையில் இருக்கிறார். ஜானகி அணிக்கு காங்கிரஸ் ஆதரவு கிடைக்கப்போவது உறுதி. பேருக்கு ஜானகியை முதலில் ஆட்சியில் அமர உதவி செய்து விட்டு, அதன்பின் அவரை சுலபமாக வீழ்த்தி தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்துவதுதான் கதர்க் கட்சியினரின் உள்நோக்கம். அதை நாம் அனுமதிக்க முடியாது.
தமிழகத்தை ஏதாவது ஒரு திராவிடக் கட்சிதான் ஆள வேண்டும். காங்கிரஸ் இங்கே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆந்திரம், கர்நாடகம் போல தமிழகம் மீண்டும் பின்னுக்குப் போய்விடும். ஜானகி அணியின் முதுகில் குத்த காங்கிரஸ்காரர்கள் முயற்சிக்கிறார்கள். அதனால் தான் ஜெயலலிதா இப்படியொரு முடிவை எடுக்க விரும்புகிறார். அத்துடன் என் விருப்பமும் அதுதான்' என்று நிறுத்தினார் நர்த்தனக் கடவுள். நான் திகைத்துப் போனேன்.
அதன்பின் அவர் என்னை நோக்கி,`ஜெயலலிதா தி.மு.க.வில் சேரப்போவது தொடர்பாக உன் உதவியும் தேவைப்படுகிறது. உனக்கு முரசொலி மாறனை நன்றாகத் தெரியும் அல்லவா?' என்றார். குத்துகிற ஒரு கருவியின் பெயர் கொண்ட ஒரு மூத்த பத்திரிகையாளர் மூலம் முரசொலி மாறனை எனக்கு ஏற்கெனவே தெரியும். எனவே நான் மௌனமாக இருந்தேன்.
`நீ இப்போதே வெளியில் போய் முரசொலி மாறனுக்கு போன் செய்து, ஜெயலலிதா நாளை தி.மு.க.வில் சேரப்போவதைப் பற்றி அவரிடம் சொல்லி, அவரது ரியாக்ஷன் என்ன என்று கேளு. கேட்டு வந்து என்னிடம் சொல்லு. மிகவும் அவசரம்' என்றார் ந.க.
அப்போது செல்போன்கள் இல்லாத காலம். நான் ஆஸ்பத்திரிக்கு வெளியில் வந்து அங்கிருந்த எஸ்.டி.டி. பூத் ஒன்றில் இருந்து மாறனுக்கு போன் செய்தேன். அவர் லைனில் வந்தார். `ஜெயலலிதா தி.மு.க.வில் சேர முடிவெடுத்திருக்கும் தகவலை முரசொலி மாறனிடம் சொன்னதும் அவர் அப்படியே திகைத்து திக்குமுக்காடிப் போய்விடுவார். உடனே அதை வரவேற்பார்' என்று நான் நினைத்தேன்.
ஆனால், நான் இந்த அதிரடித் தகவலைக் கூறியதும் எதிர்முனையில் இருந்த முரசொலி மாறன் துளிகூட அதிர்ச்சி அடையவில்லை. நிறுத்தி நிதானமாக `அப்படியா?' என்று கேட்டுக் கொண்ட அவர், `ஜெயலலிதா தி.மு.க.வில் சேர விரும்புவது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று என்னிடம் கேட்டார். `எனக்கு அந்த அளவுக்கு அரசியல் அறிவு இல்லை' என்றேன்.
உடனே முரசொலி மாறன், `அந்த அம்மா தி.மு.க.வுக்கு வந்தால் அவரை ஹேண்டில் பண்ணுவது ரொம்ப சிரமம். எம்.ஜி.ஆரால் கூட முடியாத காரியம் அது. அதோடு ஜெயலலிதா தி.மு.க.வுக்கு வந்தால் கட்சியின் கட்டுக்கோப்பைத் தகர்த்து விடுவார். அது மட்டுமல்ல. அவர் எப்போதும் எந்த விஷயத்திலும் உறுதியாக இருக்க மாட்டார். இப்போதுகூட பாரேன். நாளை காலை 9 மணிக்கு தி.மு.க.வில் சேரும் முடிவில் கூட ஜெயலலிதா உறுதியாக இருக்க மாட்டார்' என்றவர், `ஜெயலலிதா இப்படி திடீர் முடிவு எடுக்க என்ன காரணம்?' என்று என்னிடம் கேட்டார்.நான், `ஜானகி அணி, காங்கிரஸிடம் ஆதரவு கேட்கும் விஷயம், ராஜீவ் காந்தியுடன் மூப்பனார் பேசிய விஷயம்' போன்றவற்றை விளக்கினேன். அதைக் கேட்டு முரசொலி மாறன் சிரித்துக் கொண்டே, `டெல்லியில் இருந்து உடனுக்குடன் தகவல்கள் பெறுவதில் உன் நர்த்தனக் கடவுள் ஒரு மணிநேரம் லேட்டாக இருக்கிறார். ஜானகி அணிக்கு ஆதரவு தருவதில்லை. இந்த விஷயத்தில் நியூட்ரலாக இருப்பது என்று காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்து ஒரு மணிநேரத்துக்கு மேல் ஆகிறது' என்றார்.
நான் திகைத்து நின்றபோது அவர், `ஜெயலலிதா தி.மு.க.வில் சேர விரும்புவதாகச் சொன்னாயே. கலைஞர் இப்போது தூங்கப் போயிருப்பார். அதனால் அவருக்கு இந்தத் தகவலைச் சொல்ல முடியாது. காலையில் அந்த அம்மா (ஜெயலலிதா) தி.மு.க.வில் சேரும் முடிவில் உறுதியாக இருந்தால் காலையில் எனக்கு போன் செய். ஆனால் அந்த அம்மாவின் மனம் நாளைக் காலைக்குள் கண்டிப்பாக மாறிவிடும்' என்றுகூறி போன் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்.
நான் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த நர்த்தனக் கடவுளிடம் திரும்பி வந்தேன். ஆனால் முரசொலி மாறனுடன் நான் பேசிய எல்லா விஷயங்களையும் அவரிடம் நான் சொல்லவில்லை. அப்போது டெல்லியில் இருந்து நர்த்தனக் கடவுளுக்கு ஒரு போன் வந்தது. அதில் `காங்கிரஸ் தலைமை ஜானகி அணியை ஆதரிக்கப் போவதில்லை' என்ற தகவல் வரவே அவர், `நல்ல தகவல்தான். காங்கிரஸார் நடுநிலை வகிக்க முடிவு செய்திருப்பதால் இனிமேல் ஜெயலலிதா தி.மு.க.வில் சேர வேண்டியதில்லை. தேர்தல் வந்தால் அது நம் அணிக்குத்தான் வாய்ப்பு. ஜானகி அணியில் வெறும் தலைவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்' என்று முடித்துக் கொண்டார். இரவில் ஆஸ்பத்திரியிலேயே அவருடன் என்னைத் தங்கிவிட்டுப் போகச் சொன்னார். நானும் அதுபோல அங்கே தங்கி விட்டுச் சென்றேன். காலையில் நான் முரசொலி மாறனுக்கு போன் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை. அவரும் எனக்கு போன் செய்து `என்ன சூழ்நிலை?' என்று கடைசிவரை கேட்க வில்லை. ஜெயலலிதா தி.மு.க.வில் சேர இருந்த சூழ்நிலை பற்றி மாறன் கலைஞருக்குத் தகவல் தெரிவித்தாரா? என்பது பற்றியும் எனக்குத் தெரியாது.
எனவே, ஜெயலலிதா தி.மு.க.வில் சேர இருப்பது பற்றி அப்போது கலைஞர் என்ன நினைத்தார் என்பது பற்றியும் நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை'' என்று முடித்துக் கொண்டார் அசைட் பாஸ்கர்.
ஜெயலலிதா தி.மு.க.வில் சேர முயன்றார் என்ற இந்தத் தகவல் தமிழக அரசியலில் இன்னொரு ரவுண்ட் அதிரடியைக் கிளப்பாமல் இருந்தால் சரிதான்! ஸீ

கருத்துகள் இல்லை: