சனி, 13 செப்டம்பர், 2008

சிவாஜி கணேசன் வாழ்க்கைக் குறிப்பு!!

சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

வாழ்க்கைக் குறிப்பு
'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

திரைப்பட வாழ்க்கை
'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளைய் மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

அரசியல் வாழ்க்கை
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

விருதுகளும் கௌரவங்களும்
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
பத்ம ஸ்ரீ விருது (1966)
பத்ம பூஷன் விருது (1984)
செவாலியே விருது (1994)
தாதா சாகேப் பால்கே விருது (1997)
1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்