சனி, 16 ஆகஸ்ட், 2008




20 வருடங்களாக பென்சனுக்காக போராடும் பெண் தியாகி!வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2008

செங்கோட்டை: 62 வது சுதந்திர தினத்தை இந்தியா இன்று கொண்டாடிக் கொண்டுள்ள உற்சாகமான நாளில், கடந்த 20வருடங்களாக பென்சன் கிடைக்காமல் வறுமையோடு போராட்ட வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார் நாட்டுக்காக போராடிய பெண் தியாகி.திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் தியாகி அழகப்பிள்ளை. இவர் வீரவாஞ்சிநாதனின் நெருங்கிய நண்பர். 1911-ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி மணியாச்சி ரயில் நிலையத்தில் வீரவாஞ்சிநாதன் நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த வில்லியம் ராபர்ட் ஆஷ்துரையை சுட்டு கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.இக்கொலை வழக்கு அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் நெல்லை சதி வழக்கு என பெயரிடப்பட்டு 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் அழகப்பபிள்ளை. இவரது மகள் கோதையம்மாள்.இவர் சிறுவயதிலேயே தனது தந்தையோடு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தின் போது போலீசின் கெடுபிடி...துன்புறுத்தல் காரணமாக செங்கல்பட்டி வீரராகவபுரத்தின் காட்டு பகுதியில் தலைமறைவு வாழ்க்கை.....வீட்டு சிறை...நெல்லை கொக்கிரகுளம் சிறைச்சாலையில் 1942-ல் நடைபெற்ற பஞ்சாப் சதி வழக்கு, 1931 உப்பு சத்தியாகிரகம், 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கால கட்டத்தில் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.ஆஷ்துரை கொலை வழக்கில், வழக்கு செலவுக்காக சொத்துகளை இழந்து இன்று வறுமையோடு போராடி வரும் இவர் தனக்கு பென்சன் வழங்க கோரி கடந்த 20 ஆண்டுகாலமாக மனுக்கள் மூலம் அரசின் செவிகளுக்கு தன் நிலையை எடுத்துக் கூறியும் திமுக, அதிமுக என இரு அரசுகளும் எந்த உதவியும் செய்யாமல் வெரும் ரூ.500-ஐ மட்டும் உதவித் தொகையாக வழங்கி வருகிறது.தனக்கு தியாகி பென்சன் ரூ.3,500-ஐ வழங்கக் கோரி பல்வேறு சாத்விக வழியை பின்பற்றியும் இவரது வறிய நிலையை கண்டு 'வாழும் வள்ளுவர்'களோ...'ஜான்சி ராணி'களோ கண்டு கொள்ளவில்லை. உரிய சான்றுகள் வழங்கியும் அதிகாரிகள் ஏனோ சுதந்திரத்திற்காக போராடி வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை புறக்கணித்து வருகின்றனர். ஆட்சி...அதிகாரிகள்... மாறி மாறி வந்து விசாரணை செய்தும் இதுவரை இவரது வறுமை நிலையை எண்ணி யாரும் வருத்தப்பட்டு வழி செய்யாமல் தடையை மட்டுமே உருவாக்கி வருகின்றனர் என்று அவர் கூறுகிறார்.தனது போராட்டம் குறித்து கோதையம்மாள் கூறுகையில், தென்காசி எம்எல்ஏ, எம்பி, சபாநாயகர், அமைச்சர்கள், முதல்வர், பிரதமர் வரை மனு அனுப்பியுள்ளேன். ஆனால் எனது கோரிக்கை ஏனோ நிராகரிக்கப்பட்டு வருகிறது.வறுமையில் உள்ளதால்தான் அரசிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். வளமான குடும்பத்தில் பிறந்து வறுமையோடு இந்த 85 வயதிலும் போராடி வருகிறேன்.நான் கண் மூடுவதற்கு முன் அரசு எனக்கு உதவி தொகை வழங்க வேண்டும். 61-வது சுதந்திர தினத்தில் எனக்கு ரூ.3500 பென்சன் கிடைக்குமா...என்கிறார் ஏக்கத்தோடு.கண்ணீரும், செந்நீரும் சிந்தி நாட்டுக்காக விடுதலை பெற்றுத் தந்த லட்சோபம் லட்சம் தியாகிகளில் ஒரு துளியான கோதையம்மாளின் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கப் போவது யாரோ?அவரது முகவரி:ஈ. கோதையம்மாள்239-141 சேர்வைக்காரன் புதுத் தெரு,செங்கோட்டை-627809.திருநெல்வேலி மாவட்டம்.போன்-04633235517