செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

நீங்கள் எழுத நினைத்த கடிதம்...!!


இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய பிள்ளைக்கு எழுத நினைக்கும் ஒரு கடிதம் இது..உங்கள் தந்தையின் உணர்வுகளை,ஒரு தகப்பனாக நீங்களும் உணரச்செய்யும் ஒரு கடிதம் இது.நீங்கள் எழுத நினைத்த கடிதத்தை நான் உங்களுக்கு காட்டுகிறேன்


அன்பின் இனிய.....


பச்சிளன்குழந்தயாக முதன் முதலில் கையில் ஏந்தி உன்னை கண்ட அந்த நாள் இன்னும் எனக்கு ஞாபக்கத்தில் உள்ளது. ரோஜா பூவின் மென்மையான உனது பாதங்களில் எனது கன்னங்களை வைத்து பார்த்த அந்த நாட்கள் இனியது !


என்னுடைய கனவுகளையும் ஆசைகளையும், உயிர்ப்போடு நிஜமாக எனது கைகளில் பார்த்த அந்த நாள் இனியது.பிறந்து சில மணி நேரங்களை அயர்ந்து தூங்கிய உனது முகத்தில் எத்தனை சாந்தம் . இனம் புரியாத ஏதோ ஒன்றிற்கு உனது அழகிய முகத்தில் தோன்றி மறைந்தன, சில மின்னல் புன்னகைகள் உன்னை பார்த்து என்னை உணர செய்த அந்த தருணங்கள் இனியது



தாயின் மடி தேடி முட்டி பருகும் கன்று போல் ,உனது முதல் பசியின் வேட்கையை தாய் பால் தொடக்கி வைத்தது !.
உன்னை குறித்தான எனது கனவுகளே என்னுடைய வாழ்கயாகி போகிறது !உன்னுடைய பாதைகளை நான் தீர்மானிக்க விழைகிறேன் , உன்னுடைய ஒவ்வொரு வயதின் காலகட்டத்திலும் உன்னை குறித்தான எனது கனவுகள் நீள்கின்றன


நீ மேலேறி செல்ல எனது உள்ளங்கைகளை நிலத்தில் வைக்கிறேன் , என்னுடைய கரங்களுக்கு கீழே முற்களும் ,கரடுகளும் இருந்தாலும் நான் உன்னை தாங்குகிறேன் ..நீ சிரிக்கிறாய் எனது வலிகள் எனக்கு பழகி போகின்றன
என்னுடைய சந்தோழத்திற்காக அன்று எனக்காக கரம் பதித்த என்னுடைய தந்தையை குறித்தான எண்ணங்களை நீ எனக்கு மறை முகமாக ஞாபகபடுத்துகிறாய் !. நாளை உனது பிள்ளைகளுக்காக கரம் பதித்து தாங்கும் போது ,நான் உன்னால் நினைவு கூறப்படுவது உண்மை.!!



நீ மேலேறி செல்ல செல்ல எனக்கும் உனக்குமான இடைவெளி நீண்டு போகிறது!. உனக்கென்று ஒரு உலகம் ,அது என்னுடைய கனவுகளிளிரிந்து வேறுப்பட்டதாய் இருக்கிறது ,எனது கனவுகள் உனக்கு விளங்காமலே போகிறது

எனக்கும் எனது தந்தைக்கும் இருந்த கனவுகளின் இடைவெளியை மீண்டும் நீ எனக்கு ஞாபகபடுத்துகிறாய்!

வாழ்கையில் புரிபடாத பல விழயங்கள் உன்னால் எனக்கு விளங்க வைக்கப்படுகிறது . இருப்பினும் உன்னை குறித்தான எனது கனவுகள் இந்த நெஞ்சின் ஓரத்தில் உயிர்ப்போடு உள்ளது , அவ்வாறே எனது தந்தைக்கும், நாளை உனக்கும் இருக்கும் என்பதை நான் உணர்கிறேன் ...நீ..??

அன்புடன்
தந்தை