வியாழன், 4 செப்டம்பர், 2008

தமிழகம் தவிக்கிறது -விஜயகாந்த் !!!


"எங்கள் ஆசான்' பட ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட்டு, விக்ரமனின் `மரியாதை' படத்திற்காக ஆயத்தமாகி வருகிறார் விஜயகாந்த். இடைப்பட்ட காலத்தில் வழக்கம்போல, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, தன் தொகுதியான விருத்தாசலம் போய், பல்வேறு பணிகளைப் பார்வையிட்டுத் திரும்பினார். எப்போதும் `பிஸியாக' இருக்கும் கேப்டனை, அவர் இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.


சமீபகாலமாக, நீங்கள் பேசும் பொதுக்கூட்டங்களில் ஆவேசமாகப் பேசுவதும், அது சர்ச்சையானதும் விளக்கம் கொடுக்கும் போக்கும் நிலவுகிறது. ஏன் இந்த தடுமாற்றம்?
"நான் எதாவது தவறுதலாகப் பேசியிருந்தால் அதை வெளிப்படையாகக் கூறி வருத்தம் தெரிவிப்பதில் தயக்கமோ, வெட்கமோபடுவதில்லை. மாறாக, தவறாகப் பேசாத நிலையில், உண்மையை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கம் கொடுக்கிறேன். இதிலொன்றும் தவறு இல்லையே?''.

கடந்த ஓராண்டு காலமாக முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் எல்லாமே நஷ்டத்தைத் தந்துள்ளதாம். உங்கள் படங்களும் அப்படித்தான் என்கிறார்கள். அப்படியிருக்கையில் நடிப்பை நிறுத்திவிட்டு முழுநேர அரசியல்வாதியாக ஏன் ஆகக் கூடாது?


"ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பது மாறிமாறி வரக்கூடியது. அந்த வகையில் சில ஹீரோக்களின் படங்கள் வியாபார ரீதியில் நிறைவு தராத போக்கு சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. இப்படியிருக்கையில் எனது படமான `அரசாங்கம்' வெற்றிப் படம் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும், பல்வேறு தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து எனது கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கின்றனர்.


ஆனால், நான் அரசியலில் உள்ள ஆர்வத்தின் காரணமாக அப்படி வரும் வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறேன். மேலும், இதுபோன்ற படங்களில் நடிக்கும் வருமானத்தை வைத்துத்தான் என் குடும்பத்தை மட்டுமன்றி, கட்சிப் பணிகளுக்கும் செலவிடுகிறேன். அதிலும், என் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் யாரிடமும் கையேந்தி நிதி வாங்கக் கூடாது என்று கூறி அவர்களுக்குத் தேவையான நிதியையும் என் சொந்தக் காசில் இருந்து கொடுப்பதால் படங்களில் நடிப்பதை நிறுத்த முடியவில்லை. இருப்பினும் தே.மு.தி.க ஆட்சியைப் பிடிக்கும்போது, நான் நடிப்பதை நிறுத்திவிடுவேன்


சரி, ஆளுங்கட்சியை குறைகூறினால் மட்டுமே ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் செயல்படுகிறீர்களா?


"குறை இல்லாத நாடு எது?. அதை வெளிப்படுத்தும் விதத்தில் நாங்கள் கட்சியை ஆரம்பித்திருக்கிறோம். எங்கள் நோக்கம் ஆளுங்கட்சியைக் குறைகூறுவதல்ல. இங்கு வாழும் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதுதான். அதற்காக நாங்கள் குரல் கொடுப்பதை இங்குள்ள ஆளுங்கட்சி தவறாக எடுத்துக் கொள்வதைப் பற்றி நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை.''

மாநில அரசு மீது கூறும் விமர்சனங்கள் போல, மத்திய அரசைக் குறை கூறுவதில்லையே? இது ஏன்?


"மத்திய அரசின் மீதும் பல்வேறு விமர்சனங்களை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அதை இங்குள்ள ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம். தேசிய கட்சிகளுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்றுகூட வெளிப்படையாகவே கூறியுள்ளேன். அதேபோல், ப. சிதம்பரத்தின் போக்கு பற்றி பலமுறை பேசியிருக்கிறேன். முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரி பிரச்னை, பாலாறு பிரச்னை மற்றும் இப்போதும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் போன்றவற்றில் மத்திய அரசின் மெத்தனப்போக்கை வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறேன். `நாளை நமதே, நாற்பதும் நமதே' என்ற கோஷத்தை உரக்கச் சொல்லும் எங்களுக்கு மாநில அரசு, மத்திய அரசு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. மக்கள் ஆட்சி மலர வேண்டும் என்பதே தே.மு.தி.க.வின் லட்சியம்.''
சரி. தி.மு.க அரசு தொடர்ந்து பலவீனப்பட்டு வருகிறது என்கிறீர்களா?
"ஆமாம். அதிலென்ன சந்தேகம்? கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு நடக்கும்போதெல்லாம் தமிழகத்தில் வன்முறை தலைவிரித்தாடுவது வழக்கமாகிவிட்டது. அவர்கள் செயல்படுத்தும் திட்டங்களாலும், செயல்பாடுகளாலும் ரொம்பவே பலவீனப்பட்டுத்தான் போயிருக்கிறார்கள்.''
தமிழகத்தில் மட்டும் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?


"தேவைகளைப் புரிந்துகொள்ளாத அரசின் அலட்சியப்போக்குதான் இதுபோன்ற தட்டுப்பாட்டுக்குக் காரணம். இந்த அரசு தகவல் தொழில்நுட்ப(ஐ.டி) நிறுவனங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற துறைகளுக்கும் கொடுக்கத் தவறியதுதான், தட்டுப்பாடு அதிகரிக்கக் காரணம். கடந்த கால ஆட்சியின் குறைகளைப் பற்றி மட்டுமே பேசும் போக்கை மாற்றிவிட்டு, குறைகளைக் களைந்து மாற்று வழிகளைக் கண்டறியத் தவறிவிட்டார்கள்.''
கடந்த சில மாதங்களுக்கு முன்பே மின்வெட்டைக் கண்டித்து தஞ்சையில் ஒரு போராட்டத்தை நடத்தினீர்கள். அப்படியிருந்தும் தமிழகம் முழுவதும் இப்போது பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதற்கு உங்கள் எதிர்ப்பை எப்படிக் காண்பிக்கப் போகிறீர்கள்?
"இந்த ஆட்சி இருக்கும் வரை இதுபோன்ற தடைகளும், வெட்டுக்களும் இருக்கத்தான் செய்யும். கலைஞரின் ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோன்ற மின்தடை கலைஞரின் கோபாலபுரத்து வீட்டிலோ, அமைச்சர்களின் வீட்டிலோ கிடையாது. அவர்கள் இல்லங்கள் மட்டும் இருபத்து நான்கு மணிநேரமும் மின்னொளியில் ஜொலிக்கும்போது, அவர்களுக்கு ஓட்டுப்போட்ட, மக்களின் இல்லங்கள் மட்டும் இருட்டில் தவிப்பது நியாயம்தானா? அதாவது தமிழகம் தவிக்கிறது... கோபாலபுரமோ ஜொலிக்கிறது! இதுபோன்ற மின்தடையால் ஏற்படும் பாதிப்புகளை பக்கம் பக்கமாக எழுதலாம். இப்போதைய மின்வெட்டுக்கு இங்குள்ள காற்றாலைகள் சரியில்லை; நீர்வரத்து இல்லை என்றெல்லாம் மாயையான, பொய்யான காரணங்களைச் சொல்கிறார்கள். அதேசமயம், இங்கிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ஓர் உயர் செயலாளரும், அமைச்சரும் ஒரிசாவில் பவர் பிளாண்ட் போடும்போது, தமிழகம் மட்டும் இவர்களால் வஞ்சிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற அநீதியை ஆட்சியாளர்களுக்கு உறைப்பதுபோல, அதிரடியாக சில நடவடிக்கைகள் எடுக்க ஆலோசித்து வருகிறேன். எந்த மாதிரியான நடவடிக்கை என்பதை இப்போது சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்.''
ரேஷனில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குப் போடப் போகிறார்கள். இதையாவது பாராட்டுவீர்களா?
"ஏழை மக்களுக்கு நல்லது நடக்கும் விஷயத்தை கண்டிப்பாகப் பாராட்டுவேன். ஆனால், இப்போது அறிவித்துள்ள இந்தத் திட்டமும் கலைஞர் ஓட்டுக்காக அறிவித்துள்ள திட்டம்தான். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்துவிட்டு, அதை சமைத்துச் சாப்பிடத் தேவையான மளிகைப் பொருட்களை 90 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலை நிலவுகிறது. அதுமட்டுமன்றி, கேஸ் கிடைக்கிறதா என்றால், பதிவு செய்த அறுபது நாள் கழித்து கெஞ்சிக் கூத்தாடி வாங்கும் நிலையில் இருக்கிறோம். இப்படி மக்களை ஏமாற்றும் கலைஞர் ஆட்சியில் விவசாயிகளும் செத்துச் சுண்ணாம்பாகி வருகிறார்கள். முன்னரே கலைஞர் எழுதிய `கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா?' என்ற வசனத்தை நம்மூர் விவசாயிகளுக்காகவே எழுதியிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.''

கலைஞரின் இதுபோன்ற புதிய திட்டங்களைப் பார்க்கும்போது, மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலையும் நடத்த முடிவு செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
"இருக்கலாம். அப்படி இரண்டு தேர்தல் வந்தால் அவற்றைச் சந்திக்க தே.மு.தி.க. தயாராகவே இருக்கிறது. மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து வைத்துக் கொண்டு அவர்களே களமிறங்கத் தயாராகும்பட்சத்தில் மக்களை நம்பிக் களமிறங்க நாங்கள் எப்போதுமே தயார்.''
தற்போதைய தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறும் என்று சொல்கிறார்களே?
"இதைப்பற்றிய முதல் குரலை நான்தான் எழுப்பினேன். ஆனால், இதற்கான உந்துதலை இங்குள்ள காங்கிரஸார் முறையாகச் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மத்திய ஆட்சியில் பங்கு பெற்றுள்ள தி.மு.க. தானாக முன்வந்து, இங்கு காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்திருக்க வேண்டும். அதை உரிமையுடன் கேட்டுப் பெறாததுதான் காங்கிரஸ் செய்த தவறு.''
கலைஞர் இப்போதெல்லாம் கவிதை மூலம் சிலரை காயப்படுத்தும்போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
" இது ஒன்றும் அவருக்குப் புதிய விஷயம் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே தனக்கு வேண்டியவர்களைப் பற்றி ஆஹா என்றும், அவர்களே வேண்டாதவர்களாகப் போய்விட்டால், துவேஷமாகத் திட்டுவதும் வாடிக்கைதானே? உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் பாராட்டினால், நீங்களே பாராட்டிவிட்டீர்கள் என்று புளகாங்கிதப்படும் கலைஞர், வேறு ஒரு விஷயத்தில் விமர்சனம் செய்தால், உங்களை ஜாதியரீதியாக முத்திரை குத்தி அசிங்கப்படுத்தும் போக்கை காலம், காலமாகத் தொடர்ந்து செய்து வருகிறார். இப்படியெல்லாம் தன் இஷ்டத்திற்கு தனிப்பட்ட முறையில் சிலரைக் காயப்படுத்தும் கலைஞர், விலைவாசி உயர்வுக்கும், சிதம்பரத்தின் போக்கிற்கும், திட்டக்குழுத் தலைவரின் நடவடிக்கைகளுக்கும் கண்டனம் தெரிவித்துக் கவிதை எழுதினால் ரசிக்கலாம். இப்போது இவர் வடிக்கும் கவிதைகள் மற்றவர்களை ஏமாற்றத்தான் பயன்படுகிறது.''
ஆனால், நீங்கள்கூட ஜெயலலிதா கூறிய `வியாதி' என்ற கமெண்டுக்கு, `பெருவியாதி' என்று கூறியதெல்லாம் கொஞ்சம் ஓவர்தானே?
"நான் கூறியதன் அர்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். எங்களைப் போன்றவர்கள் கட்சி ஆரம்பிப்பதை வியாதி என்று கூறியதற்கு, அவரும் இதே அரசியலில் இருந்துகொண்டு அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்றுதான் இப்படியொரு கமெண்டைச் சொன்னேன். என்.டி.ஆர் தொடங்கி, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா வரை பலரும் கலைத்துறையில் இருந்துதான் அரசியலுக்கு வந்திருக்கின்றனர். அதைப் புரிந்து கொள்ளாமல் தவறாகச் சித்திரித்த அந்த அம்மையாருக்கு நான் விளக்கம் கொடுத்தேன். அவ்வளவுதான்.''
இப்போதெல்லாம், உங்களைப் பலவீனப்படுத்த பலரும் இணைந்து செயல்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"அந்தளவுக்கு நாங்கள் பலப்பட்டிருக்கிறோம் என்றுதான் பெருமைப்படுகிறேன். என் கட்சியை வலுப்படுத்தி நல்லாட்சி அமைக்கப் பாடுபடுகிறேன். இந்த நிலையில் மற்றவர்களின் போக்கைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.''
விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் உங்களுக்கு மனநிறைவைத் தந்த ஒரே ஒரு காரியத்தைச் சொல்ல முடியுமா?
" நிறையச் சொல்ல முடியும். ஆனாலும், எம்.எல்.ஏ. என்ற முறையில் இந்த அரசாங்கம் தொகுதிக்கு ஒதுக்கும் நிதியை ஒரு பைசா கூட கமிஷன் அடிக்காமல் மக்களுக்குச் செலவு செய்வதே மனநிறைவைத் தருகிறது. அத்துடன் என் சொந்த நிதியில் இருந்து என் தொகுதியில் பத்து இடங்களை பல்வேறு கோயில்கள் கட்டியும், புதுப்பித்தும் தந்திருப்பது மனநிறைவைத் தரும் காரியங்கள்தான்.''
தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு சாத்தியம் இருக்கிறதா? அப்படி ஓர் அணி அமைந்தால் அதில் தே.மு.தி.க. இணையுமா?.
"இதுபோன்ற கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டுத்தான் நான் கட்சியை நடத்துகிறேன். எந்த அணியிலும் சேர மாட்டேன் என்று தெள்ளத் தெளிவாகக் கூறிவரும் நான், மற்றவர்கள் பற்றி எதுவும் கூற மாட்டேன்.''
அப்படியானால், தே.மு.தி.க. மத்திய ஆட்சியில் பங்கு பெறும் ஆசையே கிடையாதா?
" என்னைப் பொறுத்தவரையில், தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும். அதுபோதும். நம் மாநிலத்தைச் சுற்றியுள்ள பிற மாநிலங்களால் பாதிக்கப்பட்டுள்ள போக்கை மாற்ற வேண்டும். தண்ணீர் பிரச்னைக்குக்கூட பக்கத்து மாநிலத்திடம் கையேந்தும் போக்கை மாற்ற வேண்டும். அதுதான் தே.மு.தி.க.வின் தற்போதைய லட்சியம்.''
இதற்கிடையில், நீங்கள் முரசு சின்னத்தைப் பெற சிலர் தடை செய்து வருவதாகப் பேசியுள்ளீர்கள். அதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?
"இப்போதைய ஆளும் ஆட்சி ஆரம்பத்தில் இருந்தே அதற்கு தடை ஏற்படுத்தி வருகிறது. அதன்விளைவாக, இப்போதைய தேர்தல் கமிஷன் புதுப்புது சட்டங்கள் போட்டு, நாங்கள் எதிர்பார்க்கும் முரசு சின்னத்தை கிடைக்கவிடாமல் பிரச்னை செய்கிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் ஓட்டு வாங்கியவர்களுக்கு, குறிப்பிட்ட சின்னம் ஒதுக்கலாம் என்ற சட்டவிதி இப்போது மாறிவிட்டதாம். தற்போது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் மட்டுமே விரும்பிய சின்னம் என்றொரு சட்டவிதியைக் கொண்டு வந்திருக்கிறார்களாம். இதெல்லாம் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள்தான் என்பது எங்களுக்கும் தெரியும். இதையெல்லாம் மீறி முரசு சின்னத்தை எப்படியும் கைப்பற்றுவேன்.''



அத்துடன் நீங்கள் ஆரம்பிக்கவிருக்கும் டி.வி. சேனலுக்கும் லைசென்ஸ் தரவில்லையாமே?.


"உண்மைதான். `கேப்டன் டி.வி.' என்ற பெயரில் ஒரு சேனல் ஆரம்பிக்க விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை அதற்குரிய அனுமதி கிடைக்கவில்லை. எவ்வளவு ஏன்?. வடஇந்தியாவில் பிரபலமான `ஜீ' நிறுவனம் தமிழகத்தில் காலூன்ற முறைப்படி அனுமதி வாங்கிவிட்டது. அதன்படி இங்கு பல தமிழ்ப்படங்களுடன் எனது படமான அரசாங்கத்தின் உரிமையையும் வாங்கிவிட்டது. கலைஞர் டி.வி.க்குப் போட்டியாக இந்த சேனல் வந்துவிடும் என்று நினைக்கும் தி.மு.க. அரசு இதையும் முடக்க சதி செய்வதாக தகவல் வருகிறது. இதைவிட இன்னொன்று பிரபலமான நாளிதழ் வெகுகாலமாகப் போராடி இன்னமும் லைசென்ஸ் வாங்க முடியாத போக்குதானே இங்கு நிலவுகிறது.''
மதுவிலக்குக் கொள்கையில் உங்கள் நிலை என்ன?.
" இதுபற்றி தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்த பிறகு தெரிந்து கொள்ளுங்கள். மதுவிலக்குக் கொள்கையில் முந்தைய அரசுகள் எதனால் இம்மாதிரியான முடிவுகளை மேற்கொள்கின்றன என்று தெளிவாகத் தெரியாத சூழநிலையில் அதுபற்றி பொத்தாம்பொதுவாகக் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது.''


இப்போதெல்லாம் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வினருடன் பா.ம.க.வினர் இணைந்து போராடுவதும், செயல்படுவதும் நடக்கிறதாம். அதுபோல் நீங்களும் ராமதாஸும் இணையும் காலம் வருமா?
"தே.மு.தி.க தொண்டர்கள் அப்படி நடந்தால் அது எனக்குப் பெருமைதான். அதேசமயம் நாங்கள் இணைந்து செயல்படுவது என்பது சாத்தியமல்ல.''
சரி. தனித்தே போட்டி என்பதில் இப்போதும் உறுதியாகத்தான் இருக்கிறீர்களா?
"இதற்கு பல சூழ்நிலைகளில் பதில் சொல்லிவிட்டேன். ஆனாலும், தேர்தலுக்குள்ள அறிகுறி எதுவும் வராத சூழ்நிலையில் இதுபோன்ற கேள்விக்கு வேறொருவிதமான பதில் சொல்ல விரும்பவில்லை. மேலும், நிழலுக்கு மாலை போடுவதுபோல, கற்பனைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி என்பது குழப்பத்திற்கு அடிகோலும் என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். இப்போதைக்கு இந்த பதில் போதும்'' என்றதோடு பேட்டியை முடித்துக் கொண்டார் விஜயகாந்த்.

அப்பா ரஜினிகாந்துக்கு மகள் சௌந்தர்யா கொடுத்த அட்வைஸ் !!!


ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி' என்று கலைஞர் செய்த அறிவிப்பைக் காட்டிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இப்போது வருகிற தகவல்கள்தான் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகின்றன.

`குசேலன்' படத்தின் தோல்வியால் ரொம்பவே அப்செட் ஆகிவிட்ட ரஜினி, தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பண்ணை வீட்டில் ஓய்வு, தியானம், பூஜையறையில் நெடுநேரம் பிரார்த்தனை என்று இருக்கும் ரஜினி, தன்னைப் பற்றி செய்திகள் வருகிற அத்தனை மொழி பத்திரிகைகளையும் வரவழைத்துப் படித்தும் விடுகிறாராம்.

`பாபா' படத் தோல்வியின்போதுகூட இந்த அளவுக்கு அப்செட் ஆகாத தன் அப்பாவைப் பார்த்து ரொம்பவே கவலை அடைந்த அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா, அப்பாவுக்குத் துணையாக கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலேயே இருக்கிறாராம்.

தற்போது தனக்கு ஏற்பட்டுள்ள சரிவு பற்றி மகள் சௌந்தர்யாவுடன் மட்டுமே மனம் விட்டுப் பேசுகிறாராம் ரஜினி. அப்படி கடந்த வாரம் அப்பா_மகள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, சௌந்தர்யா துணிச்சலாக சில கருத்துக்களை முன்வைத்தாராம். அது முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்கள் பற்றியதாகத்தான் இருந்ததாம்.

``அப்பா, உங்கள் ரசிகர்களை அரசியலுக்குள் இழுத்து வந்ததும் அவர்களுக்குள் அந்த ஆர்வத்தைத் தூண்டிவிட்டதும் நீங்கள்தான். உங்கள் மேடைப் பேச்சுக்களும், பட வசனங்களும்தான் அவர்களுக்கு அரசியல் வெறியைத் தூண்டியிருக்கிறது. 1996-ல் ஆரம்பித்து கடந்த பன்னிரண்டு வருடங்களாக உங்களால் உங்கள் ரசிகர்கள் `டியூன்' செய்யப்பட்டு விட்டார்கள். அவர்கள் மேல் எந்தத் தவறும் கிடையாது. தவறு செய்தது நீங்கள்தான். இப்படிச் சொல்வதால் `நீ சின்னப் பெண். உனக்கு என்ன தெரியும்' என்று என்னைக் கோபிக்காதீர்கள். நான் உங்கள் மகள்தான் என்றாலும், நானும் உங்கள் ஃபேன்தான். ரசிகர்கள்தான் அப்பா உங்கள் பலமே. அவசரப்பட்டு அவர்களை இழந்துவிடாதீர்கள். உங்கள் ரசிகர்களுக்காக நீங்கள் கொஞ்சம் இறங்கி வந்துதான் ஆகணும் அப்பா...'' என்று சௌந்தர்யா பக்குவமாய் தன்னிடம் சொன்னதை மிக உன்னிப்பாக கவனித்து உள்வாங்கிக் கொண்டாராம் ரஜினி.
தன் அப்பா மீது தனக்கு இருக்கும் அன்பினாலும், அக்கறையினாலும் இப்படியொரு ஆலோசனையை சௌந்தர்யா ரஜினியிடம் சொல்லியிருக்கலாம் என்றாலும் கூட, இதன் பின்னணியாக இருப்பது `சுல்தான் தி வாரியர்'தான் என்ற தகவலும் உலவுகிறது.
அதாவது, தன் அப்பாவை வைத்து `சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கி வருகிறார் சௌந்தர்யா. ஏகப்பட்ட கோடிகளை வாரியிறைத்து அம்பானி குரூப் தயாரிக்கும் இந்தப் படம் உலகம் முழுக்க வெளியிடும் நோக்கத்தோடு பன்னிரண்டு மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறதாம். அதில் ஒன்று, ஜப்பானிய மொழியும்கூட.
இப்படி பிரமாண்டமான முறையில் தான் டைரக்ட் செய்யும் முதல் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது அனிமேஷன் படம் உலக அளவில் தனக்கும் பெயர் வாங்கித் தரவேண்டும் என்று விரும்புகிறாராம் சௌந்தர்யா.அப்படியொரு வெற்றியை ஈட்ட தன் அப்பாவின் ரசிகர்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் முடியும் என்று நம்புகிறாராம் சௌந்தர்யா. இதையெல்லாம் தன் தந்தையுடன் மனம் விட்டுப் பகிர்ந்துகொண்ட சௌந்தர்யா, `ரசிகர்களுக்காக நீங்க இறங்கி வந்துதான் ஆகவேண்டும்' என்று வலியுறுத்தினாராம்.

ரஜினி இறங்கி வருவது என்றால் என்ன? அவர் அரசியலில் குதிப்பதா? என்று கேட்டால் அவசர அவசரமாய் அதனை மறுக்கிறார்கள், இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள்.

``தலைவர் அரசியலில் குதிப்பது என்று முடிவெடுத்து அதனை அறிவித்தால் அது இன்னும் ஆபத்தில் போய் முடிந்துவிடும். `தெளிவான முடிவை எடுக்கத் தெரியாதவர்' என்ற முத்திரை நிரந்தரமாக ரஜினி மீது விழுந்துவிடும் அபாயமும் இருக்கிறது. ரசிகர்களுக்காக ரஜினி இறங்கி வருவது என்றால், அவருக்கும் ரசிகர்களுக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைத்து, நெருக்கத்தை வளர்த்துக்கொள்வதுதான். ரஜினி தன் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அந்த நிலையை அவர் மாற்றவேண்டும். முப்பது மாவட்ட நிர்வாகிகளையும் மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் உள்ள மன்றப் பொறுப்பாளர்களையும் நூறு நூறு பேராக ராகவேந்திரா மண்டபத்துக்கு வரவழைத்து ரஜினி பேசவேண்டும். அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ரசிகர்களின் மனவிருப்பத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவர் அரசியலுக்கு வருகிறாரோ... இல்லையோ? ஆனால், தன் ரசிகர்களுடனான நேரடித் தொடர்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அது ஒன்றுதான் தற்போது அவருக்கு ஏற்பட இருக்கும் இமேஜ் இழப்புக்குத் தீர்வாக அமையும். உங்களிடம் சொன்ன இதே கருத்தைத்தான் சென்னைக்குச் சென்று சத்தியநாராயணாவிடமும், தலைமை மன்ற நிர்வாகிகளிடமும் சொன்னோம். அவர்கள் மூலமாக சௌந்தர்யா தெரிந்துகொண்டு அப்பாவிடம் பேசியிருக்கிறார்'' என்றார்கள்.

இந்நிலையில், ஒரு முக்கியமான பரபரப்பு ஒன்றும் கடந்த சனிக்கிழமை (30-ம் தேதி) அன்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்திருக்கிறது.
அன்று சத்தியநாராயணாவை நேரில் சந்தித்த சென்னை மண்டல மன்ற நிர்வாகிகள் கடிதம் ஒன்றைக் கொடுத்தார்களாம். ரஜினிக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் மாவட்ட ரீதியாக மன்றத்தில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். மிக முக்கியமாக எல்லா மாவட்டங்களிலும் மகளிர் அணி, இலக்கிய அணி, இளைஞர் அணி, வழக்கறிஞர்கள் அணி போன்றவற்றை நீங்கள் அறிவிக்கவேண்டும் என்று இருந்ததாம்.
அவர்கள் கொடுத்த கடிதத்தைப் படித்துப் பார்த்த சத்தியநாராயணா, ``இந்தக் கடிதத்தை, சாரிடம் (ரஜினியிடம்) நான் சேர்த்துவிடுகிறேன். ஆனால், அது உடனடியாக நடக்காது. சார் ஏற்கெனவே அப்செட்டுல இருக்காரு. இந்த நேரத்துல போய் உங்கள் கடிதத்தை நான் கொடுத்தால் நன்றாக இருக்காது. `குசேலன்' படப் பிரச்னைகளிலிருந்து சார் விடுபட்டு வெளியே வரட்டும். அவர் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும். அந்த சமயத்தில் உங்கள் கடிதத்தைக் கண்டிப்பாக அவரிடம் சேர்த்துவிடுகிறேன்'' என்ற உத்தரவாதத்துடன் திரண்டு வந்த சென்னை மண்டல ரசிகர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார்.
``சூப்பர் ஸ்டார் இமேஜை தக்க வைத்துக்கொள்ளவும், சினிமாவில் தனது மார்க்கெட்டை பாதுகாத்துக்கொள்ளவும் எங்கள் தலைவருக்கு நாங்கள் அவசியம். அதனால் எங்களை அவர் நேரில் சந்திப்பது என்பது காலத்தின் கட்டாயம். அது இன்னும் ஒரு சில வாரங்களில் நடந்துவிடும்!'' என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

அதுபோலவே வரும் 4-ம் தேதி சென்னையிலுள்ள தனது ரசிகர்களைச் சந்திக்கிறாராம் ரஜினி.
படித்தவர்கள் பின்னுட்டமிடுங்கள் ..நன்றி !!