புதன், 17 செப்டம்பர், 2008

உளவு துறையா ? உறங்கும் துறையா !!.டெல்லி குண்டு வெடிப்பு

கடந்த சனிக்கிழமை நடந்த டெல்லி குண்டு வெடிப்புகளில் அதிக பாதிப்பு இருந்த இடம் கரோல் பாக். பதின்மூன்று உயிர்ப்பலிகளையும், நாற்பது பேருக்கு உயிர்ப்பலியைவிடக் கொடுமையான காயங்களையும் ஏற்படுத்திய ஆறு குண்டுகளில் இரண்டு இங்கே வெடித்ததுதான். வெடிக்காத இன்னும் மூன்று குண்டுகளை கன்னாட் ப்ளேஸிலும் இந்தியா கேட் பகுதியிலும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

இறந்து போனவர்கள் மொத்தம் இருபது பேர். இருந்து, பயந்து சாகிறவர்கள் நூறு கோடி.

பெங்களூரு, அகமதாபாத்தைத் தொடர்ந்து எப்படியும் டெல்லிதான் அடுத்த குறி என்று கடந்த மாதமே எதிர்பார்த்தார்கள். சுதந்திர தின விழா சமயத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எண்ணி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் ஒன்றுமில்லை. மிக சாமர்த்தியமாக, யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு சாதுவான செப்டம்பர் சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்து, நடமாட்டம் அதிகமுள்ள மூன்று வர்த்தகப் பிராந்தியங்களில் வெடித்திருக்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை மாலை 6.15-க்கு ஆரம்பித்து, அடுத்த முக்கால் மணி நேரத்தில் தலைநகரத்தைத் தலைகீழ் நகரமாகப் புரட்டிப் போட்டுவிட்டது, இந்தத் தொடர் குண்டு வெடிப்பு.

யார் காரணம்?

இந்தியன் முஜாஹிதீன் என்கிற பெயரை சமீபகாலத்தில் அடிக்கடி கேள்விப்படுகிறோம். லஷ்கர் ஈ தொய்பாவின் இந்திய ஏஜெண்ட் அமைப்பான சிமிக்கு ஒரு குட்டித்தம்பியாக அவதரித்திருக்கும் இயக்கம் என்று சொல்லப்படுகிறது. அகமதாபாத், பெங்களூரு, அதற்கு முன்னால் ஜெய்ப்பூர் என்று நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளின் பின்னணியில் தாங்கள்தான் செயல்பட்டோம் என்று சமர்த்தாக இ_மெயில் அனுப்புகிற - இதுவரை யாரென்று தெரியாத அமைப்பு இது. பெரும்பாலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இயக்கம் என்றும், சிமியின் உத்தரப்பிரதேசக் கிளையில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் ஒரு சில தகவல்கள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன.

அது அவ்வளவு முக்கியமில்லை. குறிப்பாக இந்தத் தருணத்தில். நமது முக்கியக் கவலை, இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு இவர்கள்தான் காரணமா? ஏன் நமது உளவுத்துறையைக் காரணம் சொல்லக்கூடாது?
விஷயம் இருக்கிறது. குஜராத் குண்டுவெடிப்புகளின் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டவர்களுள் அபூ பஷீர் என்கிற ஒருவன் மிக முக்கியமானவன். இந்தியன் முஜாஹிதீன், சிமி இயக்கங்களுடன் சம்பந்தப்பட்டவன்,
அவர்களுடைய ஆள் என்று சொல்லி போலீஸ் அவனைக் கைது செய்து உள்ளே வைத்திருக்கிறது. விசாரணையில் அபூ பஷீர் வெளியிட்ட சில கருத்துகள் முக்கியமானவை. `அடுத்த குறி தலைநகர் டெல்லிதான். எல்லா ஏற்பாடுகளும் தயார். உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.'

இது அவன் சொன்னது. பத்து நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்னர் டெல்லிக்குச் சென்ற குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, இந்த விசாரணை விவரங்களையும் டெல்லிக்கு வரவிருக்கும் ஆபத்து குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் தெரிவித்திருக்கிறார். அதாவது எச்சரிக்கை செய்திருக்கிறார்.
பிரதமர் இந்தத் தகவலை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வெறுமனே எப்போதும்போல் சோனியா தரிசனத்துக்குப் போயிருப்பார் என்று சொல்லிவிட முடியாது. நிச்சயம் உள்துறை வசமும் உளவுத்துறை வசமும் தெரிவித்திருப்பார்.

பத்து நாட்களுக்கு முன்பாக ஒரு தகவல் கிடைத்தும் பைசா பிரயோஜனமில்லை என்றால், அப்புறம் உளவுத்துறை எதற்கு? உப்புமா கிண்டி சாப்பிடுவதற்கா?

இந்தியாவின் அபாயம் இந்தத் தீவிரவாத இயக்கங்களல்ல. இவர்களை நோக்கி ஓரடிகூட எடுத்து வைக்க முடியாத நமது உளவுத்துறைதான்.இதற்கு முன் நடந்த எந்த ஒரு தொடர்குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியையும் இதுவரை நாம் முழுமையாக அலசி ஆராய்ந்து தீர்வு கண்டதில்லை. சம்பந்தப்பட்ட இயக்கங்களே தாங்கள் யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டால் உண்டு. அப்படியும் கிட்டே நெருங்கியதில்லை. இவன்தான் செய்தது என்று யாரையும் சந்தேகத்துக்கு இடமின்றிக் கைது செய்ததில்லை. எல்லாம் சந்தேகத்தின் பேரில் நிகழ்த்தப்பட்ட கைதுகள்தாம்.

டிசம்பர் 13, 2001-ல் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பித்து இன்றுவரை இதுதான் நிலைமை. முஹம்மது அஃப்சல் மாதிரி யாராவது முன்னாள் காஷ்மீர் போராளி கிடைத்தால் பிடித்துப் போட்டு, கேசை முடித்துவிடுவதில்தான் ஆர்வம் காட்டப்படுகிறதே தவிர, உருப்படியாக ஒன்றுமில்லை.

என்ன செய்கிறது உளவுத்துறை? ஏன் இந்தக் கும்பகர்ணத் தூக்கம்?
விசாரித்தால் டிபார்ட்மெண்டே கட்சிகளையும் எம்.பி.க்களையும் கவனிக்கப் போயிருப்பதாகத் தெரியவருகிறது. மாதக்கணக்காக, வருடக்கணக்காக இதே வேலைதான். உள்நாட்டுப் பாதுகாப்பின் பொருட்டு இயங்கும் ஐ.பி. என்கிற இண்டலிஜென்ஸ் ப்யூரோவின் அத்தனை ஆபீஸர்களும் ஊழியர்களும் மத்திய அரசின் எடுபிடிகளாகத்தான் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தலைநகரில் நிகழ்ந்த குதிரை பேரத் திருவிழா சமயம் இவர்களுக்கெல்லாம் இரவு பகல் பாராத டியூட்டி என்கிறார்கள்.
செய்ய வேண்டியதுதான். தப்பில்லை. அதே சமயம் தங்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் எதற்காக என்று எப்போதாவது சற்று யோசிக்கலாம். அதுவும் தப்பில்லை.


ஐ.பி.யின் பணிகள் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டவை. ஹாம் ரேடியோ என்று அழைக்கப்படும் அமெச்சூர் ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணிப்பது இவர்களின் மிக முக்கியமான பணி. குறிப்பாக எல்லைப்புற மாகாணங்களில் இந்த ரேடியோ அலைவரிசைக் கண்காணிப்பு எப்போதும் மிகத் தீவிரமாக இருக்கும். காரணத்தை விளக்க வேண்டியதில்லை அல்லவா? தீவிரவாதப் பிரச்னை.

அடுத்தபடியாக புதிதாக உள்நாட்டில் யார் எங்கே பதவியேற்றாலும் அவர்களுக்கான செக்யூரிட்டி க்ளியரன்ஸ் வழங்குவதும் ஐ.பி.யின் பணிதான். பதவிக்கு வருபவரின் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்வதில் தொடங்கி, அவரது பின்னணி, முன்னணி விவரங்கள், ஆதரவாளர்கள், எதிரிகள் பற்றிய விவரங்கள், அவர் எத்தனை பர்செண்ட் அபாயகரமானவர், அல்லது நம்பக்கூடியவர், கட்சிமாறியா, கேப்மாரியா என்றெல்லாம் அலசி ஆராய்ந்து, அன்னார் பதவியேற்பதற்கு உரிய சூழல்தானா, தாக்குப்பிடிப்பாரா, என்ன ஆவார், ஏது ஆவார் என்றெல்லாம் ரிப்போர்ட் எழுதுவார்கள். ஒன்றும் பிரச்னையில்லை, பதவி ஏற்கலாம் என்று ஐ.பி. சொன்னால்தான் காரியம் நடக்கும். அமைச்சர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என்று இந்தக் கண்காணிப்பு வட்டத்துக்குள் வருபவர்கள் ஆயிரக்கணக்கானோர்.

அடுத்த பணி, தாம் பேசுவது தெரியாமல் மீடியாவுடன் பேசுவது. மக்களுக்கு இன்ன தகவல் போய்ச் சேரவேண்டும் என்று மத்திய அரசு சொல்லும் தகவல்களை உரிய முறையில் மீடியா வழியே மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது ஐ.பி.தான். சிக்கல் மிகுந்த, கலவரம் நிறைந்த தருணங்களில் வெளிப்படையாகவும் பேசுவார்கள்.

இதெல்லாம் தவிர, ஒரு நாளைக்கு சுமார் ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் கடிதங்களை உடைத்துப் படித்துப் பார்ப்பதும் இவர்களுடைய முக்கியப் பணிகளுள் ஒன்று. இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடப்பதல்ல. தேசம் முழுதும் அனைத்து மாநிலங்களிலும் உண்டு. இதன் தொடர்ச்சிதான் டெலிபோன் ஒட்டுக்கேட்பு வைபவங்களும். அதற்கெல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் திரட்டும் தகவல்களைத் தொகுத்து, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த தெளிவான அறிக்கைகள் தயாரிப்பது, அதை உள்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வைப்பது என்பதுதான் ஐ.பி.க்கு நிர்ணயிக்கப்பட்ட பணி. இந்திய - சீன யுத்தத்துக்குப் பிறகு ஸிகிகீ என்று வெளிநாட்டுப் புலனாய்வு ஏஜென்சி தனியே பிரிக்கப்பட்டபின் ஐ.பி.க்கு இருக்கும் பணி இதுதான்.

மாநில போலீஸ், பிராந்திய ராணுவ முகாம்களுடன் ரெகுலரான தொடர்பு வைத்துக்கொண்டு ஆங்காங்கே நிலவரங்களை ஆராய்வது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது, மாநில போலீஸுடன் எப்போதும் சுமுக உறவு பேணுவது, சந்தேக கேஸ்களை தொடர்ந்து கண்காணிப்பது, இயக்கங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், ரகசியக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்களைக் கவனிப்பது, கூடப்போய் பேச்சுக்கொடுத்து உண்மையறிவது என்று பல ஜோலிகள் இவர்களுக்கு உண்டு.

நமது கெட்ட நேரம், உள்நாட்டில் குழப்பம் விளைவிக்கும் அத்தனை தீவிரவாத இயக்கங்களும் வெளிநாட்டு இயக்கங்களாகவோ, அவர்களது பினாமிகளாகவோ இருப்பதனால் ஐ.பி., `ரா'வுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகிறது.

இன்றைய தேதியில் `ரா' எனப்படும் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்கின் தலைபோகிற வேலை என்பது காஷ்மீர் இயக்கங்களைக் கண்காணிப்பதுதான். அதாவது பாகிஸ்தானைக் கவனிப்பது. சமயமிருந்தால் அருணாசலப் பிரதேசத்துப் பக்கம் கொஞ்சம் சீனாவை முன்வைத்து வேலை பார்ப்பார்கள். அப்புறம் பங்களாதேஷைக் கொஞ்சம் கவனிப்பது. அவர்களுக்கு வேறு பெரிய ஜோலி கிடையாது.

ஆனால் இதற்கே மூக்கால் அழுது கொண்டிருக்கிறார்கள். ராவின் இன்றைய மிக முக்கியமான உயர் அதிகாரி என்பவர், அலுவலகத்துக்கே பெரும்பாலும் வராதவர் என்கிறார்கள். அவரைப் பார்க்க வேண்டுமானால் கோல்ஃப் மைதானத்துக்குத்தான் போகவேண்டும். யாராவது இது பற்றிப் புகார் செய்தால் உடனே சோனியா காந்தி வீட்டுக்கு ஓடிப்போய் காலைக் கையைப் பிடித்து கெஞ்சிக் கூத்தாடி, தப்பித்துத் திரும்பிவிடுவார்... இப்படிப் போகிறது கதை. கேட்டால், தனக்கு உடம்பு சரியில்லை என்றும் பணியிலிருந்து விடுவித்துவிடும்படி கேட்டிருப்பதாகவும் அவர் சொல்லிவிடுவாராம்.

இந்நிலையில் இந்தியாவில் செயல்படும் தீவிரவாத முஸ்லிம் இயக்கங்களைப் பற்றிய தகவல் சேகரிப்பது, பின்தொடர்வது, சுற்றி வளைப்பது போன்ற காரியங்களை ராவின் ஒத்துழைப்பில்லாமல் ஐ.பி.யால் செய்துவிட முடியாது. ஏனெனில் இங்கு நிகழ்த்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் உள்ளூரில் தீர்மானிக்கப்படுவதே இல்லை. பெரும்பாலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் சிந்தனையில் உதிக்கிற திட்டங்கள் இவை. சில சமயம் பங்களாதேஷ் உளவு அமைப்பான டி.ஜி.எஃப்.ஐ (Directorate General of Forces Intelligence) தீர்மானிக்கும்.

பங்களாதேஷை நாம் நமது தோழமை தேசம் என்று சொல்லிவந்தாலும், டி.ஜி.எஃப்.ஐ.யைப் பொறுத்தவரை அவர்கள் அல் காயிதாவின் கைக்கூலிகளாகவே பல சமயம் செயல்பட்டு வருபவர்கள். பங்களாதேஷில் அதன் உளவுத்துறை தனியொரு அரசாங்கமே நடத்திக்கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இயங்கும் உல்ஃபா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு இந்த உளவு அமைப்பில் நல்ல செல்வாக்கும் நட்பும் புரிந்துணர்வும் உண்டு. இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை மிகுதியாக உள்ள மாநிலங்களையும் பெரு நகரங்களையும் தேர்ந்தெடுத்து, அங்குள்ள ஏதேனுமொரு மசூதியை மையமாக வைத்து இங்குள்ள முஸ்லிம் இளைஞர்களை இழுத்து மூளைச் சலவை செய்து நாசகாரியங்களில் பயன்படுத்தும் பணியை ஆத்மசுத்தியுடன் செய்துவரும் அமைப்பு இது.
2007 ஆகஸ்ட் 26 அன்று ஹைதராபாத் லும்பினி பார்க்கில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல்களும், அங்கே நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதும் நினைவிருக்கிறதா? பின்னணியில் இருந்தது பங்களாதேஷ் உளவு அமைப்புதான்.

எதற்கு இதெல்லாம்?

நமது உள்நாட்டுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டிய ஐ.பி., அந்தப் பணியில் பெரும்பாலும் நமது இன்னொரு உளவு அமைப்பான ராவின் உதவியைக் கோரியிருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா போன்ற தேசங்களிலிருந்து நமக்கு வரக்கூடிய அபாயங்களையும் ஆபத்துகளையும் கணித்து, தடுத்து நிறுத்தவேண்டிய ராவே சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஐ.பி.யால் என்ன செய்ய முடியும்?

அதனால்தான் குண்டு வெடிக்கிறது. ஜெய்ப்பூர், பெங்களூரு, அகமதாபாத், டெல்லி. அடுத்து தமிழ்நாடு என்கிறார்கள்.

குண்டு வெடித்த கொஞ்ச நாளைக்கு சென்ட்ரல் ஸ்டேஷனில் போகிற - வருகிறவர்களையெல்லாம் துண்டை உருவித் தோலுரித்துப் பார்ப்பது, அப்புறம் மறந்துபோய் குதிரை பேர எம்.பிக்களுக்கு கோழி பிரியாணி வாங்கிக்கொண்டு போவது என்று இருந்தால் ஏன் வெடிக்காது?இந்தியன் முஜாஹிதீன் என்கிற அமைப்பைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும்.

டெல்லி குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் இதே அமைப்புதான் முன்னதாக பெங்களூரு, அகமதாபாத், அதற்கும் முன்னால் (நவம்பர் 2007) காசி மற்றும் ஃபைஸாபாத் நகரங்களில் வெடித்த குண்டுகளுக்கும் பொறுப்பேற்றது. அப்போது காவல் துறையினரும் உளவுத்துறையினரும் `இந்தியன் முஜாஹிதீன் என்று யாருமில்லை. போலீஸை திசைதிருப்புவதற்காக சிமியும் ஹர்கத் உல் ஜிஹாத் ஏ இஸ்லாமியும் இப்படிப் பெயர் மாறாட்டம் செய்கிறார்கள் என்று சொன்னார்கள். ஹர்கத் உல் ஜிஹாத் ஏ இஸ்லாமி என்கிற பெயர் நமக்கு அறிமுகமானதே அந்த ஆண்டு நிகழ்ந்த ஹைதராபாத் குண்டுவெடிப்பின்போதுதான்.

உண்மையில் இந்த இயக்கங்களின் பெயர்கள் அத்தனை முக்கியமே இல்லை. வெளிநாடுகளிலிருந்து இவர்களை இயக்குபவர்களை நாம் நன்கறிவோம். சிமி என்றாலும் `ஹர்க்கத்' என்றாலும் இந்தியன் முஜாஹிதீன் என்றாலும், வேறு என்ன பெயர் சொன்னாலும் அனைத்தும் கருவிகளின் பெயர்கள்தாம். இயக்குபவர்கள் வேறு. சமீபகாலமாக, இந்தியாவில் நிகழ்த்தப்படும் தாக்குதல்களுக்கு ஓர் இந்தியப் பெயர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துத்தான் `இந்தியன் முஜாஹிதீன்' என்று நாமகரணம் செய்திருக்கிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணம், நாம் தொடர்ந்து இந்தத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் அங்கிருந்து செயல்படும் அமைப்புகளையும் இயக்கங்களையும் குற்றம் சாட்டுவதுதான். `அதெல்லாம் இல்லை. இதெல்லாம் உங்கள் உள்ளூர் ஆட்களே செய்துவரும் செயல்கள்தாம், எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை' என்று சொல்வதன் பொருட்டு, ஓர் இந்தியப் பெயர்!

இந்தப் பெயர்களையும் இவற்றின் பின்னணியையும் அலசி ஆராய்ந்துகொண்டிருக்காமல் உளவுத்துறையால் உருப்படியாக ஏதாவது செய்ய முடியுமா? என்பதுதான் மிச்சமிருக்கும் ஒரே கேள்வி

இளைஞ்சரை காவு வாங்கிய சிம்புவின் கார் !!

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்பதெல்லாம் அந்தக்கால பழமொழி. `சிம்பு வீட்டு கார் கூட சிக்கலில் சிக்கும்!' என்பதுதான் லேட்டஸ்ட் மொழி.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே ஒருவரை குதறிக் கொன்றுவிட்டு, இருவரைப் படுகாயப்படுத்தி விட்டுக் கிடைத்திருக்கிறது சிம்புவின் கார். அந்த உயிர்ப்பலி நடந்தபோது காரை ஓட்டியவர் யார் என்பதுதான் இந்த நிமிடம் வரை சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் கேள்வி.

அகதா கிறிஸ்டியின் மர்ம நாவல்களில் கூட இந்த அளவு திடீர்த் திருப்பங்கள் இருக்காது. அந்த அளவு மர்மங்களைத் தன்னுள் அடக்கி, அனைவரையும் பொறி கலங்க வைத்திருக்கிறது சிம்புவின் கார் சம்பவம். இது பற்றி நாம் இறங்கி விசாரிக்க ஆரம்பித்தோம்.

செப்டம்பர் 10-ம்தேதி நள்ளிரவு! சென்னை மவுண்ட்ரோடு, ஆனந்த் தியேட்டர் அருகே உள்ள கிராண்ட் ஓரியண்ட் ஹோட்டலுக்கு நடிகர் சிம்புவும், அவரது தம்பி குறளரசன் மற்றும் நண்பர்கள் ஜமாவும் சென்றதாகக் கேள்வி. விருந்து வைபவம் முடிந்தபின்னர் இவர்கள் வெளியே வந்து பார்த்தபோது சிம்புவின் கருப்பு நிற மாண்டியோ (டி.என்.09-ஏபி 4466) காரைக் காணவில்லையாம்.

டிரைவரும் அங்கே இல்லாததால் உடனே எண் 100-க்கு போன் செய்து, `காரைக் காணவில்லை' என்று சிம்பு புகார் செய்ததாகத் தகவல். அதையடுத்து காரைத் தேடி களமிறங்கினார்கள் போலீஸார். அதில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

மறுநாள் (11-ம்தேதி) தியாகராயர் நகரில் உள்ள சிம்புவின் வீட்டுக்கு ஆயிரம் விளக்கு போலீஸார் போய் விசாரித்திருக்கிறார்கள். ஹோட்டல் வாசலில் நின்ற காரை சிம்புவின் வீட்டிலுள்ளவர்கள்தான் வீட்டுக்கு வரவழைத்ததாக ஒரு விவரம் தெரியவர, பிரச்னை ஓய்ந்தது என்று திரும்பிவிட்டனர் போலீஸார்.

இதற்கிடையே, அதே நாளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்குச் சென்ற சிம்புவின் தந்தை விஜய டி.ராஜேந்தர், `எனது இளைய மகன் குறளரசன் விருந்துக்குச் சென்றபோது காரைக் காணவில்லை. அதன் டிரைவர் வசந்தகுமாரையும் காணவில்லை' என்று புகார் கொடுத்துள்ளார். ஒரே குடும்பத்திலிருந்து இப்படி முன்னுக்குப் பின் முரணாக வந்த தகவல்களால் தலை சுற்றிப் போனார்கள் போலீஸார்.

இந்தநிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே சிம்புவின் கார் சேதமாகி நிற்பதாக ஒரு தகவல் போலீஸுக்குக் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றபோது மற்றொரு அதிர்ச்சித் தகவல் அவர்களுக்காகக் காத்திருந்தது. சிம்புவின் கார் மோதியதில் மோட்டார் பைக்கில் சென்ற ஒருவர் இறந்ததுடன், இரண்டு பேர் படுகாயம் அடைந்து விட்டார்கள் என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல். டிரைவர் வசந்தகுமார்தான் குடிபோதையில் காரை கடத்திச் சென்று இந்த விபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று சந்தேகித்தனர் போலீஸார்.

இதற்கிடையே இன்னொரு சந்தேகமும் போலீஸாரிடம் சதிராட ஆரம்பித்தது. விபத்து நடந்தபோது அந்த காரை வசந்தகுமார்தான் ஓட்டிச் சென்றாரா? என்பதுதான் அந்த சந்தேகம்.

நடிகர் சல்மான்கான் ஸ்டைலில் அந்த வண்டியை யாரும் ஓட்டிச்சென்றார்களா? அல்லது வழக்கமாக தமிழ் சினிமாக்களில் வருவது போல், விபத்தைத் தான் ஏற்படுத்திவிட்டு பழியை டிரைவர் மீது யாரும் போடுகிறார்களா? என்பது போன்ற சந்தேகங்களும் போலீஸாரைக் குத்திக் குடையத் தொடங்கின. இதுபற்றி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் போலீஸார்.

டிரைவர் வசந்தகுமார் இதுவரை சிக்காத நிலையில், அவர் பிடிபட்டால்தான் பல பின்னணிகள் வெளியில் வர வாய்ப்புள்ளது.

சிம்புவின் கார் சம்பவத்தின் பின்னணியில் பலப்பல ஊகங்களுக்கு இடமிருக்கின்றன. சிம்புவோ அல்லது குறளரசனோதான் சம்பவத்தின்போது அந்த காரை ஓட்டியதாகக் கூறப்படுவது விஜய டி.ராஜேந்தர் தரப்புக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த கார் சம்பவத்தைக் காரணம் காட்டி, சிம்பு மீது வீண்பழி சுமத்தி அவரது இமேஜை `காலி' செய்ய இளம் நடிகர் ஒருவரின் தந்தை செய்யும் முயற்சி என்கிறார்கள் சிம்புவின் தரப்பினர்.

மதுரையில் தனக்குச் சொந்தமான வீட்டில் இருந்த மரச்சாமான்களைத் திருடி விற்க முயன்றதாக, தனது லட்சிய தி.மு.க. கட்சியின் மாவட்டச் செயலாளர் பரமன் மீதே புகார் கூறினார் விஜய டி.ராஜேந்தர். ஆனால் பரமன் தரப்புத் தகவலோ வேறுமாதிரியாக இருந்தது. `தான் பல கோடி ரூபாய் மதிப்பில் டி.ஆருக்கு நிலம் வாங்கிக் கொடுத்த வகையில் தனக்குச் சேரவேண்டிய கமிஷன் தொகை ஒன்றரை லட்ச ரூபாயைத் தராமல் டி.ஆர். ஏமாற்றி விட்டார்' என்று குற்றம் சாட்டினார் பரமன்.

அதோடு டி.ஆர். மீது சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் செய்தார். பின்னர் அந்த வழக்கு தள்ளுபடியானது வேறு விஷயம். எனவே சிம்புவின் கார் கடத்தல், ஏற்பட்ட விபத்து, அதனால் உருவான உயிரிழப்பு இவை வேண்டுமென்றே செய்யப்பட்ட வேலையாக இருக்குமோ? இதன் பின்னணியில் டி.ஆருக்குப் பிடிக்காதவர்கள் யாராவது இருந்திருக்கலாமோ? என்ற சந்தேகமும் டி.ஆர். தரப்புக்கு உள்ளது.

இதற்கு நேர் எதிராக இந்த கார் விபத்து சம்பவத்தில் இருந்து தனது மகன்களைக் காப்பாற்றவே டி.ஆர். இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்ற கிசுகிசுப்பும் கில்லி விளையாடுகிறது.

`ஆளும் கட்சிக்கு எதிராக டி.ஆர். அவ்வப்போது மேடைகளில் அவிழ்த்துவிடும் அடுக்குமொழி வசனங்களை ஆஃப் செய்வதற்காக இது திட்டமிட்டு அவருக்காக உருவாக்கப்பட்ட சிக்கல்' என்ற ஊகமும் ஒருசிலரிடம் உள்ளது.

சிம்புவின் கார் சம்பவம் பற்றி டி.ரஜேந்தரிடம் பேசினோம். கடும்கோபத்தில் இருந்த அவர் நம்மிடம் பொரிந்து தள்ளிவிட்டார்.

``சிலம்பாட்டம் ஷூட்டிங்கிற்காக சிம்பு கடந்த மூன்றாம் தேதியே கொழும்புக்குப் போய் விட்டான். கார் தொலைந்து போன அன்று எனது இளைய மகன் குறளரசன்தான் அவனது நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தான். விருந்து முடிந்து வெளியில் வந்தபோது காரையும் டிரைவரையும் காணவில்லை என்று அங்கிருந்தே என்னிடம் போனில் சொன்னான். அதன்பின்னர், அவன் ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தான். அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் மறுநாள் காலை வரை காத்திருந்த நான், அன்று ஆயிரம் விளக்கு போலீஸில் காரைக் காணவில்லை என்று புகார் கொடுத்தேன்.

போலீஸ் விசாரணையில், எனது காரை டிரைவர் வசந்தகுமார் கடத்திச் சென்றபோது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே அது விபத்துக்குள்ளாகி நிற்பது தெரிய வந்தது. ஆனால் வசந்தகுமாரைப் பிடிக்க முடியவில்லை. சிம்புவின் வளர்ச்சியைப் பிடிக்காத ஒரு கூட்டம்தான் சதி செய்து, அவனைப் பற்றி மீடியாக்களுக்குத் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றது. மவுண்ட் ரோடில் உள்ள அந்த மாதிரி சிறிய ஹோட்டலுக்கெல்லாம்(!) சிம்பு செல்ல மாட்டான்.

ஏற்கெனவே நடிகை நயன்தாரா விஷயத்தில் அந்த நடிகை குனிந்தால், நிமிர்ந்தால், ஏன் அவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்தால் கூட சிம்புதான் எண்ணெய் ஊற்றி வழுக்கி விழ வைத்தார் என்று சிலர் வதந்தி பரப்பி வந்தார்கள். இப்போது கார் விஷயத்திலும் இதுபோல கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

என் மகனைப் பற்றி தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் மீது வழக்குத் தொடரப்போகிறேன்'' என்றார் அவர்.
காஞ்சிபுரம் எஸ்.பி. பெரியய்யாவிடம் கேட்டதற்கு, ``சிம்புவின் கார் டிரைவர் வீடு அரும்பாக்கத்தில் உள்ளது. ஓட்டலில் இருந்து அவர் காரை எடுத்துக் கொண்டு சிம்பு வீட்டிற்குச் செல்லாமல் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

மறுநாள், செங்கல்பட்டு வந்து அவரது நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜாலியாக உத்திரமேரூருக்குச் சென்றுள்ளார். பின்னர் சென்னை திரும்பும் வழியில்தான் விபத்து நடந்துள்ளது. இதனால், டிரைவர் தப்பி ஓடிவிட்டார். டிரைவருடன் வந்தவர்களை அழைத்து விசாரித்தபோதுதான் இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர். விபத்தில் காயம்அடைந்த இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர்!'' என்றார்.

சிம்பு தொடர்புடைய இந்த கார் சம்பவம் இன்னும் என்னென்ன திடீர் திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.