ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

தமிழகத்தில் பாதிப்பேர் ஏழைகள் -உலக வங்கியின் உலுக்கும் ரிப்போர்ட் !!

தமிழ்நாட்டில் ஏதோ பாலும், தேனும் ஓடுவதுபோல ஒரு நினைப்பில் நாம் இருக்கும் நிலையில் `தமிழகம் ஒரு பஞ்சைப் பராரி மாநிலம்' என்ற தகவலை வெளியிட்டு ஓர் உலுக்கு உலுக்கியிருக்கிறது உலக வங்கி.
உலக வங்கியால் எடுக்கப்பட்ட வறுமை குறித்த புள்ளிவிவரம், இந்திய அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பாதிப்பேர் ஏழைகள் என அதில் கூறியிருப்பது எதிர்காலம் குறித்த அச்சத்தை சாமானியர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக நாம் கல்பாக்கம் மருத்துவர் டாக்டர் வீ.புகழேந்தியைச் சந்தித்தபோது இதுபற்றி புதுப்புதுத் தகவல்களைப் புட்டுப்புட்டு வைத்தார் அவர். குறிப்பாக, ``தமிழகத்தில் இரண்டு பேரில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் ஏழை. இங்கே அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் முழுமையாக மக்களைச் சென்று சேராததுதான் தமிழகத்தில் ஏழைகள் பெருக்கெடுக்கக் காரணம். தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் நாற்பதாயிரம் குழந்தைகள் சத்துக்குறைவால் இறக்கின்றன'' என்று உலக வங்கி சர்வே தகவல்களை முத்தாய்ப்பாகக் கூறிவிட்டுத் தொடர்ந்தார் அவர்.
``இந்தியர்களில் 82 கோடியே எண்பது லட்சம் பேரின் (அதாவது 75.6 சதவிகிதம் பேரின்) தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. நமது மக்கள் தொகையில் 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளனர். இவர்களது தினசரி வருமானம் ரூபாய் ஐம்பதுக்கும் கீழேதான்.
80_90_ம் ஆண்டுவரை வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை மளமளவெனக் குறைந்து வந்தது. 1991_முதல் 2005 ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் `புதிய பொருளாதாரக் கொள்கைகள்' அறிவிக்கப்பட்ட பிறகுதான் வறுமை ஒழிப்பின் வேகம் குறைந்து போனது. முன்பெல்லாம், ஒருவர் நாளொன்றுக்கு 44 ரூபாய்க்குக் குறைவாகச் சம்பளம் வாங்கினால் அவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார் என்றார்கள். இப்போது 55 ரூபாய் சம்பளம் வாங்கினால்தான் வறுமைக்கோடு என்கின்றனர். அதன்படி பார்த்தால், தமிழகத்தில் இரண்டு பேருக்கு ஒருவர் பரம ஏழையாக இருக்கிறார் என சர்வே விவரம் தெரிவிக்கிறது.
வறுமை காரணமாக தமிழகத்தில் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச வசதிகள் கூட கிடைப்பதில்லை. ஆனால், கட்சி வித்தியாசம் இல்லாமல், எல்லா அரசியல்வாதிகளும் வறுமை ஒழிப்பைப் பற்றிப் பேசி வருவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
`இந்தியாவில் 60 சதவிகித குழந்தைகள் வறுமையின் வெளிப்பாடான சத்துக்குறைவால் இறப்பதாக' யுனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரி ஜார்ஜ் தாமஸ் என்பவர், தமிழகத்தில் வயதுக்கேற்ற எடை இல்லாமல் 33 சதவிகித குழந்தைகளும், மூன்று வயதிற்குட்பட்ட 73 சதவிகித குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அப்படியானால், இரும்புச் சத்து மாத்திரைகள், சத்துணவு, கர்ப்பிணிகளுக்கு சத்துணவுத் திட்டம், மகப்பேறு நிதியுதவி, குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைத் திட்டம், வாழைப்பழம் வழங்குதல் போன்ற பல ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்களால் எந்தவித மாற்றமும் வரவில்லை என்றுதானே அர்த்தம்? பல வருடங்களாகக் குழந்தைகளின் சத்துக்குறைவைப் போக்க இவற்றைச் செய்வதாக அரசு கூறினாலும், ஆண்டுதோறும் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் இறப்பதற்கு என்ன காரணம்?
அண்மையில் தமிழக திட்டக்குழுத் துணைத் தலைவர் நாகநாதன் ஒரு பேட்டியில், `இந்தியாவில் 150 ரூபாய்க்கு வாங்கும் செருப்பு அமெரிக்காவில் 750 ரூபாய். அங்கே நாற்பத்து நான்கு ரூபாய்க்கு வாங்கப்படும் உணவுப் பொருட்களை இங்கே 17 ரூபாய்க்கு வாங்கலாம்' என்று கூறியிருக்கிறார். ஆனால், நிஜ நிலவரம் என்னவென்றால், அமெரிக்காவில் ஒரு கையளவு கோழிக்கறி இரண்டு டாலருக்கு விற்கப்படுகிறது. ஒரு கைப்பிடி வெண்டைக்காய் அங்கே நான்கு டாலர். ஆனால், நம்மூரில் வெண்டையின் விலைக்கும், கோழிக்கறியின் விலைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அமெரிக்காவில் சத்துள்ள ஆகாரங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இங்கோ விலைவாசி விஷம் போல் ஏறிக்கிடக்கிறது.
`தமிழகத்தில் விவசாயக் கடன் ஏழாயிரம் கோடியைத் தள்ளுபடி செய்திருக்கிறோம். விவசாயக் கடனுக்கான வட்டியை ஏழு சதவிகிதத்திலிருந்து நான்கு சதவிகிதமாகக் குறைத்திருக்கிறோம்' என்று திட்டக்குழு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கடன் தள்ளுபடி எல்லாம் பணக்கார விவசாயிகளுக்குத்தான் பலனளித்திருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் ஒரு ஹெக்டேருக்கு 13 டன்னாக இருந்த நெல் உற்பத்தி, தற்போது மூன்று டன்னாகக் குறைந்து விட்டது. நிலம் கெட்டுப்போய், விளைநிலங்களின் பரப்பு குறைந்ததே இதற்குக் காரணம். தமிழக, மத்திய பட்ஜெட்டுகளில் இயற்கை வேளாண்மையை அதிகரிப்பது பற்றி ஒரு வார்த்தைகூட இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. 1947_ம் ஆண்டில் 60 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் விவசாய உற்பத்தி, நடப்பு ஆண்டில் வெறும் 18 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. பெரும் தொழில் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் ஆக்கிரமிப்பு போன்றவையும்தான் இதற்குக் காரணம். இதற்கிடையே இதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் நாகநாதன் போன்றவர்கள் அமெரிக்காவில் செருப்பு நிலவரம் பற்றிப் பேசுகிறார்கள்.
90_ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த விவசாயம், இன்று ஐந்தாவது இடத்திற்குப் போய்விட்டது. பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன், `நம் நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை அனைத்து மக்களுக்கும் கொடுத்துவிட முடியும். ஆனால், சமமான பங்கீடு என்பது இங்கில்லை' என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு உற்பத்தி, சந்தை வியாபாரிகளிடம் முடங்கிக் கிடக்கிறது. அரசின் திட்டங்கள் ஊழல், சுரண்டல் இல்லாமல் மக்களிடம் சென்று சேர்ந்தால் அறக்கட்டளைகள், இலவசங்கள் என்ற வார்த்தைகளே இல்லாமல் போய்விடும். இல்லாவிட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக வங்கி வெளியிடப் போகும் சர்வே விவரத்தில், உலக ஏழைகளில் நாம் கணிசமான அளவு இன்னும் முன்னேறியிருப்போம்'' என ஆதங்கத்தோடு கூறி முடித்தார் டாக்டர் புகழேந்தி.இதுபற்றி திட்டக்குழு அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, "உலக வங்கியின் இந்த சர்வே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட சர்வே. ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்பின் வேகம்
அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி என்பது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. அதேபோல், விவசாயத்திலும், ஐந்து மில்லியன் டன்னாக இருந்த உணவு உற்பத்தி தற்போது பத்து மில்லியன் டன்னாக அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் 29 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வேலை உறுதித் திட்டத்தால் பெருமளவு பலன் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியும் ஆறு சதவிகிதத்தைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு, தமிழகத்தை ஏழைகள் மாநிலம் என்றெல்லாம் சொல்வது தேவையற்றது'' என நீண்ட விளக்கம் கொடுத்தனர் அவர்கள்.
`சத்துக்குறைபாட்டால் குழந்தைகள் இறப்பு அதிகரித்திருக்கிறதாமே?' என்ற கேள்வியை சமூக நல வாரியத் தலைவி சல்மா முன்பு வைத்தோம். "சத்துணவில் மூன்று முட்டை உள்ளிட்ட திட்டங்கள் தற்போதுதான் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இதன் பலன் தெரிய கொஞ்சம் காலதாமதமாகும். அரசின் முட்டைத் திட்டத்தால் வகுப்பறைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எங்கள் வாரியத்தின் மூலம் 1200 காப்பகங்கள் செயல்படுகின்றன. இதில் படிக்க வரும் மாணவர்களைவிட, மாநில அரசின் அங்கன்வாடிக்குச் செல்லும் சிறார்கள் அதிகம். காரணம், இலவசத் திட்டங்கள்தான். வெகு விரைவிலேயே, சத்துக்குறைபாடு என்ற நோயை விரட்ட அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக எடுத்து வருகிறோம்'' என்றார் சல்மா தெளிவாக.
இப்போதைய தமிழகத்தின் உண்மை நிலை இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகுதான் தெரியவரும் என்கிறார்கள் நிபுணர்கள். தமிழகம் பற்றி ஓர் இனிப்பான செய்தி வர நாம் இன்னும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.

மின்வெட்டை சமாளிக்க ஆற்காட்டற்கு ஓர் யோசனை !!

மக்களை மட்டுமல்ல, தமிழக அரசையும் `வேர்க்க' வைத்துக் கொண்டிருக்கிறது `மின்வெட்டு' விவகாரம். தொழிற்சாலைகள் முடங்கியதால் பலஆயிரம் கோடி இழப்பு! போட்டது போட்டபடி, நட்டது நட்டபடி இருக்கிறது விவசாயம்! வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தொழிலாளர்களுக்கு. போட்ட முதல் முடங்கிப் போனதே என்ற கவலை முதலாளிகளுக்கு. இப்படி எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல முடியாமல் `இருண்டு' போய்க்கிடக்கிறார் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
அரசியல் கட்சிகள் பலவும் `காய்ச்சி' எடுத்த நிலையில் அவசரமாக மின்சாரம் கேட்டு டெல்லிக்குப் போனார் ஆற்காட்டார். தமிழகத்தின் மின்பற்றாக்குறை `1200 மெகாவாட்' என்ற நிலையில் 600 மெகாவாட் மின்சாரத்தைத் தர முன்வந்தது மத்தியஅரசு. மிச்சத்துக்கு என்ன செய்வது என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வி. இந்நிலையில் வருண பகவான் அருள்பாலித்து மழை இனி கொஞ்சம் அதிகம் பெய்து மின் உற்பத்தி நடந்தாலும், அடுத்த நான்காண்டு காலம் வரை மின்வெட்டு அன்றாட வாடிக்கையாகத்தான் இருக்கும்'' என்பது மின்வாரியத்தின் ரகசியப் புலம்பல்.
`இந்தநிலையில் மின்தட்டுப்பாட்டுக்கு என்னதான் தீர்வு? இதிலிருந்து மீள வழியே இல்லையா?' என்ற நம் கேள்விக்கு பாசிட்டிவ்வான பதில் தர முன்வந்தார் டாக்டர் வேதமூர்த்தி. அண்ணா பல்கலைக்கழக மெக்கானிக்கல் இன்ஜினீயிரிங் பிரிவின் தலைமைப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற அவரை நாம் சந்தித்துப் பேசினோம்.
``மின்தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் புதிய மின் இணைப்புகள், புதிய தொழிற்சாலைகள், புதிய அடுக்கு மாடிவீடுகள் உருவாகிக்கொண்டே போனால் மின் தட்டுப்பாடு வராமல் என்ன செய்யும்? இந்நிலையில் மத்திய அரசு தருவதாகச் சொல்லும் 600 மெகாவாட் கடலில் கரைத்த பெருங்காயத்தின் கதைதான்.
அனல்மின் உற்பத்திக்கு நிலக்கரி வேண்டும். அதில் அதிக செலவு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் கேடும் உண்டு. நீர்த்தேக்கங்கள் எப்போதும் நிரம்பி வழிய வாய்ப்பில்லை என்பதால் புனல் மின்சாரத்துக்கும் வழியில்லை. காற்றாலைகளால் நம் தேவைக்கேற்ப மின் உற்பத்தி செய்து விட முடியாது. இந்தநிலையில் நமக்கு ஆபத் பாந்தவனாக இருப்பது அணுமின் நிலையங்கள்தான். அதற்காகத்தான் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். கூடங்குளம் அணுஆலையே இன்னும் முழுமையடையாத நிலையில், அணுஒப்பந்தம் மூலம் புதிய ஆலைகள் அமைத்து மின்வெட்டிலிருந்து தப்பிக்க 7 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகிவிடும்.
அப்படியானால் மின்வெட்டைச் சமாளிக்க வழியே இல்லையா? என்றால், இருக்கிறது என்பதுதான் எனது பதில். அமெரிக்காவில் `கேட்டர் பில்லர்' என்ற நிறுவனம் ஆயிரம் கிலோவாட் அதாவது ஒரு மெகாவாட், 2 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்கிறது. (நம்நாட்டில் அசோக் லேலண்ட் நிறுவனமும் இதைப்போல ஒரு மெகாவாட் ஜெனரேட்டரைத் தயாரிக்கிறது. ஆனால் டிமாண்ட் காரணமாக உடனே அதைப் பெற முடியாது) அமெரிக்க ஜெனரேட்டரின் விலை ஒரு கோடி ரூபாய். ஒரு பெரிய கண்டெயினர் போல இருக்கும் இந்த ஜெனரேட்டர்களில் 40 ஜெனரேட்டர்களை சென்னையில் அங்கங்கே நிறுவினால், சென்னையில் மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்து விடலாம். இவற்றை நிறுவ மின்வாரியத்திடம் இடமும் இருக்கிறது.
டீசலில் இயங்கும் இந்த ஜெனரேட்டர் ஒரு லிட்டருக்கு 4 யூனிட் மின்சாரம் தரும். அதன்படி ஒரு யூனிட் மின்சாரம் 15 ரூபாய் ஆகும்.. இது அதிகமாச்சே? என்று யோசிக்கக் கூடாது. நாம் வெளி மாநிலங்களிலிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை 10 ரூபாய்க்கு மேல் கொடுத்துத்தான் வாங்குகிறோம். அதோடு மின்சாரத்தை இடம்விட்டு இடம் எடுத்துச் செல்லும் போது `லைன் வேஸ்ட்' என்ற அடிப்படையில் நான்கில் ஒரு பகுதி மின்சாரம் வீணாகிவிடும். அமெரிக்க ஜெனரேட்டர் மூலம் அங்கங்கே மின்சாரம் தயாரித்தால் `லைன் வேஸ்ட்' என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
அதோடு அணுமின், அனல்மின் நிலையங்களுக்காகத் தேவைப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், நிலக்கரிச் செலவு, இறக்குமதி, கப்பல், லாரி, ரயில் செலவு எல்லாம் அமெரிக்க ஜெனரேட்டர் விஷயத்தில் இருக்காது. பிஜி, ரஷ்யாவின் ஒரு பகுதியான சைபீரியா, ஏன் நம் அண்டை நாடான சீனாவில் கூட இந்தமுறையில் மின்சாரம் தயாரிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது தமிழகம் ஏன் இந்த விஷயத்தில் ஒரு முன்னோடியாக இருக்கக் கூடாது?
`சரி! இந்த ஜெனரேட்டர்களுக்கு டீசல் தேவைப்படுவதால் டீசல் தட்டுப்பாடு வராதா?' என்று கேட்கலாம். டீசலை வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்ய முடியும். அதோடு இந்த ஜெனரேட்டர்களுக்குப் பயன்படும் டீசலுக்கான வாட் வரியை நீக்கி, அரசு மானியம் அளிக்க வேண்டும். அப்படி அளித்தால் இன்னும் குறைவான விலையில் மின்சாரத்தைப் பெற முடியும்.
இவ்வளவு பொருட்செலவில் ஜெனரேட்டர் வாங்க மின்வாரியத்தால் முடியுமா? என்ற கேள்வி கிளம்பலாம். காற்றாலைகளைப் போல இந்த ஜெனரேட்டர் பிளாண்ட்களையும் தனியாரிடம் ஒப்படைத்து, அவர்களிடம் ஒப்பந்தம் போட்டு அரசு மின்சாரத்தை வாங்கலாம். தனியார் சொந்த முதலீட்டில் தயாராகும் இந்த மின்சாரத்தை வாங்கிக் கொள்வதாக அரசு உத்தரவாதம் அளித்தாலே போதும். இந்த ஜெனரேட்டர் திட்டத்தைச் செயல்படுத்தினால் ஓராண்டுக்குள் மின் தட்டுப்பாட்டில் இருந்து நாம் தப்பிக்கலாம்.
தமிழகத்தில் இப்போது நிலவும் மின்தட்டுப்பாட்டால் ஆலைகள் முடங்கிப்போய் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் ஜெனரேட்டர் மின்சாரத் தயாரிப்பில் யூனிட் விலை அதிகம் என்று நாம் சால்ஜாப்பு சொல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதே நல்லது. யூனிட் 15 ரூபாய் என்று யோசித்துக் கொண்டிருந்தால் பல தொழிற்சாலைகள் மூலம் வர வேண்டிய இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பாகிவிடும்'' என்ற வேதமூர்த்தி, இன்னொரு தகவலையும் சொன்னார்.
``தற்போதைய மின் தட்டுப்பாட்டுக்கு மூலகாரணமே மின்வாரிய உயர் அதிகாரிகள்தான். அவர்கள் சரியாகத் திட்டமிடாததுதான் மின்வெட்டுக்குக் காரணம். அமைச்சர் என்ன செய்வார்? அதிகாரிகள் சொல்வதைத்தானே அவர் கேட்பார்? மின்துறையில் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பொறியாளர்களாக நுழைந்தவர்கள்தான் அதிகம். அந்த நிலையை மாற்றி உலக மின்நடப்பு தெரிந்த, ஆய்வியல் அறிவுள்ளவர்களைச் சேர்த்தால் மின்சார வாரியம் முன்னேறும்.
உலக நாடுகளில் ஒவ்வொரு துறையும் புதிய கண்டுபிடிப்பு, ஆய்வுகளுக்காக மொத்த பட்ஜெட்டில் 2 சதவிகிதத்தை பயன்படுத்துகிறது. அதுபோல மின்வாரியமும் செய்ய வேண்டும். மின் உற்பத்தியில் ஏற்படும் வீண் இழப்புகளைக் கண்டுபிடிக்க கமிட்டி அமைக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது மின்தேவை எவ்வளவு? முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கான உற்பத்தியை எப்படிப் பெருக்குவது? என்பதை அந்த ்கமிட்டி ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
இப்படிச் செய்வதன் மூலம்தான் மின்வெட்டை சமாளிக்க முடியும். அணுமின் போன்ற மற்ற மின் உற்பத்திகளோடு ஜெனரேட்டர் மின்உற்பத்தியையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மின் பற்றாக்குறையையும் சமாளிக்கலாம். மக்களின் குமுறலுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம்'' என்றார் அவர், அடக்கமாக.
தமிழக அரசு இதற்கான முயற்சிகளில் இறங்கலாமே?...

கலைஞருக்கே செக் வைத்த மாறன் பிரதர்ஸ் !!!!


ஒரு கேலிச்சித்திரம் இந்த அளவுக்கா வேலை செய்யும்? என்ற கேள்வியைக் கிளப்பிவிட்டிருக்கிறது தினமலர் வெளியிட்ட ஒரு கார்ட்டூன். அதன் வேலூர் பதிப்பில் வெளியான அந்தக் கார்ட்டூனைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கச்சைகட்ட, அவர்களுடன் இணக்கமாகப் பேசி ஒரு சமரசத்துக்கு வந்தது தினமலர். ``இதன்பிறகும் சன் டி.வி. தேவையில்லாமல் அந்த ஆர்ப்பாட்டச் செய்தியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது தவறு'' என்று தினமலர் குரல் கொடுக்க, அதன்பின்தான் பிரச்னை உண்மையாகவே ஆரம்பமானது.
இதற்குமுன் பலமுறை தினமலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தும் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மேற்படி புகார் தொடர்பாக முதல்வரைச் சந்திக்க கிருஷ்ணமூர்த்தி விரும்பியபோது, முதல்வர் போன் மூலம் அவருடன் உடனே உரையாடியிருக்கிறார். அப்போது சன் டி.வி. மற்றும் சில நாளிதழ்கள் மீது லேசான வருத்தத்துடன் முதல்வரிடம் கருத்து தெரிவித்தாராம் கிருஷ்ணமூர்த்தி.
இதில் முழுவதுமாக விஷயத்தைக் கிரகித்துக் கொண்ட முதல்வர், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் மனுவைத் தரும்படி சொல்லியிருக்கிறார். தினமலர் தரப்பு இதில் தயக்கம் காட்டிய நிலையில், உள்துறை உயர் பெண்அதிகாரி ஒருவரும், விலை உயர்ந்த கல்லின் பெயர் கொண்ட ஓர் உயர் அதிகாரியும், தினமலருக்கு போன் செய்து சன் டி.வி. மீது எழுத்து மூலம் புகார்தரச் சொல்லி அழுத்தியிருக்கிறார்கள்.
இதுபற்றி கோட்டை வட்டார உயர்அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசியபோது, ``வழக்கத்துக்கு மாறாக, இந்த சன் டி.வி. பிரச்னைக்காக பல்வேறு அதிகாரிகள் பல மணிநேரம் கோட்டையில் ஆலோசனை(!) நடத்தினார்கள். அப்போது சன் டி.வி. மீது கலைஞருக்கு இருக்கும் கடும்கோபம் பற்றி அதில் அலசப்பட்டது. கலைஞர் அண்மைக் காலமாக சன் செய்திகளையே பார்ப்பதில்லை என்ற தகவல்கூட அதில் பரிமாறப்பட்டது. `தினமலர் விவகாரத்தில் அந்த டி.வி.யின் போக்கு சற்று ஓவராகவே இருப்பதால், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து உள்ளே தள்ளுங்கள்' என்று கலைஞர் கூறிய தகவலும் அந்த ஆலோசனையில் அலசப்பட்டது. அப்படி ஆலோசித்தபின் அந்த அதிகாரிகள் தினமலர் செய்தி ஆசிரியர் பார்த்திபனிடம் எழுத்துமூலம் புகார் வாங்கக் கோரி போலீஸ் தரப்பிடமும் வற்புறுத்தினார்கள்'' என்றார் அந்த அதிகாரி.
அதன்படி தினமலர் செய்தி ஆசிரியர் பார்த்திபன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சேகரிடம் வந்து எழுத்து மூலம் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் குறிப்பிட்ட எந்த சட்டப்பிரிவின் கீழும் வழக்குத் தொடுக்க வழியிருக்காது என்பதால், புகாரில் புதிதாக சில வரிகளைச் சேர்க்குமாறு கமிஷனர் அலுவலகத் தரப்பு பார்த்திபனிடம் சொல்லியிருக்கிறது. உடனே பார்த்திபன் அவரது நிர்வாகத்திடம் இதுபற்றிக் கேட்டு சில வரிகளை புதிதாகச் சேர்த்து புகார் எழுதித் தந்திருக்கிறார். அதையடுத்து, சன் டி.வி.மீது இ.பி.கோ. 153 ஏ, (இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்கி பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பது) மற்றும் 505-2 (செய்தி மூலம் அவதூறு பரப்பி மோதலை உண்டாக்குவது) என்ற இரு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் புகார் மனு அதன்பின் மத்தியக் குற்றப்பிரிவிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதுபோன்ற அவதூறு செய்திகள் தொடர்பாக சன் டி.வி.யில் யார்மீது வழக்குத் தொடரலாம் என மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் யோசித்தபோது, அவர்கள் மனதில் பளிச்சென தோன்றிய பெயர் ராஜா. தி.மு.க. தரப்பு கலைஞர் டி.வி.யை ஆரம்பித்தபோது, அதற்கு மறைமுகமாக பல முட்டுக்கட்டைகளைப் போட்டவர் சன் டி.வி.யின் செய்தி ஆசிரியர் ராஜாதான் என்ற எண்ணம் தி.மு.க. தரப்பில் சிலரிடம் இருந்திருக்கிறது. அதிலும் கலைஞருக்கு சன் டி.வி. ராஜாவின் போக்கு கட்டோடு பிடிக்காது என்பது சில அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்த நிலையில், மேற்படி அவதூறு செய்திக்கு அவர்தான் பொறுப்பாளி என்ற ஒரு முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் ராஜாவுக்கு சம்மன் அனுப்பியது மத்தியக் குற்றப்பிரிவு.
இதை எப்படியோ சன் டி.வி. நிருபர்கள் மூலம் தெரிந்து கொண்டு அலர்ட் ஆன ராஜா, செல்போனை ஆஃப் செய்து விட்டு உடனே அந்தர்தியானமானார். அவரை போலீஸார் பிடித்து சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேஷனில் வைத்து விசாரிப்பதாக புரளி ஏற்பட்டு, ஒருபுறம் பரபரப்பைக் கிளப்ப, மறுபுறம் கோபாலபுரத்தில் உள்ள முரசொலி மாறன் வீட்டில் பதுங்கி இருந்தாராம் ராஜா. ஒருநாள் பகல் முழுவதும் அங்கிருந்த அவரை அதன்பிறகு சிறப்பு விமானம் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பவும் ஏற்பாடு நடந்ததாம்.
அதேசமயம், இந்த வழக்கை எப்படிச் சமாளிக்கலாம் என யோசித்த சன் டி.வி., ``எங்கள் செய்திகளுக்கு ராஜா பொறுப்பாளர் இல்லை. சன் டி.வி.யின் தலைமை நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம்தான் பொறுப்பாளர்'' என்று புதிதாக ஒரு காயை நகர்த்தியது. முரசொலி செல்வம், முதல்வரின் மனசாட்சியான மாறனின் தம்பி என்பதுடன் அவர் கலைஞரின் மகளான செல்வியின் கணவர். கூடவே கலைஞரால் அவர் தூக்கி வளர்க்கப்பட்டவர் என்பதால், இனிமேல் இந்தப் பிரச்னை அப்படியே ஆஃப் ஆகிவிடும் என்ற எதிர்பார்ப்பு சன் டி.வி. தரப்பிடம் இருந்திருக்கிறது.
ஆனால் என்ன ஆச்சரியம்? இந்தத் தகவல் கலைஞரின் காதுகளுக்கு அதிகாரிகள் மூலம் எட்டியபோது, அவர் அலட்டிக் கொள்ளவே இல்லையாம். ``யாராக இருந்தால் என்ன? சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுங்கள்'' என்று கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறார் கலைஞர். அதையடுத்து வரும் 15_ம் தேதி முரசொலி செல்வம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சன் டி.வி. அலுவலகத்துக்கு சம்மன் அனுப்பியது மத்தியக் குற்றப்பிரிவு. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சன் டி.வி. தரப்பும் ஆடிப் போனதாகக் கேள்வி.தற்போது பெங்களூருவில் வகிக்கும் முரசொலி செல்வம் விசாரணைக்காக சென்னை வருவாரா? என்ற கேள்வியை அவரது தரப்பிடம் நாம் கேட்டோம்.
``முரசொலி செல்வம் 15-ம் தேதியளவில் சென்னைக்கு வருவது உறுதி. ஆனால் விசாரணையில் ஆஜராக அவர் வரவில்லை. முரசொலி செல்வத்திடம் இருந்து அவர்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறார்களோ, அதை எழுத்துமூலமாகக் கேட்டால் முரசொலி செல்வம் அதற்குப் பதிலளிக்கத் தயார். அதையும் மீறி இந்தப் பிரச்னைக்காக அவரைக் கைது செய்ய முயன்றால், அனைந்திந்திய அளவில் அதை பிரச்னையாக்கி விடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதையும் தாண்டி முரசொலி செல்வத்தை கூண்டில் ஏற்றினாலும் நாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. காரணம், ஏற்கெனவே கலைஞருக்காக சட்டமன்றக் கூண்டில் ஏறியவர்தான் முரசொலி செல்வம்'' என்றனர் அவர்கள்.
போலீஸார் கேட்க விரும்பும் கேள்விகளை எழுத்துப் பூர்வமாகக் கேட்டால் அதற்குப் பதிலளிக்கத் தயார் என்று முரசொலி செல்வம் தரப்பு கூறியிருப்பதற்கு வேறொரு பின்னணியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கேள்விகளைத் தயாரிக்க போலீஸாருக்கு சிறிது கால அவகாசம் கண்டிப்பாகத் தேவைப்படும். அந்தக் கால அவகாசத்துக்காகவே முரசொலி செல்வம் தரப்பு இப்படியொரு கோரிக்கையை முன்வைக்கப் பார்க்கிறது என்கிறார்கள் வேறுசிலர்.
இதற்கிடையே விவகாரம் முரசொலி செல்வத்தின் மீது திரும்பியதை அடுத்து அவரது மனைவி செல்வி இண்டொருநாளில் சென்னை வந்து கலைஞரைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கோபாலபுரம் குடும்பத்தில் நிலவிய மனக்கசப்பு காரணமாக மிக மோசமான ஒரு முடிவை எடுத்ததாகக் கூறப்படும் செல்வி, இப்போது தன் கணவருக்காக எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் பல்வேறு தரப்பினரிடம் நிலவுகிறது. இதற்கிடையே பிரச்னை அப்படியே இனி அணைந்து போகும் என்ற கருத்தும் பலரிடம் நிலவுகிறது.
எப்படியோ? தங்கள் தலைக்கு வந்த பிரச்னையை இப்போது சாமர்த்தியமாக வேறு திசைக்குத் திருப்பியிருக்கிறது சன் டி.வி. தரப்பு. இதன்மூலம் கலைஞருக்கே செக் வைத்திருக்கிறார்கள் மாறன் சகோதரர்கள். இந்த ஆட்டத்தின் அடுத்த காயை யார்? எப்படி? நகர்த்தப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி.