சனி, 23 ஆகஸ்ட், 2008

குசேலன் தரமில்லை சீறுகிறார் மலையாள டைரக்டர்








குசேலனின் `அக்மார்க்' ஒரிஜினலான `கதபறயும்போள்' படத்தின் டைரக்டர் மோகனனிடம் `குசேலன்' பார்த்தீர்களா என்றோம். பொரிந்து தள்ளிவிட்டார்.


``கதபறயும்போள் கதை ஸ்ரீனிவாசன் சாரோடது. அந்தப் படத்தைப் பொறுத்தவரை நட்பு குறித்த ஒரு சின்ன இழைதான் கதை. நான் டைரக்ட் பண்ண முதல் படம் அது. நான் எர்ணாகுளத்தில `குசேலன்' படம் பார்த்தேன். படம் துவங்கினதுமே ஷாக் ஆயிட்டேன். வடிவேலுவின் மனைவி எக்சர்சைஸ் செய்யும் சீன் துவங்கியதுமே, `என்னடா இது மலையாளத்துல இப்படி ஒண்ணும் நான் சீன் வைக்கலையே'ன்னு யோசிச்சுகிட்டிருக்கும்போதே படம் எங்கேயோ போயிட்டிருக்கிற மாதிரி இருந்துச்சி.

மலையாளத்துல இடைவேளைக்குக் கொஞ்சம் முன்னால ஒரு சீன்ல மட்டுமே மம்முட்டி சூப்பர்ஸ்டாரா வருவார். ஆனா குசேலனில் முதல்லேயே ரஜினியை ஏகப்பட்ட பில்டப் கொடுத்து அறிமுகப்படுத்துறாங்க. இதனால் கதையோட மெயின் `நாட்' அடிபட்டுப் போச்சு. இங்கே கதபறயும்போள் பிரிவியூவின் போது இடைவேளையில் மம்முட்டி ரசிகர்கள் `என்ன சார் இப்படி படம் எடுத்திருக்கீங்கன்னு'' வருத்தமா கேட்டாங்க. ஆனா படம் முடிஞ்சதும் மம்முட்டி ரசிகர்கள் என்னைக் கட்டிப்பிடித்து `சார் உண்மையிலேயே மம்முட்டி சாரோட நல்ல படத்தை டைரக்ட் செய்திருக்கீங்க. கிளைமாக்ஸ்ல அழுதிட்டேன்'னு பாராட்டினாங்க.


அது மட்டுமில்லாம நயன்தாராவை காட்டியிருக்கிற விதமும் சரியில்லை. எதுக்கு நயன்தாரா இந்த மாதிரி வரணும்னு தெரியல. மலையாளத்துல இரண்டே இரண்டு பாட்டுதான் வைச்சேன். மலையாளத்தில் எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு படத்தை தமிழில் இப்படி எடுத்திருப்பதில், ஒருடைரக்டர் என்ற நிலையில் இல்லாமல் ஒரு ரசிகன் என்ற முறையில் எனக்கு வருத்தம்தான்.''


குசேலன்ல உங்களுக்கு எதுவுமே பிடிக்கலையா?
``மலையாளத்தில் சீனிவாசன் சார் செய்த பாத்திரத்தை அச்சு அசலா அப்படியே செய்திருந்தார் பசுபதி. அவருக்கு என்னோட பாராட்டுக்களைச் சொல்லுங்கள். அவரோட நடிப்பு உண்மையிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. தமிழில் இப்படி ஆபாசங்களைப் புகுத்தியதை ரசிகர்கள் ரசிப்பார்களா என்ன? நான் எடுத்ததை அப்படியே எடுத்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து.
அப்புறம் `சின்னம்மா செல்லம்மா' பாடல்காட்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. குடும்பப் பாசத்தைச் சொல்லியதாய் இருந்தது. அந்தப் பாட்டு ஷூட் பண்ணின விதமும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அடடே மலையாளத்திலயும் இப்படி ஒரு பாட்டு வைச்சிருக்கலாம்னு தோணிச்சு. ஆனால் ஏரியில் டால்பின் துள்ளுற மாதிரி சீன் இருந்ததைப்பார்த்து சிரிப்புதான் வந்தது. கடைசி 20 நிமிஷம் ரஜினி சாரோட நடிப்பு உண்மையிலேயே அபாரம். அவரு எளிமையா அட்டகாசமா நடிச்சிருந்தாரு. மலையாளத்தைப்போலவே தமிழிலும் கிளைமாக்ஸ் உருக்கமா இருந்தது. அதுவும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.''
மலையாளத்தில் வெற்றி பெற்ற `உதயனானுதாரம்' தமிழில் `வெள்ளித்திரை'ன்னு வந்துச்சி. இப்போது குசேலன். இதுக்கு முன்னாடியும் பல மலையாளப் படங்கள் வந்திருக்கு. ஆனால் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன படங்கள் தமிழில் வரும்போது மலையாளப்படம் தந்த திருப்தி, மலையாளப்படத்தில் இருந்த தரம் இல்லை என்பது ரசிகர்கள் கருத்தாக உள்ளது. இதுபத்தி உங்கள் கருத்து?
``படத்தை ரீமேக் செய்யும்போதே என்ன மாற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறித்தான் உரிமையை படத்தயாரிப்பாளர் விற்கிறார். இதனால் மூலக்கதையிலிருந்து படத்தை ரீமேக் செய்யும்போது நிறைய மாற்றங்கள் செய்கிறார்கள். இதற்கு ஒன்றும் செய்யமுடியாது. ஏன் இப்படி காட்சி வைத்தீர்கள் என்று டைரக்டரிடம் கேட்கமுடியாது. ஆனால் ரசிகர்கள் ஏமாற்றமடை கிறார்கள் என்பது உண்மைதான். `கத பறயும்போள்' கதையோட கிட்டத்தட்ட ஒரு வருஷம் நானும் சீனிவாசன் சாரும் வாழ்ந்திருக்கோம். கதை எழுதி முடிச்சு அவர் ஸ்கிரிப்டை என்கிட்டே தரும்போது கடைசி பக்கங்கள் கண்ணீரால் நனைந்து போயிருந்தது. ரீமேக் பண்ணுறவங்க என்ன செய்யறாங்க..? அதுல அப்படி வைச்சிருக்காங்க. நாம இப்படி எடுப்போம்னு அவங்க விருப்பத்துக்கு எடுப்பாங்க... அதுலதான் கெட்டுப் போயிடுது. குசேலனைப் பொறுத்தவரை கிளாமரான காட்சிகள் தேவையில்லை என்பதே என்னோட கருத்து. அப்படியே எடுத்திருந்தா படம் நல்ல தரமா இருந்திருக்கும்'' என்கிறார் மோகனன்.
அடுத்த முறையாவது தமிழ் இயக்குநர்கள் இவர் சொல்வதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.- திருவட்டார் சிந்துகுமார்