வெள்ளி, 10 அக்டோபர், 2008

உலகின் தற்பொழுதைய ஏழு அதிசயங்கள் - சுவாரசிய தகவல்கள் -

கிசாவின் பெரிய பிரமிட், ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகும். இதுவே உலகின் மிகப் பிரபலமான பிரமிட்டுமாகும். இது 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும். இது கட்டிமுடிக்கப்பட்டது, கிமு 2570 என்று கணக்கிடப்பட்டுள்ளது. நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கிசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் இதுவே.

பெரிய பிரமிட்137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 ஹெக்டேயர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமான ஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தில் சரிந்துள்ளன.

பிரமிட், ஒவ்வொன்றும் இரண்டு தொடக்கம் நான்கு தொன்கள் வரை நிறையுள்ள, சுண்ணக்கல், பசோல்ட், கருங்கல் போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த நிறை 7 மில்லியன் தொன்கள் எனவும், கன அளவு 2,600,600 கன மீட்டர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது


சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China"நீண்ட நகர் (கோட்டை)")என்பது, மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'காட்டுமிராண்டி'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காகக் கட்டப்பட்ட அரண் ஆகும். சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; அவர்கள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே நோக்கம் ஆகும்.
இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது
இச் சுவர், குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. சண்டையிட்டு வந்த நாடுகளினால் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது. பின்வந்த வம்சங்களினால் திருத்தப்பட்டும், விரிவாக்கப்பட்டும் வந்த இச்சுவர், மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது

தாஜ் மஹால் (Taj Mahal), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மஹால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

ரோமானிய கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு.
இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் (amphitheatre) எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் வட்டவடிவ அரங்கம் என்ற பொருள் கொண்டது. இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, பிளேவியன் அம்ஃபிதியேட்டர் என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.
கி.பி 72 ஆம் ஆண்டில், வெஸ்பாசியன் (Vespasian) என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ஆம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. இது நீரோ மன்னனின் மாளிகைக்கு அருகில், நீரோவின் ஏரி இருந்த இடத்தில் அமைந்துள்ளது. கொலோசியத்தின் திறப்புவிழாவுக்கான நூறு நாள் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது 9,000 காட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக பண்டைய ரோமானிய வரலாற்றாளரான டியோ கசியஸ் (Dio Cassius) என்பவர் கூறியுள்ளார்.



சிச்சென் இட்சா (Chichen Itza) என்பது மெக்சிகோ நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது மாயன் நாகரீகக் காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயம் நாகரீகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி.பி. 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது.
கி.பி 987 ல், தொல்ட்டெக் அரசனான குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 1221 ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் (Mayapan) என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது.




பெற்றா கோட்டை கிரேக்க மொழியில் பாறையை குறிக்கும் .ஜோர்டான் நாட்டில் உள்ள கருவூலம் . ஹோர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை ,ஆயிரத்தி எட்நூற்றி பனிரெண்டு வரை மேற்கு நாடுகளுக்கு தெரியாமலே இருந்தது .


மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்[1]. இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.

இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது