வியாழன், 11 செப்டம்பர், 2008

மின்வெட்டால் லாபம் பெரும் தொழில்!!



கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல மின்வெட்டால் தமிழகமே இருண்டு கிடக்கும் இந்த நேரத்திலும் சிலர் `ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது' என்று உரக்கப் பாடி வருகிறார்கள். யார் அந்த புண்ணியாத்மாக்கள்? வேறு யார்? மின்சாரம் இல்லாத நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க வீடுகளிலும், அலுவலகங்களிலும் பயன்படுத்தப்படும் இன்வர்ட்டர், யூ.பி.எஸ்., ஜெனணேீரட்டர்கள், எமர்ஜென்ஸி விளக்குகளைத் தயாரிப்பவர்கள்தான் அவர்கள். கரண்ட் கட்டால் இவர்கள் காட்டில் அடைமழை.
ஊர்த்திருவிழா நேரத்தில் தாற்காலிகமாக உருவாகும் திடீர் கடைகள் போல இந்த இன்வர்ட்டர், யூ.பி.எஸ்... இத்யாதிகளை உருவாக்குபவர்கள் ஒரு பக்கம் கொழிக்க, மறுபக்கம் எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்ற கதையாக, இவர்களில் பலர் தரமில்லாத பொருட்களை மக்கள் தலையில் கட்டும் வேதனையும் நடந்து கொண்டிருக்கிறது.
ஒருகாலத்தில் இன்வர்ட்டர், யூ.பி.எஸ், ஜெனரேட்டர்கள், எமர்ஜென்ஸி விளக்கு போன்ற அயிட்டங்களைப் பயன்படுத்துவது ஆடம்பரத்தின் அடையாளமாக இருந்தது. இப்போதோ கரண்ட் கட் அடிக்கடி கண்ணைக் கட்டும் நிலையில், `நாமளும்தான் ஒண்ணு வாங்கிப் போடுவோமே' என்ற நிலைக்கு வந்து விட்டனர் ஸ்ரீமான் பொதுஜனங்கள்.
இவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது `இன்வர்ட்டர்' கருவிதான். கையில் காசில்லாதவர்கள் கூட கடனை உடனை வாங்கியாவது ஒரு இன்வர்ட்டர் வாங்கியே தீர்வது என்ற தீர்க்கமான முடிவில் இருக்கிறார்கள். வழக்கமாக கோடையில் மின் தட்டுப்பாடு ஏற்படும்போது மட்டும்தான் மேற்கண்ட மின்உற்பத்தி சாதனங்களின் தேவை அதிகரிக்கும். இப்போதோ காலமில்லாத காலத்தில் இந்த மின்உற்பத்திப் பொருட்களின் தேவை அதிகரித்து விட்டது. அதோடு விலையும் உயர்ந்து விட்டது.
இன்வர்ட்டர்களை வாங்க ஒருபக்கம் பொதுமக்கள் படாதபாடுபடும் நிலையில், இன்னொரு பக்கம் இவற்றின் திடீர்த் தேவையைச் சமாளிக்க அதன் உற்பத்தியாளர்கள் படும்பாடு இருக்கிறதே, அப்பப்பா. தங்கள் தொழிலாளர்களை தாஜா செய்து வொர்க் ஷாப்பிலேயே தங்க வைத்து, சாப்பாடு போட்டு வேலை வாங்குகிறார்கள். இருந்தும்கூட தேவைக்கேற்ப இவர்களால் சப்ளை செய்ய முடியவில்லை. திருச்சி சிந்தாமணி பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக, இன்வர்ட்டர்களைத் தயாரித்து விற்கும் குமார் என்பவரிடம் இதுபற்றிப் பேசினோம்.
"முன்பெல்லாம் ஒரு மாதத்துக்கு அறுபது இன்வர்ட்டர்கள்தான் விற்போம். இப்போது இந்த மாதம் மட்டும் 300 பீஸ் விற்றிருக்கிறோம். கடந்த பதினைந்து நாட்களாக, `இன்வர்ட்டர் வேண்டும்' என்று கேட்டு எங்களுக்கு வரும் போன் கால்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. கூடுதலாக எங்களால் தயாரிக்கவும் முடியவில்லை. இந்த இன்வர்ட்டரில், பிரிண்டட் சர்க்யூட் போர்டு, ட்ரான்ஸ்ஃபார்மர் காயில், கேபினெட் என்று பல உதிரிபாகங்கள் உள்ளன. அதெல்லாம் பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து வருகின்றன. இப்போது தேவைக்குத் தகுந்த மாதிரி உதிரிப்பொருட்கள் கிடைக்கவில்லை. அதோடு எவ்வளவு ஆட்களை வைத்து வேலை செய்தாலும் தேவைக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் இன்வர்ட்டர்களைத் தயாரித்துக் கொடுக்கவும் முடியவில்லை.
இப்போது ஏற்பட்டிருக்கும் திடீர்த் தேவை பிரமாண்டமானது. டி.வி., டெக் ரிப்பேர் செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் ஏதோ ஒரு போர்டை வாங்கி அசெம்பிள் செய்து இன்வர்ட்டர் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்'' என்றவர், அதற்கு மேல் நம்முடன் பேச நேரமில்லாமல் வேலையில் மூழ்கி விட்டார்.
அடுத்ததாக, இன்வர்ட்டர்களுக்கென்றே பேட்டரிகளைத் தயாரித்து விற்கும் ஒரு கம்பெனியின் திருச்சி விநியோகஸ்தரான கிரியிடம் பேசினோம்.
"கடந்த 25 நாட்களாக இன்வர்ட்டர்களுக்கான பேட்டரியின் தேவையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. நாங்கள் தயாரிக்கும் தரமான `இன்வர்ட்டர்' பேட்டரி கடந்த ஒன்றரை வருடங்களாக மார்க்கெட்டில் இருக்கிறது என்றாலும் இப்போதுதான் அதன் விற்பனை சூடு பிடித்திருக்கிறது. இருபது நாட்களில் எங்கள் இன்வர்ட்டர் பேட்டரி விற்பனை ஐம்பது மடங்கு உயர்ந்திருக்கிறது. இன்வர்ட்டர்களுக்கு முன்பு சாதா பேட்டரிகளைப் பயன்படுத்தி வந்த மக்கள், இப்போது காசு கொஞ்சம் அதிகமானாலும் பரவாயில்லை. தரமான பேட்டரிகளை வாங்கிப் போடுவதுஎன முடிவு செய்து விட்டார்கள்'' என்றார் அவர்.
வீடுகளுக்கான இன்வர்ட்டர்களின் விலை சுமார் பதினைந்தாயிரத்தில் இருந்து இருபதாயிரம் வரை. இந்த மாதிரி இன்வர்ட்டர்கள் பெரிய அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகளுக்குப் போதாது என்பதால் அங்கே மின்வெட்டைச் சமாளிக்க ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஜெனரேட்டர் விற்பனையும் தூள் பரத்த ஆரம்பித்திருக்கிறது. இதன் எதிரொலியாக ஒருபுறம் டீசல் விற்பனை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இன்னொருபுறம் ஓடாத பழைய ஜெனரேட்டர்களை சர்வீஸ் செய்து ஓட வைப்பது போன்ற வேலைகளும் ஜரூராக நடந்து வருகின்றன. .
மின்வெட்டின் உபயம் காரணமாக கேஸ் மூலம் இயங்கும் சிறிய சிலிண்டர் லைட்டுகளுக்கும் இப்போது ஏகக் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதற்கான கேஸை, ஸ்டவ் ரிப்பேர் செய்யும் கடைகளில் பிடித்துத் தருவார்கள். இப்போது கேஸ் லைட்டுகளுக்கு ஏற்பட்டிருக்கும் கிராக்கியைத் தொடர்ந்து இந்த கேஸின் விலை, கிலோ 75 ரூபாயாக உயர்ந்து விட்டது. இந்த விலை உயர்வால் அதிகம் அதிர்ந்து போய் இருப்பவர்கள் தள்ளுவண்டியில் கேஸ் லைட்டுகளைப் பயன்படுத்தும் வியாபாரிகள்தான்.
ஆக, மின்வெட்டால் தமிழகத்தில் இப்போது சத்தமில்லாமல் பல்வேறு தொழில்கள் கொழித்து வருகின்றன. மின்வெட்டு என்ற அம்சத்துக்கு இருட்டான பகுதி மட்டுமல்ல, இப்படியொரு `வெளிச்சமான' பகுதியும் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.என்றாலும் இதற்காக ஆற்காட்டாரைப் பாராட்ட முடியுமா என்ன?

கருத்துகள் இல்லை: