வியாழன், 4 செப்டம்பர், 2008

அப்பா ரஜினிகாந்துக்கு மகள் சௌந்தர்யா கொடுத்த அட்வைஸ் !!!


ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி' என்று கலைஞர் செய்த அறிவிப்பைக் காட்டிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இப்போது வருகிற தகவல்கள்தான் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகின்றன.

`குசேலன்' படத்தின் தோல்வியால் ரொம்பவே அப்செட் ஆகிவிட்ட ரஜினி, தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பண்ணை வீட்டில் ஓய்வு, தியானம், பூஜையறையில் நெடுநேரம் பிரார்த்தனை என்று இருக்கும் ரஜினி, தன்னைப் பற்றி செய்திகள் வருகிற அத்தனை மொழி பத்திரிகைகளையும் வரவழைத்துப் படித்தும் விடுகிறாராம்.

`பாபா' படத் தோல்வியின்போதுகூட இந்த அளவுக்கு அப்செட் ஆகாத தன் அப்பாவைப் பார்த்து ரொம்பவே கவலை அடைந்த அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா, அப்பாவுக்குத் துணையாக கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலேயே இருக்கிறாராம்.

தற்போது தனக்கு ஏற்பட்டுள்ள சரிவு பற்றி மகள் சௌந்தர்யாவுடன் மட்டுமே மனம் விட்டுப் பேசுகிறாராம் ரஜினி. அப்படி கடந்த வாரம் அப்பா_மகள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, சௌந்தர்யா துணிச்சலாக சில கருத்துக்களை முன்வைத்தாராம். அது முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்கள் பற்றியதாகத்தான் இருந்ததாம்.

``அப்பா, உங்கள் ரசிகர்களை அரசியலுக்குள் இழுத்து வந்ததும் அவர்களுக்குள் அந்த ஆர்வத்தைத் தூண்டிவிட்டதும் நீங்கள்தான். உங்கள் மேடைப் பேச்சுக்களும், பட வசனங்களும்தான் அவர்களுக்கு அரசியல் வெறியைத் தூண்டியிருக்கிறது. 1996-ல் ஆரம்பித்து கடந்த பன்னிரண்டு வருடங்களாக உங்களால் உங்கள் ரசிகர்கள் `டியூன்' செய்யப்பட்டு விட்டார்கள். அவர்கள் மேல் எந்தத் தவறும் கிடையாது. தவறு செய்தது நீங்கள்தான். இப்படிச் சொல்வதால் `நீ சின்னப் பெண். உனக்கு என்ன தெரியும்' என்று என்னைக் கோபிக்காதீர்கள். நான் உங்கள் மகள்தான் என்றாலும், நானும் உங்கள் ஃபேன்தான். ரசிகர்கள்தான் அப்பா உங்கள் பலமே. அவசரப்பட்டு அவர்களை இழந்துவிடாதீர்கள். உங்கள் ரசிகர்களுக்காக நீங்கள் கொஞ்சம் இறங்கி வந்துதான் ஆகணும் அப்பா...'' என்று சௌந்தர்யா பக்குவமாய் தன்னிடம் சொன்னதை மிக உன்னிப்பாக கவனித்து உள்வாங்கிக் கொண்டாராம் ரஜினி.
தன் அப்பா மீது தனக்கு இருக்கும் அன்பினாலும், அக்கறையினாலும் இப்படியொரு ஆலோசனையை சௌந்தர்யா ரஜினியிடம் சொல்லியிருக்கலாம் என்றாலும் கூட, இதன் பின்னணியாக இருப்பது `சுல்தான் தி வாரியர்'தான் என்ற தகவலும் உலவுகிறது.
அதாவது, தன் அப்பாவை வைத்து `சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கி வருகிறார் சௌந்தர்யா. ஏகப்பட்ட கோடிகளை வாரியிறைத்து அம்பானி குரூப் தயாரிக்கும் இந்தப் படம் உலகம் முழுக்க வெளியிடும் நோக்கத்தோடு பன்னிரண்டு மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறதாம். அதில் ஒன்று, ஜப்பானிய மொழியும்கூட.
இப்படி பிரமாண்டமான முறையில் தான் டைரக்ட் செய்யும் முதல் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது அனிமேஷன் படம் உலக அளவில் தனக்கும் பெயர் வாங்கித் தரவேண்டும் என்று விரும்புகிறாராம் சௌந்தர்யா.அப்படியொரு வெற்றியை ஈட்ட தன் அப்பாவின் ரசிகர்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் முடியும் என்று நம்புகிறாராம் சௌந்தர்யா. இதையெல்லாம் தன் தந்தையுடன் மனம் விட்டுப் பகிர்ந்துகொண்ட சௌந்தர்யா, `ரசிகர்களுக்காக நீங்க இறங்கி வந்துதான் ஆகவேண்டும்' என்று வலியுறுத்தினாராம்.

ரஜினி இறங்கி வருவது என்றால் என்ன? அவர் அரசியலில் குதிப்பதா? என்று கேட்டால் அவசர அவசரமாய் அதனை மறுக்கிறார்கள், இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள்.

``தலைவர் அரசியலில் குதிப்பது என்று முடிவெடுத்து அதனை அறிவித்தால் அது இன்னும் ஆபத்தில் போய் முடிந்துவிடும். `தெளிவான முடிவை எடுக்கத் தெரியாதவர்' என்ற முத்திரை நிரந்தரமாக ரஜினி மீது விழுந்துவிடும் அபாயமும் இருக்கிறது. ரசிகர்களுக்காக ரஜினி இறங்கி வருவது என்றால், அவருக்கும் ரசிகர்களுக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைத்து, நெருக்கத்தை வளர்த்துக்கொள்வதுதான். ரஜினி தன் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அந்த நிலையை அவர் மாற்றவேண்டும். முப்பது மாவட்ட நிர்வாகிகளையும் மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் உள்ள மன்றப் பொறுப்பாளர்களையும் நூறு நூறு பேராக ராகவேந்திரா மண்டபத்துக்கு வரவழைத்து ரஜினி பேசவேண்டும். அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ரசிகர்களின் மனவிருப்பத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவர் அரசியலுக்கு வருகிறாரோ... இல்லையோ? ஆனால், தன் ரசிகர்களுடனான நேரடித் தொடர்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அது ஒன்றுதான் தற்போது அவருக்கு ஏற்பட இருக்கும் இமேஜ் இழப்புக்குத் தீர்வாக அமையும். உங்களிடம் சொன்ன இதே கருத்தைத்தான் சென்னைக்குச் சென்று சத்தியநாராயணாவிடமும், தலைமை மன்ற நிர்வாகிகளிடமும் சொன்னோம். அவர்கள் மூலமாக சௌந்தர்யா தெரிந்துகொண்டு அப்பாவிடம் பேசியிருக்கிறார்'' என்றார்கள்.

இந்நிலையில், ஒரு முக்கியமான பரபரப்பு ஒன்றும் கடந்த சனிக்கிழமை (30-ம் தேதி) அன்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்திருக்கிறது.
அன்று சத்தியநாராயணாவை நேரில் சந்தித்த சென்னை மண்டல மன்ற நிர்வாகிகள் கடிதம் ஒன்றைக் கொடுத்தார்களாம். ரஜினிக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் மாவட்ட ரீதியாக மன்றத்தில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். மிக முக்கியமாக எல்லா மாவட்டங்களிலும் மகளிர் அணி, இலக்கிய அணி, இளைஞர் அணி, வழக்கறிஞர்கள் அணி போன்றவற்றை நீங்கள் அறிவிக்கவேண்டும் என்று இருந்ததாம்.
அவர்கள் கொடுத்த கடிதத்தைப் படித்துப் பார்த்த சத்தியநாராயணா, ``இந்தக் கடிதத்தை, சாரிடம் (ரஜினியிடம்) நான் சேர்த்துவிடுகிறேன். ஆனால், அது உடனடியாக நடக்காது. சார் ஏற்கெனவே அப்செட்டுல இருக்காரு. இந்த நேரத்துல போய் உங்கள் கடிதத்தை நான் கொடுத்தால் நன்றாக இருக்காது. `குசேலன்' படப் பிரச்னைகளிலிருந்து சார் விடுபட்டு வெளியே வரட்டும். அவர் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும். அந்த சமயத்தில் உங்கள் கடிதத்தைக் கண்டிப்பாக அவரிடம் சேர்த்துவிடுகிறேன்'' என்ற உத்தரவாதத்துடன் திரண்டு வந்த சென்னை மண்டல ரசிகர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார்.
``சூப்பர் ஸ்டார் இமேஜை தக்க வைத்துக்கொள்ளவும், சினிமாவில் தனது மார்க்கெட்டை பாதுகாத்துக்கொள்ளவும் எங்கள் தலைவருக்கு நாங்கள் அவசியம். அதனால் எங்களை அவர் நேரில் சந்திப்பது என்பது காலத்தின் கட்டாயம். அது இன்னும் ஒரு சில வாரங்களில் நடந்துவிடும்!'' என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

அதுபோலவே வரும் 4-ம் தேதி சென்னையிலுள்ள தனது ரசிகர்களைச் சந்திக்கிறாராம் ரஜினி.
படித்தவர்கள் பின்னுட்டமிடுங்கள் ..நன்றி !!

கருத்துகள் இல்லை: