போலி பெட்ரோல் தயாரித்து, அதை இந்தியன் ஆயில் நிறுவன ஸ்டைலில் ஆயிரக்கணக்கான டீலர்களை அமைத்து புழக்கத்தில் விட்ட மூன்று பேரை நெல்லை போலீஸார் அள்ளியிருக்கிறார்கள். இவர்களின் பின்னணியில் இருப்பவர் சென்னையைச் சேர்ந்த ஒரு பிரமுகர். அவர் பலமான அரசியல் மற்றும் சாதிப் பின்னணியுடன் இருப்பதால் அவர்மீது எப்படி கைவைப்பது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலீஸார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள குறுகால்பேரியைச் சேர்ந்தவர் குமரன். கொஞ்சகாலம் பிழைப்புத் தேடி சென்னையில் காலம் கழித்த இவர், அதன்பின் தென்காசிப் பக்கம் உள்ள ஆய்குடி கிராமத்தில் செட்டிலானார். ஆய்குடியில் பெட்ரோல் பங்க் இல்லை. ஐந்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள தென்காசிக்குப் போய்த்தான் பெட்ரோல் போட்டாக வேண்டும். இதனால் தென்காசி பெட்ரோல் பங்க்கில் இருந்து கேன்களில் பெட்ரோல் வாங்கி விற்கத் தொடங்கியிருக்கிறார் குமரன். வெளிமார்க்கெட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 55 ரூபாய். குமரனிடம் 58 ரூபாய்.
ஆய்குடியில், அண்மையில் புது மோட்டார் சைக்கிள் வாங்கிய சேகர் என்கிற பட்டதாரி இளைஞர், தெரியாத்தனமாக சிலமுறை குமரனிடம் வந்து பெட்ரோல் போட்டிருக்கிறார். மைலேஜ் செக் பண்ணும்போது வண்டி வழக்கத்தை விட ஐந்து கி.மீ. தூரம் குறைவாக ஓடுவது அவருக்குத் தெரிய வந்தது. பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டு ஓட்டும் போது கூடுதலாக 5 கி.மீ. தூரம் கிடைப்பதை அறிந்த அவர், குமரன் கலப்பட பெட்ரோல் விற்கிறார் என்ற முடிவுக்கு வந்து உள்ளூர் போலீஸாரிடம் புகார் செய்தார். போலீஸார் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் `போய்யா வேலையைப் பார்த்துக்கிட்டு' என்று சொல்லிவிட்டனர். இதையடுத்து, எஸ்.பி. தினகரனுக்குப் புகார் அனுப்பினார் சேகர்.`ஆய்குடி பகுதியில் போலி பெட்ரோலா?' என அதிர்ந்து போன எஸ்.பி., இதுபற்றி விசாரிக்க எஸ்.ஐ. சீனிவாசன் தலைமையில் ஸ்பெஷல் டீமை அமைத்திருக்கிறார். அந்தக் குழு கண்ணில் விளக்கெண்ணெய்யை விட்டுக் கொண்டு ஒரு வார காலம் குமரனைக் கண்காணித்து வந்தது. அந்த ஒரு வார காலமும் குமரன் பெட்ரோல் வாங்க பெட்ரோல் பங்க் பக்கமே போகவில்லை. அப்புறம் எப்படி இவர் பெட்ரோல் விற்கிறார்? என போலீஸார் கண்காணித்தபோது, தனியார் பார்சல் சர்வீஸைச் சேர்ந்த ஒரு வேன், பெட்ரோல் பேரல்களைக் கொண்டு வந்து குமரனுக்கு டோர் டெலிவரி செய்திருக்கிறது. அந்தத் தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்துக்குப் போய் போலீஸார் விசாரணை செய்ய, அவ்வளவுதான் குமரனின் சாயம் வெளுத்து விட்டது.
இதுபற்றி விசாரணை அதிகாரிகள் சிலரிடம் நாம் பேசினோம்.
``அந்தத் தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் விசாரித்ததில் குமரனுக்கு வந்தது `நாஃப்தலின்' என்ற ரசாயனப் பொருள் என்பது தெரியவந்தது. இது தோல் தொழிற்சாலைகள், நகச்சாயம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கான மூலப் பொருள். இது சென்னையிலிருந்து குமரனுக்கு அனுப்பப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டோம். அதன் பிறகு குமரனை கோழியை அமுக்குவது போல அமுக்கி விசாரித்தோம். அப்போதுதான் நாஃப்தலினைப் பயன்படுத்தி அவன் பெட்ரோல் தயாரிப்பது தெரிய வந்தது.
நாஃப்தலின் வெள்ளை நிறமாக இருக்கும். அதில் குங்கும கலரில் இருக்கும் ஓர் ஆயில் பொடியைச் சேர்க்க, அது ஒரிஜினல் பெட்ரோலின் நிறத்துக்கு உருமாறும். கூடவே `பெட்ரோல் வாசனைக்காக' ஒரு பேரலுக்கு 5 லிட்டர் ஒரிஜினல் பெட்ரோலையும் சேர்க்கிறார்கள். ஒரு லிட்டர் நாஃப்தலின் விலை 42 ரூபாய். அதன்மூலம் உருவான `பெட்ரோலை' குமரன் 58 ரூபாய்க்கு விற்றிருக்கிறான். ஒரு லிட்டருக்கு 16 ரூபாய் லாபம். ஒரு நாளைக்கு சராசரியாக 210 லிட்டர் விற்பனையாகியிருக்கிறது. நெல்லையின் மேற்குப் பகுதிக்கு குமரனே மெயின் டீலராக இருந்திருக்கிறான். அதோடு கோவில்பட்டிக்கு டீலராக இருந்த குருமூர்த்தி, சாத்தான்குளம் பகுதி `டீலர்' பெரியசாமி ஆகியோரையும் நாங்கள் மடக்கி அவர்களிடம் இருந்தும் மூவாயிரம் லிட்டர் போலி பெட்ரோலைக் கைப்பற்றினோம்.
குமரனுக்கு நாஃப்தலின் அனுப்பி வைக்கும் சென்னை கம்பெனி, போலியாய் ஒரு தோல் தொழிற்சாலை முகவரிக்குப் பில் போட்டு, பில்லின் நகலை மட்டும் கூரியரில் குமரனுக்கு அனுப்புமாம். அந்த பில்லைக் காட்டி குமரன் டெலிவரி எடுப்பது வழக்கம். `அந்த பில்லை மறுபடியும் சென்னைக்கே அனுப்பி விட வேண்டும் என்பது ஸ்டிரிக்டான உத்தரவு' என்று விசாரணையில் குமரன் கூறினான்.
இந்த போலி பெட்ரோல் தயாரிப்பின் பின்னணியில் இருப்பவர் யார் என்று குமரனைக் கேட்டபோது, சொல்ல மறுத்து விட்டான். ஒருநாள் முழுவதும் தோண்டித் துருவி விசாரித்த பிறகுதான் அந்த பிக் ஷாட்டின் பெயரைச் சொன்னான். அந்தப் பெரும்புள்ளியின் பூர்வீகம் கன்னியாகுமரிப் பக்கம் உள்ள ஒரு சின்ன கிராமம். தற்போது சென்னையிலேயே செட்டிலாகி விட்ட அந்த நபர், ஏற்கெனவே போலி பெட்ரோல் தயாரித்து, சென்ற ஆட்சியின்போது உள்ளே போனவர். இப்போது `பெரிய குடும்ப'ப் பெண்மணி ஒருவரது ஆசி இருப்பதால் அத்தாரிட்டியாக அவர் இதே பிஸினஸைச் செய்து வருகிறார். அந்த நபர் அடிக்கடி அவரது சாதிச்சங்க விழாக்களில் தலைகாட்டுபவர் என்பதால் அவரை நெருங்கவே போலீஸ் மேலிடம் யோசிக்கிறது. ஆகவே, மூன்று பேரோடு கதையை முடித்துக் கொண்டோம். இந்தக் கும்பல் நெல்லை மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க, பெட்ரோல் பங்க் இல்லாத இடங்களில் ஆயிரக்கணக்கான நிழல் டீலர்களை நியமித்து போலி பெட்ரோலை விற்பனை செய்திருக்கிறது. இதுபற்றி எண்ணெய் நிறுவனங்களுக்கும் தகவல் கொடுத்திருக்கிறோம்'' என்றனர் அவர்கள்.
`நாஃப்தலின் என்றால் என்ன? அதைப் போட்டால் வண்டிக்கு என்ன ஆகும்?' என, நிலத்தியல் பேராசிரியர் சிவசுப்பிரமணியனிடம் கேட்டோம். ``கச்சா எண்ணெய் எனப்படும் குரூட் ஆயிலிலிருந்து பெட்ரோலைப் பிரித்தெடுக்கும்போது கிடைக்கிற உபபொருள்தான் நாஃப்தலின். பழைய லாரிகளை மண்ணெண்ணெய் ஊற்றி ஓட்டுவதில்லையா? அதுபோல, பெட்ரோலியப் பொருள் என்பதால் நாஃப்தலின் ஊற்றினால்கூட வண்டி ஓடும். ஆனால் கரும்புகை அதிகமாக வரும். தவிர, என்ஜினில் கார்பன் அடைத்து என்ஜின் சீக்கிரமே அவுட்டாகி விடும். சொல்லப்போனால் என்ஜினின் ஆயுள் பாதியாகக் குறைந்து விடும்'' என்றார் அவர்.
எஸ்.பி. தினகரனிடம் பேசினோம். ``நாஃப்தலின் அனுப்பியவர் சென்னையில் இருக்கிறார். இவர்கள் தோல் தொழிற்சாலைக்காக என்று இதை வாங்கித் தான் போலி பெட்ரோல் தயாரித்து விற்கிறார்கள். குமரனிடம் போலி பெட்ரோல் போட்ட வண்டிக்காரர்கள், `மைலேஜ் குறையுது' என்று புகார் சொன்னபோது, `உன் என்ஜினில் கோளாறு இருக்கும்' என்று எகத்தாளமாக குமரன் பதில் சொல்லியிருக்கிறான். இப்போது ஏமாற்றுதல், தமிழக ஸ்பிரிட் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப் போட்டிருக்கிறோம்'' என்றார் அவர் சுருக்கமாக.இது தொடர்பாக, பாரத் பெட்ரோலிய டெரிட்டரி மேலாளர் பிரபுராயிடம் பேசினோம். ``நாஃப்தலின் கலந்த போலி பெட்ரோலின் நடமாட்டம் 99-க்குமுன் இருந்தது. அதன்பின் நின்றுபோனது. நாஃப்தலின் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காத பொருள். இந்தநிலையில், நாஃப்தலின் கலந்த போலி பெட்ரோல் மீண்டும் தலைகாட்டியிருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. தற்போதுள்ள பெட்ரோல் தட்டுப்பாட்டை வகையாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த போலி பெட்ரோல் மீண்டும் புழக்கத்துக்கு வந்திருக்கலாம்'' என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக