வீரப்பன் பணம் எங்கே? இதுதான் அந்தியூரிலிருந்து மைசூர் வரை இருக்கும் மலைவாழ் மக்களின் கேள்வி.
அந்தியூரிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றால் வரிசையாக மலைவாழ் மக்களின் கிராமங்கள். படர்ந்த மலைகளும் அடர்ந்த காடுகளும் சூழ அமைந்திருக்கும் இந்தக் கிராமங்களில் இன்னும் வீரப்பன் பற்றிய பேச்சு குறையவில்லை. சமீபத்திய மழையால் இன்னும் பசுமையாகத் தெரிகின்றன காடுகள். பல வருடங்களாய் இந்தப் பகுதியில் மரங்களுடன் மரங்கள்போல் அதிரடிப்படையினர் நின்று கொண்டிருப்பார்கள். இப்போது அவர்களைக் காணவில்லை. காட்டின் நுழைவாயில் செல்லம்பாளையத்தில் ஒரு சோதனைச் சாவடி இருக்கிறது. அதைக் கடந்து சென்றால் வேறு சோதனைகள் இல்லை.
தாமரைக்கரை கிராம மலைவாழ்மக்கள் `பயிர் திருவிழா' கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இருக்கும் மலையைச் சுற்றி முப்பத்து மூன்று கிராமங்கள் இருக்கின்றன. எல்லாமே வீரப்பனின் பிடியில் இருந்தவை. இந்த ஜனங்கள் இன்றும் வீரப்பனை காட்டுக்காவலன் என்றே சொல்கிறார்கள்.
``அவரு காட்டு ராஜாவா இருந்தாருங்க. அவரை மீறி யாரும் காட்டுக்குள்ள நுழைய முடியாது. சந்தனமரத்தை வெட்டுனாரு, யானையைக் கொன்னு தந்தம் எடுத்தாருனுல்லாம் சொல்வாங்க. உண்மைதாங்க. ஆனா அவரு காட்டை அழிக்கலிங்க. தானும் வாழ்ந்தாரு. காட்டையும் வாழ வச்சாரு. ஆனா இன்னைக்கு ஆளாளுக்கு உள்ள போறாங்க சந்தனமரத்தை வெட்டுறாங்க. எடுத்துட்டுப் போய்ட்டே இருக்கானுங்க. காட்டுல சந்தன மரம்லாம் குறைஞ்சுட்டு வருது'' என்கிறார் கிராமவாசி ஒருவர். ஒரு சந்தனமரம் முழுவதும் வளர்ந்து வாசனை தருவதற்கு இருபத்தைந்திலிருந்து முப்பது வருடங்கள் ஆகுமாம். அதுபோன்ற மரங்களைத்தான் வெட்டுவார்களாம். ஆனால் இப்போது இளம்மரங்களை வெட்டி வருவதால் யாருக்கும் பலனில்லை என்கிறார்கள். காட்டுக்குள் முறிந்து கிடக்கும் இளம் சந்தன மரங்களைப் பார்க்க இயலுகிறது. ஒரு கிலோ சந்தன மரத்தின் விலை மூவாயிரம் ரூபாயாம். நன்றாக விளைந்த மரம் இருநூறு கிலோ இருக்குமாம். ஒரு மரத்தை வெட்டி விற்றால் ஆறு லட்ச ரூபாய் வரை பணம் கிடைக்கும் என்கிறார்கள்.
மலைவாழ் மக்கள் சந்தனக் கணக்கு சொல்லச் சொல்ல நமக்கு மலைப்பாக இருந்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக சந்தன மரங்களையும் யானைத் தந்தங்களையும் விற்று வாழ்ந்த வீரப்பன் எத்தனை பணம் சம்பாதித்திருப்பான்?
அந்தப் பணம் மட்டுமில்லாமல் மேற்குத் தொடர்ச்சி மலை முழுக்க கிரானைட் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளின் பணக்கார முதலாளிகள், வீரப்பனால் தங்கள் குவாரிகளுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்று கோடிக்கணக்கில் பணம் கொடுத்திருக்கிறார்கள்.
இவை தவிர, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் வந்த பணம். இப்படி வீரப்பனுக்கு ஏராளமான கோடிப் பணம் சொந்தம். அந்தப் பணம் எங்கே என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
இந்தக் கேள்விக்கு கிராம மக்கள் பெருவாரியாகச் சொல்லும் பதில், ``பணம் காட்டுக்குள் புதைந்து இருக்கிறது'' என்பது.``தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் பிளாஸ்டிக் உரப்பை களில் இறுக்கமாய் கட்டி காட்டுக்குள் ஆங்காங்கே குறிப்பிட்ட சில இடங்களில் வீரப்பன் புதைத்து வைப்பான். பணத் தேவை வரும்போது அங்கு வந்து எடுத்துப்பான். அவனுக்கும் அவனோட சில கூட்டாளிகளுக்கும் மட்டுமே புதைச்சு வச்சிருக்கிற இடங்களோட அடையாளம் தெரியும்'' என்கிறார் ஒரு பெரியவர்.மாதேஸ்வர மலை, ஊகியம், ஜல்லிபாளையம், எல்லாமலை, ஒகேனக்கல், செங்கபாடி, பெரியதண்டா, சோளகணை, திம்மம், பர்கூர், உத்தி, பவானிசாகர் போன்ற பகுதிகளில்தான் இந்தப் பணம் புதைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
வீரப்பனின் இந்தப் பணத்தைப் பற்றி கிராம மக்களிடம் பல்வேறு கதைகள் பேசப்படுகின்றன. அதில் அதிகம் சொல்லப்படுவது, அப்ரூவரான வீரப்பனின் கூட்டாளிகள், பணம் புதைக்கப்பட்ட இடங்கள் பற்றிய தகவல்களை அதிரடிப்படை வீரர்களிடம் சொல்லிவிட்டதாகவும், அந்த இடங்களைக் கண்டுபிடித்த அதிரடிப் படையினரில் சிலர், பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் ஒரு கதையைச் சொல்கிறார்கள்.
வீரப்பனின் கூட்டாளிகளாய் இருந்து தப்பிய சிலர், பணம் தேவைப்படும்போது காட்டுக்குள் சென்று அந்தப் பணத்தை எடுத்து வருகிறார்கள் என்பது இன்னொரு கதை. இந்த இரண்டைவிட, இன்னொரு முக்கியமான கதையும் உலவுகிறது. வீரப்பனின் இறுதி நாட்களில் அவனுடன் தமிழ்த் தீவிரவாதிகள் எனச் சொல்லப்பட்ட ஒரு கூட்டம் தங்கியிருந்ததாகவும் அவர்கள் மேல் அனுதாபப்பட்ட வீரப்பன், தன்னுடைய பணத்தின் பெரும்பங்கை அவர்களுக்குக் கொடுத்ததாகவும் அவர்கள் அதை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இந்தக் கதைகளை யாரும் உரத்துச் சொல்வதில்லை. நாம் அழுத்திக் கேட்கும்போது அக்கம் பக்கம் பார்த்துச் சொல்கிறார்கள். இன்றும் சில மலைவாழ் மக்கள் காட்டுக்குள் சென்று வீரப்பன் புழங்கிய இடங்களில் பணத்தைத் தேடுவதாகவும், சிலருக்குக் கொஞ்சம் பணம் கிடைத்து அவர்கள் கிராமத்துக்குள்ளே வசதிகளோடு வாழ்வதாகவும் சொல்கிறார்கள்.
வீரப்பன் வாழ்ந்த காட்டில் பணத்தைத் தேடுவது அத்தனை சுலபமில்லை. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம் என்று அவன் ஆக்கிரமித்திருந்த வனப்பகுதிகள் மூவாயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல். இதில் பணத்தைத் தேடுவது மவுண்ட்ரோடில் குண்டூசியைச் தொலைத்துவிட்டுத் தேடுவது போல. ஆனால் தொலைத்தது குண்டூசி இல்லை என்பதால், இன்றும் வீரப்பன் காட்டுக்குள் பணம் தேடும் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.
அன்று வீரப்பனைத் தேடினார் கள். இன்று வீரப்பனின் பணத்தைத் தேடுகிறார்கள்..
- திருவேங்கிமலை சரவணன்படங்கள் : ஆர்.சண்முகம்
துப்பாக்கி!
இந்தப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் வினோதமான ஒரு மூங்கில் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். சின்னச் சின்ன மூங்கில் குழாய்கள் எடுத்து, அதற்குள் பட்டாணி சைஸில் இருக்கும் உருண்டைகளை இந்த மூங்கில் குழாய்க்குள் போட்டு பின்புறம் குத்துகிறார்கள். உடனே துப்பாக்கி வெடித்தாற்போல் சத்தம் கிளம்புகிறது. அந்தப் பட்டாணி ஒரு காட்டுமரத்தின் காய். விலங்குகளை விரட்டுவதற்கு உதவுகிறது என்கிறார்கள்.
ஏது பணம்?வீரப்பனின் இறப்புக்குப் பிறகு சில கிராம மக்களின் நிலைமை முன்னேறியிருக்கிறது. பலர் இரண்டு சக்கர வாகனங்களில் ஜாலியாய் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏது திடீர் பணம் என்பது பணமில்லா கிராம மக்களின் கேள்வி. அது வீரப்பனின் பணமா அல்லது வீரப்பனைக் காட்டிக் கொடுக்க அதிரடிப்படையினர் கொடுத்த பணமா என்று கேட்கிறார்கள்.
1 கருத்து:
paavinga avana kattikuduthu panathai vankittu katlayum panathai thedi yeduthu eruppanunga velangadhavanunga
கருத்துரையிடுக