மக்களை மட்டுமல்ல, தமிழக அரசையும் `வேர்க்க' வைத்துக் கொண்டிருக்கிறது `மின்வெட்டு' விவகாரம். தொழிற்சாலைகள் முடங்கியதால் பலஆயிரம் கோடி இழப்பு! போட்டது போட்டபடி, நட்டது நட்டபடி இருக்கிறது விவசாயம்! வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தொழிலாளர்களுக்கு. போட்ட முதல் முடங்கிப் போனதே என்ற கவலை முதலாளிகளுக்கு. இப்படி எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல முடியாமல் `இருண்டு' போய்க்கிடக்கிறார் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
அரசியல் கட்சிகள் பலவும் `காய்ச்சி' எடுத்த நிலையில் அவசரமாக மின்சாரம் கேட்டு டெல்லிக்குப் போனார் ஆற்காட்டார். தமிழகத்தின் மின்பற்றாக்குறை `1200 மெகாவாட்' என்ற நிலையில் 600 மெகாவாட் மின்சாரத்தைத் தர முன்வந்தது மத்தியஅரசு. மிச்சத்துக்கு என்ன செய்வது என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வி. இந்நிலையில் வருண பகவான் அருள்பாலித்து மழை இனி கொஞ்சம் அதிகம் பெய்து மின் உற்பத்தி நடந்தாலும், அடுத்த நான்காண்டு காலம் வரை மின்வெட்டு அன்றாட வாடிக்கையாகத்தான் இருக்கும்'' என்பது மின்வாரியத்தின் ரகசியப் புலம்பல்.
`இந்தநிலையில் மின்தட்டுப்பாட்டுக்கு என்னதான் தீர்வு? இதிலிருந்து மீள வழியே இல்லையா?' என்ற நம் கேள்விக்கு பாசிட்டிவ்வான பதில் தர முன்வந்தார் டாக்டர் வேதமூர்த்தி. அண்ணா பல்கலைக்கழக மெக்கானிக்கல் இன்ஜினீயிரிங் பிரிவின் தலைமைப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற அவரை நாம் சந்தித்துப் பேசினோம்.
``மின்தேவை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் புதிய மின் இணைப்புகள், புதிய தொழிற்சாலைகள், புதிய அடுக்கு மாடிவீடுகள் உருவாகிக்கொண்டே போனால் மின் தட்டுப்பாடு வராமல் என்ன செய்யும்? இந்நிலையில் மத்திய அரசு தருவதாகச் சொல்லும் 600 மெகாவாட் கடலில் கரைத்த பெருங்காயத்தின் கதைதான்.
அனல்மின் உற்பத்திக்கு நிலக்கரி வேண்டும். அதில் அதிக செலவு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் கேடும் உண்டு. நீர்த்தேக்கங்கள் எப்போதும் நிரம்பி வழிய வாய்ப்பில்லை என்பதால் புனல் மின்சாரத்துக்கும் வழியில்லை. காற்றாலைகளால் நம் தேவைக்கேற்ப மின் உற்பத்தி செய்து விட முடியாது. இந்தநிலையில் நமக்கு ஆபத் பாந்தவனாக இருப்பது அணுமின் நிலையங்கள்தான். அதற்காகத்தான் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். கூடங்குளம் அணுஆலையே இன்னும் முழுமையடையாத நிலையில், அணுஒப்பந்தம் மூலம் புதிய ஆலைகள் அமைத்து மின்வெட்டிலிருந்து தப்பிக்க 7 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகிவிடும்.
அப்படியானால் மின்வெட்டைச் சமாளிக்க வழியே இல்லையா? என்றால், இருக்கிறது என்பதுதான் எனது பதில். அமெரிக்காவில் `கேட்டர் பில்லர்' என்ற நிறுவனம் ஆயிரம் கிலோவாட் அதாவது ஒரு மெகாவாட், 2 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்கிறது. (நம்நாட்டில் அசோக் லேலண்ட் நிறுவனமும் இதைப்போல ஒரு மெகாவாட் ஜெனரேட்டரைத் தயாரிக்கிறது. ஆனால் டிமாண்ட் காரணமாக உடனே அதைப் பெற முடியாது) அமெரிக்க ஜெனரேட்டரின் விலை ஒரு கோடி ரூபாய். ஒரு பெரிய கண்டெயினர் போல இருக்கும் இந்த ஜெனரேட்டர்களில் 40 ஜெனரேட்டர்களை சென்னையில் அங்கங்கே நிறுவினால், சென்னையில் மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்து விடலாம். இவற்றை நிறுவ மின்வாரியத்திடம் இடமும் இருக்கிறது.
டீசலில் இயங்கும் இந்த ஜெனரேட்டர் ஒரு லிட்டருக்கு 4 யூனிட் மின்சாரம் தரும். அதன்படி ஒரு யூனிட் மின்சாரம் 15 ரூபாய் ஆகும்.. இது அதிகமாச்சே? என்று யோசிக்கக் கூடாது. நாம் வெளி மாநிலங்களிலிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை 10 ரூபாய்க்கு மேல் கொடுத்துத்தான் வாங்குகிறோம். அதோடு மின்சாரத்தை இடம்விட்டு இடம் எடுத்துச் செல்லும் போது `லைன் வேஸ்ட்' என்ற அடிப்படையில் நான்கில் ஒரு பகுதி மின்சாரம் வீணாகிவிடும். அமெரிக்க ஜெனரேட்டர் மூலம் அங்கங்கே மின்சாரம் தயாரித்தால் `லைன் வேஸ்ட்' என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
அதோடு அணுமின், அனல்மின் நிலையங்களுக்காகத் தேவைப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், நிலக்கரிச் செலவு, இறக்குமதி, கப்பல், லாரி, ரயில் செலவு எல்லாம் அமெரிக்க ஜெனரேட்டர் விஷயத்தில் இருக்காது. பிஜி, ரஷ்யாவின் ஒரு பகுதியான சைபீரியா, ஏன் நம் அண்டை நாடான சீனாவில் கூட இந்தமுறையில் மின்சாரம் தயாரிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது தமிழகம் ஏன் இந்த விஷயத்தில் ஒரு முன்னோடியாக இருக்கக் கூடாது?
`சரி! இந்த ஜெனரேட்டர்களுக்கு டீசல் தேவைப்படுவதால் டீசல் தட்டுப்பாடு வராதா?' என்று கேட்கலாம். டீசலை வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்ய முடியும். அதோடு இந்த ஜெனரேட்டர்களுக்குப் பயன்படும் டீசலுக்கான வாட் வரியை நீக்கி, அரசு மானியம் அளிக்க வேண்டும். அப்படி அளித்தால் இன்னும் குறைவான விலையில் மின்சாரத்தைப் பெற முடியும்.
இவ்வளவு பொருட்செலவில் ஜெனரேட்டர் வாங்க மின்வாரியத்தால் முடியுமா? என்ற கேள்வி கிளம்பலாம். காற்றாலைகளைப் போல இந்த ஜெனரேட்டர் பிளாண்ட்களையும் தனியாரிடம் ஒப்படைத்து, அவர்களிடம் ஒப்பந்தம் போட்டு அரசு மின்சாரத்தை வாங்கலாம். தனியார் சொந்த முதலீட்டில் தயாராகும் இந்த மின்சாரத்தை வாங்கிக் கொள்வதாக அரசு உத்தரவாதம் அளித்தாலே போதும். இந்த ஜெனரேட்டர் திட்டத்தைச் செயல்படுத்தினால் ஓராண்டுக்குள் மின் தட்டுப்பாட்டில் இருந்து நாம் தப்பிக்கலாம்.
தமிழகத்தில் இப்போது நிலவும் மின்தட்டுப்பாட்டால் ஆலைகள் முடங்கிப்போய் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் ஜெனரேட்டர் மின்சாரத் தயாரிப்பில் யூனிட் விலை அதிகம் என்று நாம் சால்ஜாப்பு சொல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதே நல்லது. யூனிட் 15 ரூபாய் என்று யோசித்துக் கொண்டிருந்தால் பல தொழிற்சாலைகள் மூலம் வர வேண்டிய இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பாகிவிடும்'' என்ற வேதமூர்த்தி, இன்னொரு தகவலையும் சொன்னார்.
``தற்போதைய மின் தட்டுப்பாட்டுக்கு மூலகாரணமே மின்வாரிய உயர் அதிகாரிகள்தான். அவர்கள் சரியாகத் திட்டமிடாததுதான் மின்வெட்டுக்குக் காரணம். அமைச்சர் என்ன செய்வார்? அதிகாரிகள் சொல்வதைத்தானே அவர் கேட்பார்? மின்துறையில் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பொறியாளர்களாக நுழைந்தவர்கள்தான் அதிகம். அந்த நிலையை மாற்றி உலக மின்நடப்பு தெரிந்த, ஆய்வியல் அறிவுள்ளவர்களைச் சேர்த்தால் மின்சார வாரியம் முன்னேறும்.
உலக நாடுகளில் ஒவ்வொரு துறையும் புதிய கண்டுபிடிப்பு, ஆய்வுகளுக்காக மொத்த பட்ஜெட்டில் 2 சதவிகிதத்தை பயன்படுத்துகிறது. அதுபோல மின்வாரியமும் செய்ய வேண்டும். மின் உற்பத்தியில் ஏற்படும் வீண் இழப்புகளைக் கண்டுபிடிக்க கமிட்டி அமைக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது மின்தேவை எவ்வளவு? முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கான உற்பத்தியை எப்படிப் பெருக்குவது? என்பதை அந்த ்கமிட்டி ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
இப்படிச் செய்வதன் மூலம்தான் மின்வெட்டை சமாளிக்க முடியும். அணுமின் போன்ற மற்ற மின் உற்பத்திகளோடு ஜெனரேட்டர் மின்உற்பத்தியையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மின் பற்றாக்குறையையும் சமாளிக்கலாம். மக்களின் குமுறலுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம்'' என்றார் அவர், அடக்கமாக.
தமிழக அரசு இதற்கான முயற்சிகளில் இறங்கலாமே?...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக