வெள்ளி, 19 செப்டம்பர், 2008
மதுரை வரலாற்று தகவல்கள் !!
மதுரை (ஆங்கிலம்:Madurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். மதுரை நகரம் 2500 ஆண்டுகள் பழமையானது
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9.93° N 78.12° E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 136 மீட்டர் (446 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வரலாறு
தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம்.
பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன.
மதுரை ஆட்சியாளர்களின் காலவரிசை
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது.
கிபி 1 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் கொடுங்கோல் வசம் இருந்தது.
விஜயநகரப் பேரரசு மூலம் அந்த முஸ்லிம் ஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623முதல் 1659வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. 1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் ஆங்கிலேயரிடம் சென்றது.
ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை.
தற்போதைய மதுரையின் மையப்பகுதி பெரும்பாலும் நாயக்கர்களால் கட்டப்பட்டதாகும். கோயில், மன்னர் அரண்மனை நடுவிலிருக்க, அதனைச் சுற்றி வீதிகளையும் குடியிருப்புகளையும் அமைக்கும், இந்து நகர அமைப்பான "சதுர மண்டல முறை" மதுரையில் பின்பற்றப்பட்டுள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 922,913 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுரை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கல்வி
இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களுல் சில மதுரையில் அமைந்துள்ளன. தியாகராசர் கலைக்கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மதுரைக்கல்லூரி, போன்றவை நகரின் முக்கிய கல்லூரிகளாகும். யாதவர் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி ஆகியவையும் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளன.
இது தவிர மதுரை மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, வேளாண் கல்லூரியும் நகருக்கு பெருமை சேர்க்கின்றன. நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள நாடார் மகாஜன சங்கம் சா.வெள்ளைச்சாமி நாடார். கல்லூரி 1965ம் ஆண்டு தொடங்கப்பட்டது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
லேடி டோக் கல்லூரி, பாத்திமா கல்லூரி, மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி, இ.எம்.ஜி. யாதவர் பெண்கள் கல்லூரி ஆகியவை மதுரையில் அமைந்திருக்கும் பெண்கள் கல்லூரிகளாகும்.
இந்நகரில் இருக்கும் சேதுபதி மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
மதுரையில் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரி தியாகராஜர் பொறியியல் கல்லூரி
போக்குவரத்து
சென்னை-நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்நகரம், தென்னிந்திய இரயில்வேயின் மிக முக்கிய சந்திப்பாகும். அதனுடன் நாட்டின் மற்ற முக்கிய நகரங்களை இணைக்கும் விமான நிலையமும் உண்டு.
சுற்றுலா
மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் தெப்பக்குளம், காந்தி அரண்மனை என்று சுற்றுலா பயணிகளைக் கவரும் அம்சங்கள் இந்நகரில் நிறைய உண்டு. தூங்கா நகரமான மதுரையிலிருந்து அழகர்கோயில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், காளையார் கோயில், புதுக்கோட்டை, ஆவுடையார்கோயில், இராமேஸ்வரம், குமுளி (தேக்கடி), கொடைக்கானல், தேனி(சுருளி), திருநெல்வேலி என்று சரித்திர மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் உண்டு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக