எந்திரன்' படப்பிடிப்புக்காக `பெரு' நாட்டிற்குச் சென்றிருக்கும் தங்களின் தலைவர் எப்போது சென்னை திரும்புவார் என ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும், மன்றப் பொறுப்பாளர்களும் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வருகிற 27 அல்லது 30-ம் தேதி சென்னை திரும்பும் ரஜினி, வரும் மஹாளய அமாவாசைக்குப் (28-ம் தேதி) பிறகு புரட்டாசி மாத வளர்பிறையில் முப்பது மாவட்ட மன்ற நிர்வாகிகளையும் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனியே சந்திக்க இருக்கிறாராம்.
புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை என்பது, `தொட்டது துலங்கும்' அம்சம் கொண்டதாம். அப்போது எடுக்கும் எந்த ஒரு புது முயற்சியும் மிகப் பெரிய அளவில் வெற்றியையும், திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தருமாம்.
அதனாலேயே புரட்டாசி மாத வளர்பிறை நாட்களை தன் ரசிகர்களைச் சந்திப்பதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் சூப்பர் ஸ்டார், அப்போது ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்யும் அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட இருப்பதாகத் தகவல்.
கூடவே, தான் திட்டமிட்டிருக்கும் மற்றொரு மெகா பிளான் குறித்து ரசிகர்களின் கருத்துக்களைக் கேட்டறியவும் அவர் திட்டமிட்டிருக்கிறாராம். தனது தலைமையின் கீழ் பொதுவான அமைப்பு(!) ஒன்றைத் தொடங்குவதுதான் ரஜினியின் அதிகாரபூர்வமான முதல் அறிவிப்பாக இருக்குமாம்.
அடுத்ததாக, தங்களுக்கென்றே தனி டி.வி. சேனல் ஒன்றையும் ரஜினி தொடங்கப் போகிறாராம். இந்த டி.வி. சேனலை நிர்வகிக்கப் போவது யார் தெரியுமா? சூப்பர் ஸ்டாரின் இரண்டாவது மகளான சௌந்தர்யா!
புது அமைப்பு, தனி சேனல், இந்த இரண்டு விஷயங்களைப் பற்றித்தான் தலைவர் தங்களை அழைத்து ஆலோசனை செய்யப் போகிறார் என்பதை உறுதியாக அறிந்து கொண்ட சில மாவட்டப் பொறுப்பாளர்கள், ரஜினியை அசத்தும் விதமாக, அந்த அமைப்புக்கும், சேனலுக்கும் என்ன பெயர் வைக்கலாம் என்பதையெல்லாம் கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டார்களாம்.
அதாவது, சேனலுக்கு `ரஜினி டி.வி'. என்றும் பொது அமைப்புக்கு மக்கள், ஜனநாயகம், குரல் என்று ஏதாவதொரு பெயர் வைக்கலாம் என்பதும் அவர்கள் ஐடியா. சேனலுக்கு ரஜினி டி.வி. என்று பெயர் வைப்பதை தலைவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் அப்படி பெயர் வைத்தால்தான் மக்கள் மத்தியில் எடுபடும் என்பதை எடுத்துக்கூறி ரஜினியை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும் என்பதில் மாவட்டப் பொறுப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்களாம்.
அமைப்புக்கு `குரல்' என்று தாங்கள் வைத்திருக்கும் பெயர் ரஜினியை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணும் என்றும் நம்புகிறார்கள் மன்றப் பொறுப்பாளர்கள். காரணம், `தமிழக அரசியலைப் பொறுத்தவரை `வாய்ஸ்' (குரல்) என்றாலே, அது ரஜினி சொல்வதை மட்டும்தான் குறிக்கும். ஆகவே, தலைவர் தொடங்கப் போகும் அமைப்புக்கு `வாய்ஸ்' என்ற பெயரே பொருத்தமாக இருக்கும்' என்கிறார்கள்.
இதைத் தாங்கள் தலைவரை நேரில் சந்திக்கும் போதும் வலியுறுத்தப் போகிறார்களாம், அவர்கள்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவர்களிடம் நாம் கேட்டபோது, ``தலைவர் நேரடி அரசியலில் இப்போதைக்கு ஈடுபடமாட்டார். கட்சி ஆரம்பிப்பது பற்றியும் எங்களிடம் இப்போதைக்கு அவர் பேசப் போவதில்லை. புது அமைப்புக்கு மட்டும் `ஓகே' சொல்லப் போகிறார். ஒழுங்கில்லாமல் சிதறிக் கிடக்கும் மன்றங்களையும், ரசிகர்களையும் புது அமைப்பின் கீழ் ஒருங்கிணைப்பதுதான் தலைவரின் தற்போதைய நோக்கம்.
புதுஅமைப்பிற்கான உறுப்பினர் கார்டு கூட மிக விரைவிலேயே எங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. மாநில நிர்வாகிகளையும் தலைவர் விரைவில் அறிவிப்பார். இப்போது பொது அமைப்பாகவே அறிவிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் இந்த அமைப்பே அரசியல் இயக்கமாகவும் அவதரிக்கலாம்'' என்று அடித்துச் சொன்ன அவர்கள்,
``தமிழக அளவில் எங்கள் தலைவர் பொது அமைப்பு ஆரம்பிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருப்பதே எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான். இந்த அமைப்பு மூலம் நாகரிகமாக அரசியல் நடத்துவதற்கான பயிற்சியையும் எங்களுக்கு அவர் தரப் போகிறார். பொதுப் பிரச்னைகள், மக்களின் தேவைகள் குறித்த போராட்டங்கள் போன்றவற்றையும் இந்தப் புது அமைப்பு மூலம் தலைவரே நேரடியாகக் களத்தில் இறங்கி நடத்துவார். தனிக்கட்சி தொடங்க சில வருடங்கள் ஆனாலும், இந்த அமைப்பு மூலமாகவே எங்கள் தலைவரின் கட்டளைகளை நாங்கள் நிறைவேற்றுவோம்!'' என்கிறார்கள் அந்த நிர்வாகிகள்.
மற்றொரு விஷயத்திலும் இந்த மாவட்ட நிர்வாகிகள் ரொம்பவே உஷாராக இருக்கிறார்கள். அதாவது, அடுத்த மாதம் ரஜினியை நேரில் சந்திக்கும்போது தவறியும்கூட, `தலைவா, உங்க கூட போட்டோ எடுத்துக்கறோம்' என்றோ, `நீங்க நேரடி அரசியல்ல இறங்குங்க தலைவா' என்றோ கேட்பதில்லை என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இது போன்ற விஷயங்கள் ரஜினிக்குத் துளியும் பிடிப்பதில்லையாம். இதனை மன்றத்தலைவர் சத்தியநாராயணாவே தனக்கு நெருக்கமான மாவட்ட நிர்வாகிகளிடம் கூறி எச்சரித்தாராம். இதன் பின்னணியில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றும் சொல்லப்படுகிறது.
பல்வேறு சமயங்களில் ரஜினியை நேரில் சந்தித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக சில மாவட்ட நிர்வாகிகள் ராகவேந்திரா மண்டபத்தில் குவியும்போது, அந்தத் தகவலை ரஜினியிடம் அப்படியே சொல்வாராம் சத்தியநாராயணா.
அப்போதெல்லாம் ரஜினி சற்றுக் கடுமையாகவே, ``எதுக்காக என்னைப் பார்க்கணுமாம்? அங்கே போய் நின்னா, `தலைவா! உங்க கூட நின்னு ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கணும். தலைவா, கட்சியை ஆரம்பி' என்று பக்குவமில்லாமல் குழந்தைத்தனமாக கோஷம் போடுறாங்க. இருபத்தஞ்சு வருடங்களா மாவட்ட நிர்வாகிகளா இருக்கற இவங்களே இப்படிச் செய்தா எப்படி சத்தி? உணர்ச்சிவசப்படக் கூடிய இவங்களை நம்பி நான் எப்படி அரசியலில் இறங்க முடியும்? அவங்க பக்குவப்படட்டும். தங்களை நம்பி எவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைக்கப் போறான் இந்த சிவாஜிராவ் என்பதை முழுமையாக அவர்கள் உணரட்டும். அதுவரை நான் பொறுமையாக இருக்கேன்'' என்பாராம் ரஜினி.
அந்தப் பக்குவம் இப்போது தன் ரசிகர்களுக்கு வந்துவிட்டதாகவும் நம்புகிறாராம் சூப்பர் ஸ்டார்.
`குசேலன்' பட விவகாரம் மீடியாக்களில் பற்றியெரிந்த போது, தனது ரசிகர்கள் காட்டிய அசாத்திய மௌனமும், பொறுமையும் சூப்பர் ஸ்டாரையே கொஞ்சம் மிரட்டி விட்டதாம். அவர்களின் அந்த மௌனமும் பொறுமையும் ரசிகர்களின் பக்குவத்தை மட்டுமல்ல... `தன்னை அரசியலில் இறக்கிவிடாமல் இவர்கள் ஓயவே மாட்டார்கள்' என்பதையும் ரஜினிக்குத் தெளிவாகவே உணர்த்தி விட்டதாம்.
அதன் விளைவுதான் அடுத்தமாதம் சூப்பர் ஸ்டார் அறிவிக்கப் போகும் புது பொது அமைப்பின் தொடக்க விழா அறிவிப்பு என்று அடித்துச் சொல்கிறார்கள்.
அடுத்ததாக ரஜினி டி.வி.! தனது அரசியல் வாழ்க்கைக்கும் சரி, சினிமா வாழ்க்கைக்கும் சரி தனி சேனல் மிகவும் அவசியம் என்று நினைக்கிறாராம் ரஜினி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டு சேனல் தொடங்குவது குதிரைக் கொம்பான விஷயம் என்பதை வைகோ, விஜயகாந்த் ஆகியோர் படும்பாட்டின் மூலம் நன்றாகவே உணர்ந்திருக்கும் ரஜினி, இப்போதே அந்தத் தனி சேனலை தொடங்கும் பணியில் நேரடியாக ஈடுபடப் போகிறாராம்.
மத்தியிலும் மாநிலத்திலும் தனக்கு சுமுகமான சூழல் இருக்கும் போதே சேனல் அனுமதியை வாங்கிவிடுவதில் ரஜினி முனைப்பாக இருப்பதாகவும் கேள்வி.
இதற்காக கலைஞர், ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களை தனது பொது அமைப்பு அறிவிப்புக்குப் பிறகு சந்திக்க முடிவு செய்திருக்கிறாராம் ரஜினி.
ஹாலிவுட் சினிமா பட நிறுவனமான வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து ரஜினி மகள் சௌந்தர்யா, தொடர்ந்து தமிழ்ப்படங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
நிர்வாக மேலாண்மையில் தன் மனைவி லதாவையே விஞ்சிய தன் அன்பு மகள் சௌந்தர்யாவிடமே ரஜினி டி.வி. நிர்வாகத்தையும் ஒப்படைக்கப் போகிறாராம் சூப்பர் ஸ்டார்.
தான் முழுமையாக அரசியலில் ஈடுபடுவதை இன்னும் சில வருடங்கள் தள்ளி வைத்துவிட்ட ரஜினி, அதுவரை சேனலில் புது அமைப்பு குறித்த செய்திகளையும் செயல்பாடுகளையும் ஒளிபரப்புச் செய்து அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் திட்டமிட்டிருக்கிறாராம்.தவிர, சௌந்தர்யா தனது படத் தயாரிப்பு குறித்த விஷயங்களையும் தான் தயாரிக்கும் படங்களைப் பற்றியும், தனது அப்பா நடித்து சூப்பர் ஹிட்டான படங்களையும் ரஜினி டி.வி.யின் நிகழ்ச்சிகளாக ஒளிபரப்ப இருக்கிறாராம்.
மேற்கண்ட தகவல்களையெல்லாம் உறுதிப்படுத்திக் கொண்ட மாவட்ட நிர்வாகிகள், குஷியோடு ரஜினி தங்களைச் சந்திக்கும் அந்தத் திருநாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
3 கருத்துகள்:
super news , by raja..kwt
எழுதிகொடுத்த வசனங்களை பேசி கைதட்டல் பெறுவது மிகவும் எளிது அவ்வாறு பேசி மற்றும் நடித்து புகழ் பெற்ற சிவாஜி கணேசன் அரசியலில் புகுந்து கடுமையாக உழைத்தும் தோல்வியைத்தான் தழுவினார்..மக்களை சந்திக்க அஞ்சும் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலை விட்டு இப்போது இருக்கும் நல்ல பெயரோடு விலகிவிடுவது நல்லது. அல்லது துணிந்து இன்னும் காலம் தாழ்த்தாமல் தன் கருத்தை தெரிவித்து இந்த பிரச்சினைக்கு முடிவு காண வேண்டும்.தற்போது விஜயகாந்த் அரசியலில் நுழைந்து பல சவால்களை தைரியத்துடன் சமாளிக்க தொடங்கிவிட்டார்.அவர் அரசியலில் ஒரு இடத்தை பிடித்துவிட்டால் ரஜினியிடம் உள்ள கூட்டம் அப்படியே அவர் அணிக்கு தாவிவிடும் என்பது நிச்சயம்.ரஜினி ரசிகர் மன்ற தலைமை செயலருக்கே ரஜினியின் செயல்பாடுகள் புரியவில்லை. மக்களை சந்திக்க மறுக்கும் அவர் போக்கு அவர் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திவிடும்.அவருக்கும் ரசிகர்களுக்கும் உள்ள இடைவெளி அவருக்கு நல்லதல்ல. அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் .
"எழுதிகொடுத்த வசனங்களை பேசி கைதட்டல் பெறுவது மிகவும் எளிது ".
மிக சரியான கருத்து இது.நம் மக்கள் நிஜத்திற்கும் பொய்க்கும் வித்தியாசம் தெரியாமல் ..கண்மூடி எல்லாவற்றையும் நம்பூம்வரை இது போன்ற குழப்பங்களும் கேளிகூதுக்களும் நடக்கவே செய்யும்.நன்றி தங்கள் கருத்திற்கு
கருத்துரையிடுக