குவைத் மிகச்சிறிய மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்று. எண்ணெய் (பெட்ரோலியம்) வளத்தையே ஆதாரமாக கொண்ட செல்வச் செழிப்பான நாடு. இதன் தெற்கில் சவுதி அரேபியாவும் வடக்கிலும் மேற்கிலும் ஈராக்க்கும் அமைந்துள்ளன.
2007 இல் இந்நாட்டின் மக்கட்தொகை 3 தொடக்கம் 3.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஏறத்தாள 2 மில்லியன் பேர் வெளிநாட்டினர். உலகின் பணக்கார நாடான குவைத்துக்கும், பிற எண்ணைவள வளைகுடா நாடுகளுக்கும், இருண்ட பக்கம் ஒன்றுண்டு. ஆடம்பர மாளிகைகள், வானுயர்ந்த கோபுரங்கள் யாவும் பல்லாயிரக்கணக்கான அடிமைத் தொழிலாளர்களின் உழைப்பில் உருவானவை. இவற்றை நிர்மாணிக்கும் நிறுவனங்கள் பல ஆளும் மன்னர்/ஷேக் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானவை. குவைத்தின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகை வெளிநாட்டவர்களை கொண்டிருக்கும் பட்சத்தில், தனியார் நிறுவனங்களின் 98% மனிதவளம் வெளிநாட்டு தொழிலாளரைக் கொண்டிருப்பது அதிசயமல்ல. இவர்களிலே படித்த, தொழில் தகமையுடைய சிறு பிரிவு மட்டுமே அதிக சம்பளம் (அதுவும் குவைத் பிரசையை விட குறைவு) பெறுகின்றனர்.
அதற்கு மாறாக பெரும்பான்மையான கட்டட நிர்மாண, துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், மிக குறைந்த சம்பளத்தை (அதிகபட்சம் 100 டொலர்கள்) பெற்று, நகரத்திற்கு ஒதுக்குப்புறமான பாலைவனங்களில் அமைந்த வசதியற்ற தொழிலாளர் குடியிருப்புகளில், ஒரு அறைக்குள் குறைந்தது ஆறு பேர் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. சில கம்பனிகள் சம்பளத்தை மாதக்கணக்காக கொடுப்பதில்லை. குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. குவைத்தில் உள்ள நிறுவனமொன்று தனது பங்களாதேஷ் தொழிலாளருக்கு மாதக்கணக்காக சம்பளம் கொடுக்காத பிரச்சினை, நாடளாவிய ஆசிய தொழிலாளர் எழுச்சிக்கும், மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கும் வழிவகுத்தது. சர்வாதிகார ஆட்சி நடக்கும் குவைத்தில், வேலை நிறுத்தம் செய்வதோ, தொழிற்சங்கம் அமைப்பதோ, சம்பள உயர்வு கேட்பதோ சட்டவிரோதம். இருப்பினும் தன்னெழுச்சியாக தொடங்கிய பங்களாதேஷ் தொழிலாளர்களின் போராட்டம், போலிஸ் அடக்குமுறைக்குல்ளானது. நகரின் முக்கிய வீதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட வேலைநிறுத்தக்காரரை கலைந்து செல்ல வைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசி, தடியடிப்பிரயோகம் செய்ததால், தொழிலாளரும் எதிர் வன்முறையில் ஈடுபட்டனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரியூட்டப்பட்டன. சம்பத்தப்பட்ட நிறுவனத்தின் முகவர்கள் சமாதானமாக போகும்படி கூறி, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது தாக்கப்பட்டனர். கூட்டத்தை கலைத்த போலிசால், அந்த இடத்திலேயே 250 பேர் கைது செய்யப்படனர். தொடர்ந்த போலிஸ் தேடுதல் வேட்டையில் ஆயிரத்துக்கும் குறையாத பங்களாதேஷ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக தனியான விமானத்தில் நாடுகடத்தப்பட்டனர்.
குவைத் போன்ற வளைகுடா நாடுகளில், தெற்காசிய தொளிலாளர்கள் ஈவிரக்கமற்று சுரண்டப்படுவதும், அவர்களின் அவல வாழ்வும் ஏற்கனவே உலகிற்கு தெரிந்த செய்திகள் தான். ஆனால் அடங்கிக்கிடந்த தொழிலாளர் மனங்களில் அநீதிக்கு எதிரான உணர்வு நீறுபூத்த நெருப்பாக இவ்வளவு காலமும் உறங்கிக் கிடந்தது. இதுவரை இல்லாதவாறு இப்போது மட்டும் தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டங்களில் இறங்குவதற்கு, சில உலக பொருளாதார மாற்றங்கள் முக்கிய காரணமாகும். அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், அரிசியின் விலையும் இரண்டு மடங்காகியுள்ளது. பங்களாதேஷ் மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவு. மேலும் அமெரிக்க டாலரின் பெறுமதி இறங்கி வருவதால், அதனோடு தொடர்புடைய குவைத் டினாரின் பெறுமதியும் வீழ்ந்துள்ளது. இதனால் தமது அற்ப சம்பளம்(75 டாலர்) என்றுமில்லாதவாறு வயிற்றுப்பாட்டிற்கே போதாது என்ற நிலை ஏற்பட்ட போது தான் மேற்குறிப்பிட்ட தொழிலாளரின் தன்னெழுச்சி ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக குவைத் அரசாங்கம், குறைந்தபட்ச சம்பளம் 150 டாலர்களாக உயர்த்துவதாகவும், இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்கள் தண்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
1 கருத்து:
பத்தி பத்தியாக பிரித்து எழுதினால் படிப்பதக்கு வசதியாக இருக்கும்.
ஒரே பத்தியில் எழுவது படிக்க சலிப்பை தருகிறது. இது என் பணிவான வேண்டுகோள்
கருத்துரையிடுக